Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெர்மினேட்டர் தெரியும்... இந்த 23 சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களின் கதை தெரியுமா?

அறிவியல் பேசும் சயின்ஸ் ஃபிக்ஷன் வகை தமிழ்ப் படங்கள் குறைவுதான் என்றாலும், ஹாலிவுட்டில் வருடத்திற்கு 10 படங்களாவது வந்து விடுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதிரி புதிரி ஹிட்டடித்த டெர்மினேட்டர், மேட்ரிக்ஸ், ஜுராசிக் பார்க் படங்களைத் தமிழில் ரசித்த நாம், 21ஆம் நூற்றாண்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, திரும்பத் திரும்பப் பார்க்க வைத்த நிறையப் படங்களை மிஸ் செய்திருப்போம். சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலே சாகச படங்கள் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கற்பனையும் தாண்டி, நிஜத்தோடு ஒத்துப்போகும் பல அறிவியல் அம்சங்களைக் கொண்டு படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல கல்லாவை நிரப்பியிருக்கின்றன, மக்களின் மனத்தையும் கொள்ளை கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த அவதார், ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக் தாண்டி, 21ஆம் நூற்றாண்டில் அறிவியலைக் கருவாகக் கொண்டு சாதித்த படங்களின் பட்டியல்தான் இது.

Another Earth (2011)

கரு: பல அண்டக் கோட்பாடு

ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் - Another Earth (2011)

பூமியைப் போன்றே அச்சு அசலாகக் கிரகம் ஒன்று நமக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்படுகிறது. அது ஓர் இளம் பெண் மற்றும் ஓர் இசையமைப்பாளரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.

Coherence (2013)

கரு: குவாண்டம் இயற்பியல்/Schrödinger's Cat

Coherence (2013)

நண்பர்கள் குழு ஒன்று மாலை நேரப் பொழுதை மது மற்றும் உணவுடன் கொண்டாடி மகிழ்கிறது. அப்போது, வானில் ஒரு வால் நட்சத்திரம் தோன்ற, யாரும் எதிர்பாராத வித்தியாசமான சம்பவங்கள் பல நடைபெறுகின்றன.

Cloverfield (2008)

கரு: நிலநடுக்கம்/துரத்தும் அசுரன்

Cloverfield (2008)

நண்பர்கள் குழு ஒன்று துரத்தும் அசுரனிடமிருந்து தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள நியூயார்க் நகரம் முழுவதும் ஓடுகிறார்கள். பிழைத்தார்களா, நிலநடுக்கம் ஏற்படுத்தும் அந்த அசுர மிருகம் அழிந்ததா?

The Martian (2015)

கரு: விண்வெளிப் பயணம்

The Martian (2015)

வானவியல் நிபுணரான மார்க் வாட்னே செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொள்கிறான். அறிவியல் யுக்திகளைப் பயன்படுத்தி, அவனை மெலிசா லெவிஸ் மற்றும் அவரது குழு எப்படிக் காப்பாற்றுகிறது என்பதே கதை.

Signs (2002)

கரு: ஏலியன்ஸ் வருகை

Signs (2002)

சொந்தமாகப் பண்ணை ஒன்றை வைத்திருக்கும் குடும்பம் அது. திடீரெனப் பண்ணையில் வித்தியாசமான அறிகுறிகள் தோன்றுகின்றன. அழையா விருந்தாளியாக வருகின்றன ஏலியன்கள்.

The Mist (2007)

கரு: வினோத மிருகங்களின் வேட்டை

The Mist (2007)

பனிப்போர்வையில் வினோத மிருகங்கள் மறைந்து வந்து மக்களை வேட்டையாடுகிறது. ஒரு சிலர் ஊருக்குள் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தஞ்சம் புகுந்து தப்பித்தார்களா அவர்கள்?

