Published:Updated:

கே.பி. டைரக்டர்ஸ் டச்

எஸ்.கலீல்ராஜா, ம.கா.செந்தில் குமார்

கே.பி. டைரக்டர்ஸ் டச்

எஸ்.கலீல்ராஜா, ம.கா.செந்தில் குமார்

Published:Updated:

கே.பாலசந்தர்... 'இயக்குநர் சிகரம்’! முதல் முயற்சி யில் இருந்தே காலம் கடந்த கலைஞனை, காலம் கடத்திக்கொண்டு சென்றுவிட்டது! 

தமிழ் சினிமாவின் மூத்த முன்னோடியைப் பற்றிய நினைவுகள் இங்கே...  

பாரதிராஜா: ''சினிமா இண்டஸ்ட்ரியில பாலசந்தர்கிட்டே நெருங்கிப் பேசுறதுக்கே எல்லோரும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.பி. டைரக்டர்ஸ் டச்

பயப்படுவாங்க. வாடிகன் போப் மாதிரி அவரை உயரத்துல உட்காரவெச்சு அண்ணாந்து பார்ப்பாங்க. நான் அவரோட அப்படிப் பழக மாட்டேன். 'யோவ்...        நீ போப் எல்லாம் கிடையாது. எங்க தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில் பூசாரி. அதனால உன்கிட்ட உரிமையாத்தான் பேசுவேன்’னு செல்லமா சண்டை பிடிப்பேன். பாலசந்தர் என்கிற 'பா’ வரிசையில் பாலுமகேந்திரா அப்புறம் பாரதிராஜானு எழுதினாங்க. இப்போ மூணு 'பா’வுல ரெண்டு 'பா’ போயிருச்சு; ஒரு 'பா’ மட்டும்தான் உசுரோடு இருக்கு. பெசன்ட் நகர் மயானத்துல பாலசந்தர் உடம்பைக் கிடத்திவெச்சிருந்தாங்க. அவன் காதுல, 'உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதுக்காக ஆசைப்பட்டு அவசரப்பட்டுக் கூப்பிட்டுடாதே. பாலுமகேந்திரா விட்டதை, நீ செய்ய நினைச்சதை, நான் செஞ்சிட்டு வர்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு’னு சொல்லிட்டு வந்தேன்!''

இயக்குநர் வஸந்த்: ''கடலூரில் நான் ஒண்ணாம் கிளாஸ் படிக்கும்போது, விடுமுறையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போ ஒரு ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க என்னைக் கூட்டிப்போனார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் பாலசந்தர் சார். ஷூட்டிங் பிரேக்கில் அவருடன் என் உறவினர்கள் சேர்ந்துநின்று போட்டோ எடுத்தபோது, சிறுவன் என என்னை விட்டுவிட்டார்கள். அதைக் கவனித்த பாலசந்தர் சார் 'அவன் என்ன பாவம் பண்ணினான்?’ எனக் கூப்பிட்டு என் கையைப் பிடித்து, தன் பக்கத்தில் நிற்கவைத்துக்கொண்டார். அன்று பிடித்த கையின் பந்தம், அவருடைய கடைசி மூச்சுவரை எனக்குக் கிடைத்தது. கற்றுக்கொடுப்பதில் அவர் கறார் ஆசிரியர்; தட்டிக்கொடுப்பதில் நல்ல நண்பன். நான் எடுத்த 'தக்கையின் மீது நான்கு கண்கள்’ தேசிய விருது பெற்ற படம். அது தாத்தாவுக்கும் பேரனுக்குமான கதை. தன்னைவிட தன் பேரன் புத்திசாலித்தனமா மீன் பிடிக்கிறானே என்பதைப் பொறுக்க முடியாமல் அவன் கன்னத்தில் தாத்தா அறைந்துவிடுவார். அந்தப் படத்தைப் பார்த்த கே.பி சார், 'அந்தத் தாத்தாவோட பொசிஷன்லதான்டா நானும் இருக்கேன். உன்னோட 'கேளடி கண்மணி’, 'ஆசை’, 'ரிதம்’ பார்த்தப்ப உன்னை அறையலை. அவ்வளவுதான்’ என்றார். இப்படிப் பாராட்டுவதில் வஞ்சனை வைக்க மாட்டார். சா.கந்தசாமியின் 'விசாரணை கமிஷன்’ நாவலை சாகித்ய அகாடமிக்காக எடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மணிரத்னம், பாலுமகேந்திரா இருவரும் நிறையப் பாராட்டினார்கள். ஆனால் இவரோ, 'அந்த ரோலிங் டைட்டில்ல சற்க்குணம்னு போட்டிருக்க. அந்த 'க்’ வராதுடா’ என்றார். குற்றம் குறைகளை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது!''

