Published:Updated:

கன்னியாகுமரியில் இன்று சஜாக் ஆபரேஷன்..! கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்ட கடலோரப் படை

கன்னியாகுமரியில் இன்று சஜாக் ஆபரேஷன்..! கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்ட கடலோரப் படை
கன்னியாகுமரியில் இன்று சஜாக் ஆபரேஷன்..! கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்ட கடலோரப் படை

கடலோரப் பாதுகாப்புப் படையினர் இந்தியக் கடல் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் கடலோரப் பாதுகாப்புப் படையினர், இந்தியக் கடல் பகுதிகளை அதிநவீன படகுகள் மூலம் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன் நடந்தது.

சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீஸார், அதி நவீன ரோந்து படகில் சென்று பைனாக்குலர்கள் மூலம் கண்காணித்தும் சஜாக் ஆபரேஷனை நடத்தினார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் கூடங்குளம் வரையிலான பகுதி வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமும் அடையாள அட்டை சோதனையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியாக ஏதாவது படகுகள், கப்பல்கள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இதுபோல் கடலோர சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சின்ன முட்டம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், பஞ்சலிங்கபுரம் உள்ளிட்ட கடலோரப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான 11 சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனத்தையும் போலீஸார் சோதனை செய்த பின்புதான் அனுப்பினர். மணலில் ஓடும் அதி நவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் குமரி மாவட்டத்தின் மீனவக் கிராமங்களும் பதற்றமாக உள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய சஜாக் ஆபரேஷன் மாலை 5 மணிக்கு முடிந்தது.