Published:Updated:

புதுச்சேரியில் 778 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கை ரத்து – இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு

ஜெ.முருகன்
புதுச்சேரியில் 778 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கை ரத்து – இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு
புதுச்சேரியில் 778 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கை ரத்து – இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு முறைகேடாக சேர்க்கப்பட்ட 778 மாணவர்களை வெளியேற்றும்படி இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் நான்கு நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்கள், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2016-17 கல்வியாண்டில் இக்கல்லூரிகளில் மொத்தம் 1,050 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன. தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த ஆண்டு மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்காக நீட் தேர்விலிருந்து புதுச்சேரி அரசு விலக்கு பெற்றிருந்தது. அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்ட 283 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டும் +2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டது.

ஆனால், தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்த 778 இடங்களை ’நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் செண்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பாததுடன், மாணவர் சேர்க்கை 30.01.2016-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் உத்தரவையும் மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விதிமீறல்களைத் தகுந்த ஆதாரத்துடன் புதுச்சேரி மாணவர்-பெற்றோர் சங்கங்கள் சார்பில் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குப் புகாராக அனுப்பப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மருத்துவ கவுன்சில் கடந்த 7-ம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்ததோடு அதை புதுச்சேரியின் தலைமைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநருக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அந்த உத்தரவில், “2016-17 கல்வி ஆண்டில் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படாமலும் 30.9.2016 தேதிக்குப் பிறகும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை இரண்டு வார காலத்துக்குள் வெளியேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் இதேபோல் முதுநிலை மருத்துவப் படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 95 மணவர்களை வெளியேற்றச் சொல்லி இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் மருத்துவக் கவுன்சிலின் இந்த அறிவிப்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளை கதிகலங்கச் செய்திருக்கிறது.