பிரகாஷ் ராஜ்: ''நடிகை கீதா என் தோழி. பாலசந்தரின் 'புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில்  நடித்துக்கொண்டிருந்தார். அவர் மூலமாக பாலசந்தர் சார் ஆபீஸ் வாசலில் போய் நின்றேன். அப்போது எனக்கு தமிழ் தெரியாது. 'ஏதாவது பேசு’ எனச் சொன்னார். கன்னடத்தில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கதையை ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்ததும், என்னை நிமிர்ந்து பார்த்தார். நான் நாடகக்காரன் எனத் தெரிந்ததும் அவர் முகம் மலர்ந்தது. 'நானும் நாடகத்துல இருந்துதான் வர்றேன்’ என சந்தோஷமாகச் சொல்லிட்டுக் கிளம்பிட்டார். அப்போ 'ஜாதி மல்லி’ படம் ஆரம்பிக்க இருந்தது. 'பத்து நாள்ல ஷூட்டிங் இருக்கு. ஆனா, இந்தப் படத்துல ரோல் இல்ல. சார் அப்புறம் கூப்பிடுவாரு’னு சொல்லிட்டாங்க. ஏமாற்றத்துடன் ஊருக்குத் திரும்பினேன்.

கே.பி. டைரக்டர்ஸ் டச்

ஆறு மாசங்கள் கழிச்சு ஒருநாள், 'பாலசந்தர் சார் பேசணுமாம். போன் பக்கத்துல இரு’ என நண்பன் சொன்னான். சில நிமிடங்களில் போன் ஒலித்தது. 'நான் பாலசந்தர் பேசுறேன். எப்போ சென்னைக்கு வர முடியும்?’ எனக் கேட்டார். 'இப்போ கிளம்புறேன் சார்’ எனச் சொல்லிட்டு சென்னைக்கு 42 ரூபாய் ரயில் டிக்கெட் எடுத்தேன். செலவுகள் போக   140 ரூபாய்தான் இருந்தது.

'இன்னும் ரெண்டு மாசங்கள்ல 'டூயட்’ பட ஷூட்டிங். தமிழ் கத்துக்கோ. பிரகாஷ் ராய் சரியா இருக்காது. 'பிரகாஷ் ராஜ்’னு பேரை மாத்திக்கோ’ எனப் பெயர் சூட்டினார். திடீரென ஊரில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாப் போகணும் என்ற நிலை. காலையில் அவர் வீட்டுக்கே போனேன். 'என்ன?’ என்றார். விஷயத்தைச் சொன்னதும், 'பணம் இருக்கா?’னு கேட்டார். எத்தனை முகங்களைப் பார்த்திருப்பார்? 15 ஆயிரம் ரூபாய் எடுத்து நீட்டினார். என் கண்கள் கலங்கிவிட்டன. பிள்ளையின் பசி அறியும் தாயைப்போல இருந்தது அவரின் அந்தப் பரிவு.

'டூயட்’ ஷூட்டிங் ஆரம்பமானது. அவர் பாராட்டுகிற மாதிரி நடித்துவிட வேண்டும் என முடிவுசெய்து, என் சம்பந்தப்பட்ட காட்சிக்கு நடித்துப் பயிற்சி எடுத்தேன். முதல்நாள் ஷூட்டிங். மனம் நடுங்கியது. 'ஆக்ஷன்’ என்ற வார்த்தை ஒலித்தது. சில வரிகள் இல்லாமல், நான் மொத்தக் காட்சியின் வசனங்களையும் நடித்துக் காட்டினேன். 'சபாஷ்’ என்றார். அதுவரை இருந்த வசனங்களை மாற்றி, அங்கேயே புதிதாக எழுதினார். அவர் எழுதி இருந்த வசனத்தின் முதல் வரி இதுதான்... 'நான் சிற்பி; நடிகன்; காற்று நுழையாத இடத்தில்கூட என் புகழ் பரவிக்கிடக்கும்.’