The Prestige (2006)

கரு: மேஜிக்கிற்கு பின்னால் மறைந்திருக்கும் அறிவியல்

The Prestige (2006)

புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் ஒருவரின் இரண்டு சிஷ்யர்கள் தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று போட்டி போட்டு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயார். முடிவில் யார் வென்றார்?

A.I: Artificial Intelligence (2001)

கரு: ரோபோட் சிறுவன்

A.I: Artificial Intelligence (2001)

பாசத்தின் சுவையை ருசித்து விட்ட ரோபோட் சிறுவன் ஒருவன், தான் மனிதனானால் தன் தாயின் அன்பு மீண்டும் தனக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறான். ரோபோட்கள் சூழ் உலகில் அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள்தான் கதை.

Interstellar (2013)

கரு: அண்டம் விட்டு அண்டம் பாயும் விண்வெளிப் பயணம்

Interstellar (2013)

மனித இனத்தைக் காப்பதற்காக, வாழ்வாதாரம் தேடி அண்டம் விட்டு அண்டம் வேறு கிரகங்களுக்குச் செல்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று. வார்ம்ஹோல் மற்றும் கருந்துளை தாண்டிய பயணம் வெற்றியைத் தேடி தந்ததா?

Edge Of Tomorrow (2014)  

கரு: சாவை வெல்லும் அறிவியல்

Edge Of Tomorrow (2014)

ஏலியன்களை எதிர்த்துப் போராடும் இராணுவ வீரன் ஒருவனுக்கு, ஒவ்வொரு முறை அவன் இறக்கும் போதும், மீண்டும் முதலிலிருந்து அந்த நாளைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி ஏலியன்களை வீழ்த்தினானா?

Sunshine (2007)  

கரு: அழிவின் விளிம்பில் சூரியன்

Sunshine (2007)

2057ஆம் ஆண்டில், சூரியன் அழியும் தருவாயில் இருக்கிறது. சர்வதேச விண்வெளி வீரர்கள் குழு ஒன்று அணுக்கருப் பிளவு குண்டு ஒன்றை வைத்து சூரியனுக்கு ஒளியூட்டும் முயற்சியில் களம் இறங்குகிறது. வெற்றி கிட்டியதா?

Donnie Darko (2001)

கரு: துரத்தும் மாயத்தோற்றங்கள்

Donnie Darko (2001)

பதின்வயது சிறுவன் ஒருவனைத் துரத்துகிறது முயல் வடிவில் மாயத்தோற்றங்கள். விபத்து ஒன்று ஏற்படுகிறது. அதை நிகழ்த்தியது யார், அதிலிருந்து இவன் தப்பித்தானா? உண்மையில் அந்த முயல் வடிவ மனிதன் இருக்கிறானா?

Ex Machina (2014)

கரு: உயிர்பெறும் செயற்கை நுண்ணறிவு

Ex Machina (2014)

இளம் புரோகிராமர் ஒருவருக்கு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு பெண் ரோபோவை சோதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த ரோபோ ஆபத்தானதா? இவன் என்ன செய்தான்?

Minority Report (2002)

கரு: எதிர்காலம் அறியும் திறன்

Minority Report (2002)

எதிர்காலத்தில் என்ன குற்றம் நடக்கப்போகிறது என்பதை முன்னரே அறிந்து தடுக்கிறது குழு ஒன்று. அதிலிருக்கும் அதிகாரி ஒருவரே அடுத்த கொலையை செய்யப்போகிறார் என்று தகவல் கிடைக்கிறது. இதை எப்படித் தடுப்பார்கள்?

Looper (2012)

கரு: டைம் ட்ராவல் செய்து கணக்கை முடிப்போம்

Looper (2012)

2074ஆம் ஆண்டு ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றால், அவனை இறந்த காலத்திற்கு அனுப்புவார்கள். அங்கே அவனைக் கொல்ல ஒரு கூலிப்படைக்காரன் தயாராக இருப்பான். ஜான் என்ற கூலிப்படைக்காரன் ஒருவனுக்கு அப்படி எதிர்காலத்தில் இருந்து வரும் அசைன்மென்ட் அவனாகவே இருந்தால்?

