Published:Updated:

தேனி மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

எம்.கணேஷ்
தேனி மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
தேனி மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகிலுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் ஆகிய இடங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணையின் முழுக்கொள்ளளவான 126 அடிக்கு 121 அடி நீர் தற்போது இருக்கிறது. அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 53 கன அடியாக இருப்பதாலும், இந்த நீர் வரத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாலுமே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மஞ்சளாறு அணையின் மொத்தக் கொள்ளளவான 57 அடியில் தற்போதைய நீர் மட்டம் 52.50 அடியை எட்டியுள்ளதால் மஞ்சளாறு பாசனப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தேனி மாவட்டத்தில் தொடர் மழைப் பொழிவு இருந்துவருவதால் அணைகளின் நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மழை இல்லாத கடந்த காலங்களில் அணைகளை முறையாகத் தூர்வாரியிருந்தால் இன்னும் அதிகமான நீரைத் தேக்கியிருக்கலாம் என்பது விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.