எனக்கு வசனத்தின் அர்த்தம் புரியவில்லை. அவரிடமே கேட்டேன். 'இது வசனம் அல்ல. உன் எதிர்காலம்’ எனச் சொல்லிச் சிரித்தார். என் எதிர்காலத்தை அப்போதே எழுதிய அந்தக் கைகளை, அவரைச் சந்திக்கும்போதெல்லாம் பற்றிக்கொள்வேன். அவர் மரணித்த அன்று, என் எதிர்காலத்தை எழுதிய கைகள் அசைவற்றுக் கிடந்ததைப் பார்க்க மனம் பதறியது. தோள்களில் தன்னைச் சுமந்துதிரிந்த மேய்ப்பனைத் தொலைத்த இந்த ஆடு, இப்போது திகைத்து நிற்கிறது!''

கே.பி. டைரக்டர்ஸ் டச்

சமுத்திரக்கனி: ''பாராட்டு வாங்கிறதைவிட மத்தவங்களைப் பாராட்டுறதில் அதிகம் சந்தோஷப்படுவார் கே.பி சார். பாரதிராஜா சாரின் '16 வயதினிலே’ படத்தைப் பார்த்துட்டு 'என்னைவிட சின்ன வயசு. இல்லேன்னா பாரதிராஜா காலில் விழுந்திருவேன்’ என ஓப்பனாக மேடையில் சொன்னவர். 'ஆட்டோகிராஃப்’ பார்த்துட்டு 'இப்படி ஒரு ஸ்கிரிப்ட் நமக்குத் தோணாமப்போச்சேனு மனசுக்குள்ள வருத்தமா இருக்குடா. ரொம்ப நல்ல படம். சேரன் ஆபீஸுக்கு வண்டியை விடு. நாம நேர்ல போய்ப் பாராட்டுவோம்’னு கிளம்பிட்டார். 'காதல்’ படம் பார்த்துட்டு பாலாஜி சக்திவேலைப் பாராட்டுறதுக்காக அவரோட ஆபீஸுக்கு காரை விடச் சொல்லிட்டார். இவர் அங்க வர்றது தெரிஞ்சு டைரக்டர் ஷங்கர் வந்தார். 'நான் உன்னைப் பார்க்க வரலை. பாலாஜி சக்திவேலைப் பார்க்க வந்திருக்கேன்’னு  சொல்லிட்டு பாலாஜி சக்திவேலைக் கட்டித்தழுவிப் பாராட்டினார். சினிமா மேல் அவருக்கு இருந்த காதல் கடைசி வரை அப்படியே இருந்தது. ஆறு மாசங்களுக்கு முன்னாடி பார்த்தப்பகூட 'ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கேன்... சரியா வருமானு பாரு?’னு புதுப்பட இயக்குநர் மாதிரி ஆர்வமாக் கேட்டார்.

எந்த அளவுக்குப் பாராட்டுவாரோ, அந்த அளவுக்கு போட்டினு வந்துட்டா ஆர்வமா களத்துல இறங்கிருவார். 'சித்தி’ சீரியல் க்ளைமாக்ஸ் நெருங்கிட்டு இருந்த நேரம். தமிழ்நாடே பரபரப்பா இருக்கு. அப்பதான் அவரோட கதையில் நான் 'அண்ணி’ இயக்குவதா கமிட் ஆனேன். கொஞ்ச நாள் ஷூட்டிங் போனதும், 'இப்போ சேனல்ல கொடுத்து 'அண்ணி’யை டெலிகாஸ்ட் பண்ணச் சொல்லு’னு சொன்னார். 'சார்... ஊரே 'சித்தி’ பத்தி பேசிட்டு இருக்கு. கொஞ்ச நாள் ஆகட்டுமே’னு சொன்னேன். 'ஒரு படைப்பாளி தன் படைப்பைப் பண்ணும்போதுதான் பயப்படணும். அப்புறம் தைரியமா சபையில் வெச்சிடணும். மக்கள் பார்த்துப்பாங்க’னு சொன்னார். பத்து எபிசோட் 'அண்ணி’யை யாரும் கண்டுக்கலை. அப்புறம் எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. படைப்பாளிக்குனு  ஒரு கம்பீரம், தைரியம் எப்பவும் இருக்கணும்கிறதை கே.பி சார்தான் உதாரணமா நின்னு எனக்குக் கத்துத்தந்தார்!''

கே.பி. டைரக்டர்ஸ் டச்

சிகரத்தின் சில துளிகள்...

 ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் இவர் பணிபுரிந்தபோது, அங்கு உள்ள ரெக்ரியேஷன் கிளப்பில் அரங்கேற்றிய மேடை நாடகம் 'புஷ்பலதா’. ஒட்டுமொத்த அலுவலகம் முழுவதுமே 'புஷ்பலதா’ என்ற அந்தப் பெண்ணைப் பற்றியே பேசுவார்கள். ஆனால், கடைசிவரை அந்தப் பெண் மேடைக்கு வராமலேயே நாடகத்தை முடித்திருப்பார். அந்த நாடகத்தின் நினைவாகத்தான், தன் மூத்த மகளுக்கு 'புஷ்பா’ எனப் பெயர் வைத்தார்.