Gravity (2013)

கரு: விண்வெளியில் விபத்து

Gravity (2013)

சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பழுது பார்க்கும் போது விபத்து ஒன்று நிகழ்ந்து விடுகிறது. தப்பிப் பிழைத்து விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் அந்தப் பெண், பல போராட்டங்கள் தாண்டி பூமி வந்து சேர்ந்தாளா?

Inception (2010)

கரு: கனவுக்குள் கனவு

Inception (2010)

மற்றவர் கனவுக்குள் உங்களால் ஊடுருவ முடிந்தால்? அதன் மூலம் அவர்கள் மனதில் ஓர் அழியா எண்ணத்தை விதைக்க முடிந்தால்? மனமாற்றம் செய்ய முடிந்தால்? ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே? இங்கே என்ன சிக்கல்?

District 9 (2009)

கரு: ஏலியன்களின் கூடாரம்

District 9 (2009)

பூமியில் தங்கிவிட்ட ஒரு வேற்றுலக இனத்தைத் துரத்தும் முயற்சி நடக்கிறது. அதை நிறைவேற்ற வரும் அதிகாரி ஒருவர் இப்போது அந்த ஏலியன்களின் உதவியால் உயிர் வாழ வேண்டிய நிலை. தப்பித்தாரா? ஏலியன்கள் சென்றதா?

Primer (2004)

கரு: கால விளையாட்டு

Primer (2004)

நான்கு இளைஞர்கள் கார் கேரேஜ் ஒன்றில் எலக்ட்ரானிக் சாதனங்களைத் தயார் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவை பல விந்தைகளை நிகழ்த்தும் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

Source Code (2011)

கரு: விதியை மாற்றும் அறிவியல்

Source Code (2011)

ஓடும் ரயிலில் குண்டுவெடிப்பு நடக்கிறது. நவீன உபகரணங்களுடன் குண்டுவெடிப்புக்கு 8 நிமிடங்கள் முன்னர் சென்று குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஓர் இராணுவ வீரனைத் தயார் செய்கிறார்கள். கண்டுபிடிக்க முடிந்ததா?

Her (2013)

கரு: கணினி காதல்

Her (2013)

தனிமை வாட்டியெடுக்கும் எழுத்தாளர் ஒருவன், கணினியைச் செயல்படுத்தும் மென்பொருள் ஒன்றின் மேல் காதல் கொள்கிறான். பெண் குரலில் வசீகரிக்கும் அதன் வேலையே இப்படிப்பட்ட மனிதர்களுக்கு உற்றதுணையாக செயல்படுவதுதான். இதனால் ஏற்படும் சிக்கல்கள் தான் கதை.

Eternal Sunshine Of The Spotless Mind (2004)

கரு: அழிக்க முடியாத நினைவுகள்

Eternal Sunshine Of The Spotless Mind (2004)

காதல் ஜோடி ஒன்று மனஸ்தாபம் காரணமாகப் பிரிகிறார்கள். காதல் நினைவுகளை அறிவியல் கொண்டு அழித்து விடுகிறார்கள். யாரென்று தெரியாமல் மீண்டும் சந்திக்கும் போது காதல் மீண்டும் பூக்கிறது. இந்தக் காதலாவது வென்றதா?

Children of Men (2006)

கரு: அழியத் தொடங்கும் மனித இனம்

Children of Men (2006)

2027ல் மொத்த மனித இனமும் மலடாகி விடுகிறது. பரபரப்பான கலவர சூழலில் ஒரு பெண் கற்பமாகிறாள். அவரைப் பாதுகாப்பாக ஒரு சரணாலயத்திற்கு கொண்டுசெல்ல பொறுப்பேற்கிறான் முன்னாள் சமூகப் போராளி ஒருவன். குழந்தை பிறந்ததா? மனித இனம் தழைத்ததா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement