Published:Updated:

டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை!

டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை!
டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை!

குல்ஃபி என்ற பெயரைக் கேட்ட உடனே, உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? மொபைல் ரிங் சத்தத்தைவிட, காலிங்பெல் சத்தத்தை விட, டிங், டிங், டிங் என்று அடிக்கும் குல்ஃபி விற்பவர் எழுப்பும் சத்தத்துக்குக் காத்திருந்து சந்தோஷப்படுபவரா நீங்கள்? அப்ப, சியர்ஸ் போடுங்க... குல்ஃபி ஆர்மியில் இருக்கும் கோடானு கோடிப் பேரில் அடியேனும் ஒருவன். இளையராஜாவுக்கு அடுத்ததாக, என் இரவுகளை இனிமைப்படுத்தியது இந்த குல்ஃபி-க்கள்தான்.

ஒவ்வொரு முறை குல்ஃபி சாப்பிடும்போதும், சொர்க்கத்தின் வாசலை எட்டிப்பார்த்துவிட்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் அந்த குல்ஃபி விற்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி, என் மெடுலா ஆப்லகெட்டாவில் நீண்ட நாள்களாக தட்டிக்கொண்டே இருந்தது. சரி, இந்தக் கேள்விக்கு விடை தேட, பைக்கை எடுத்து மெரினாவை நோக்கிக் கிளம்பினோம்.

அகன்று விரிந்த வாலாஜா சாலையின் ஓரமாக குல்ஃபி விற்பவர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை அலேக்காகப் பிடித்து பேசத்தொடங்கினோம். நாம் முதலில் பேசியவர், இம்ரான். இவர், இரண்டாவது தலைமுறையாக குல்ஃபி விற்பனை செய்கிறார். இவரது தந்தை, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் குல்ஃபி விற்றவர். இரண்டாவது தலைமுறையாக குல்ஃபி வியாபாரத்தில் இறங்கியுள்ள இம்ரான், நான்கு குல்ஃபி வண்டிகளுக்குச் சொந்தக்காரர். 

இம்ரானிடம் பேசினோம், "புளியந்தோப்புல இருந்து வரேன் சார். 15 வருஷமா இதுதான் பொழப்பு. அப்பாகிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். கொஞ்சநாள்ல அப்பா இறந்துட்டாரு. அப்பறம் நானே முழுசா இறங்கிட்டேன். குல்ஃபி விக்கிறது நைட் டைமா இருந்தாலும், காலைல 8 மணில இருந்தே எங்களுக்கு வேலை ஆரம்பிச்சுரும். பாலை சுண்ட வெச்சு, தண்ணீரைக் கலக்கி, அதை ஐஸ் ஆக்கறதுக்கு எப்படியும் மதியம் 1 மணி ஆய்டும். 

அதுக்கப்பறம், சாய்ங்காலம் 7 மணிக்கு சைக்கிள் எடுத்துட்டு வியாபாரத்துகுப் போவோம். எங்களுக்குள்ளயே ஏரியா பிரிச்சுப்போம். நைட்டு 1.30 மணிக்கு ஏரியா முடிச்சுட்டு, இங்க வந்து கணக்குப் பார்ப்போம். வீட்டுக்குப் போய் தூங்க 3 மணி ஆய்டும். ஒரு நாள் நல்லா வியாபாரம் ஆவும். ஒரு நாள் சுத்தமா வியாபாரம் ஆவாது. மழை வந்தா ரொம்ப கஷ்டம். சில பேரு மழை டைம்ல வாங்கண்ணு சொல்வாங்க. ஆனா, அப்ப வியாபாரம் பண்றதுல சிக்கல் இருக்குது. வெள்ளம் வந்தப்ப எல்லாம் சுத்தமா வியாபாரமே இல்ல. சராசரியா ஒரு நாளைக்கு 300 ரூபா லாபம் கிடைக்கும். வேலைக்கு வரவங்களுக்கு கமிஷன் அடிப்படைல காசு கிடைக்கும்.

பாதாம், பிஸ்தா, சாக்லேட்னு 5, 6 ஃப்ளேவர் விற்போம். ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய இருக்காங்க. அவங்க டீசன்ட்டா காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவாங்க. ஆனா, எல்லா ஏரியாலயுமே ரவுடிங்க தொல்லையும் இருக்கு. கத்தியக் காட்டி, மிரட்டி குல்ஃபி வாங்குவாங்க. சிலர் அடிச்சும் குல்ஃபி வாங்குவாங்க. சிலர், டேய் நாளைக்கு வந்து காசு வாங்கிக்கோன்னு சொல்லி மிரட்டுவாங்க. ஒருசிலர், பைக்ல இருந்து இறங்காமயே குல்ஃபி கேட்பாங்க. குல்ஃபி கொடுத்தா, திரும்பி காசு கொடுக்காம அப்டியே பைக்ல சல்லுனு பறந்துருவாங்க. எப்டியும் ஒரு நாளைக்கு 50 ரூபாக்கு மேல இப்படி நட்டம் ஆகும். அதுவும் இந்த சனி, ஞாயிறு வந்தா எங்க பாடு ரொம்பவே திண்டாட்டம்தான். சனி, ஞாயிறுல குறைஞ்சது 300 ரூபா நட்டம் ஆகும்

ஜனவரி மாசம் நல்ல சீசன். அப்போ, நல்லா வியாபாரம் ஆகும். ஆனா, இந்த ஆகஸ்ட் செப்டம்பர்ல வியாபாரம் கொஞ்சம் டல்லாதான் இருக்கும். சீசன் டைம்ல வட நாட்டுக்காரங்க தொல்லை வேற. அவங்க கரெக்டா இந்த சீசன் டைம்லதான் குல்ஃபி விற்க வருவாங்க. நம்ம செய்யற அளவுக்கு குவாலிட்டியும், டேஸ்ட்டும் அவங்கக்கிட்ட வராது. நம்மளவிட குறைஞ்ச காசுக்கு வித்துட்டு காசு பார்த்துடுவாங்க. அதனாலயும் நம்ம பொழப்பு அடிவாங்கும்" என்று முடித்தார்.

இம்ரானிடம் வேலை செய்யும் இக்பால், "இந்த போலீஸ்காரங்கதான் சார் எங்களுக்குப் பாதுகாப்பே. ஆனா, ரவுடிங்க பிரச்னை பண்ற இடத்துல அவங்க அதிகமா இருக்க மாட்டாங்க. போன மாசம் கூட நாலு ரவுடிங்க வந்து காசு கொடுக்காம குல்ஃபி கேட்டாங்க. நா இன்னும் போனி ஆகலைணு சொன்னேன். அதுக்கு என்னை அடுச்சுட்டாங்க. நிறைய போலீஸ்காரங்க காசு கொடுத்து குல்ஃபி வாங்குவாங்க. ஆனா, சில போலீஸ்காரங்க காசு கொடுக்க மாட்டாங்க.  

மெரினால வியாபாரம் பண்றப்ப சில நேரம் பிரச்னை வரும். அங்க இருக்கிற வியாபாரிங்க சிலர், இங்க வியாபாரம் பார்க்ணும்ணா, சங்கத்துல ரிஜிஸ்டர் பண்ணணும்னு சொல்லி, குல்ஃபி டப்பால மண் அள்ளிப் போட்டுருவாங்க. இத்தனையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் வியாபாரம் நடத்தறோம்" என்று விரக்தியாகச் சொன்னார்.

ஆண்களை விட பெண்களே, அதுவும் திருமணம் ஆன பெண்கள் குல்ஃபிக்கு முரட்டு ரசிகர்கள் என்ற ரகசியத்தையும் அவர்கள் நம்மிடம் உடைத்தனர். இவர்களிடம் பேசியதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. இவர்களது வாழ்க்கை குல்ஃபியைப் போல இனிமையான ஒன்று இல்லை. அதில், கசப்புகளே அதிகம் உள்ளன.