'கைலாசம்’ என்கிற தன் தந்தையின் பெயரையே மூத்த மகனுக்குச் சூட்டினார் கே.பி. சின்னத்திரையில் பல புதுமைகளைப் புகுத்திய கைலாசம், உடல்நிலைக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். கைலாசத்தின் இழப்புதான் கே.பி-யை நிலைகுலைய வைத்தது.

 மூன்றாவது பிள்ளை பிரசன்னா, கே.பி-யின் செல்லம். காரணம், அவரது 42-வது வயதில் பிறந்த பிள்ளை. 'அவன் எல்லாத்துலயும் முதல்ல வந்துடுவான்டா. ஒரு முறைகூட அவனுக்கு காலேஜ் ஸீட் வேணும், வேலைக்கு உதவுங்க’னு போய் யார்கிட்டயும் நின்னது இல்லை’ எனப் பெருமைப்படுவாராம். கடந்த மூன்று தீபாவளிகளை கே.பி இவர் வீட்டில்தான் பேரக் குழந்தைகளுடன் கொண்டாடினார்.

கே.பி. டைரக்டர்ஸ் டச்

கறாரான ஆள். எந்தச் சாக்குபோக்கையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு சொன்ன வேலை நடந்திருக்க வேண்டும். தன் வீடு, அலுவலகத்தில்கூட, ஐ’ யம் நாட் இன்ட்ரஸ்ட்டு இன் எக்ஸ்க்யூஸ்’ என எழுதிப்போட்டிருப்பார்.

நகைச்சுவை உணர்வுமிக்கவர். இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவரிடம், 'உடம்பு இப்ப எப்படி இருக்கு? என டாக்டர் கேட்டிருக்கிறார். உடனே இவர், 'நீங்கதான் சொல்லணும்’ எனச் சிரமப்பட்டுச் சிரித்திருக்கிறார்.

'அவர்கள்’, 'அக்னிசாட்சி’... இப்படி தான் இயக்கியதில் பெரிய ஹிட்டடிக்காத படங்கள் மீது கே.பி-க்கு எக்ஸ்ட்ரா வாஞ்சை. பெருமையாகப் பேசுவார். 'சவலப்பிள்ளைக்கு நாம்தானே ஆதரவு’ என்ற எண்ணம் அவருக்கு.

எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது, சுத்தம், நேரம் தவறாமை... இப்படி கே.பி பெர்ஃபெக்ஷன் பிரியர்.  

கே.பி. டைரக்டர்ஸ் டச்

 வீட்டில் இவர் புகைப்படம் தவிர, ஒரு நடிகையின் படம் இருக்கிறது என்றால், அது மர்லின் மன்றோ படம் மட்டுமே! மர்லின் நடித்த 'நயாகரா’ கே.பி-க்கு ரொம்பவே பிடித்த படம்.

வேகம்... கே.பி ஸ்பெஷல்! மதிய லஞ்ச்சைக்கூட கோழி கொத்துவதைப்போல சாப்பிடுவாராம். பிறகு அரை மணிநேரத் தூக்கம் கட்டாயம். தூங்கி எழுந்ததும் வேறொரு டிரெஸ் மாற்றிக்கொண்டு ஒரு காபி குடித்துவிட்டு ஷூட்டிங்குக்கு ரெடியாகிவிடுவார்.

இக்மார்க் பெர்க்மன், ஃபெலினி இருவரும் பிடித்த இயக்குநர்கள். இந்தியாவில் சாந்தாராம், சத்யஜித் ரே பிடிக்கும்.

கடந்த 26 ஆண்டுகளாக கே.பி-யின் நிழல்... மோகன்! கே.பி-யின் உதவியாளர். கே.பி கைப்பட எழுதிய கடிதம்தான் மோகனின் திருமணப் பத்திரிகை. அதேபோல, கடந்த 30 ஆண்டு காலமாக கோவிந்தராஜ்தான் கே.பி-யின் கார் ஓட்டுநர். இவர்கள் இருவருமே கே.பி-யின் வீட்டு உறுப்பினர்கள்போல!

கே.பி. டைரக்டர்ஸ் டச்

50 வருடங்கள் சினிமாவில் கோலோச்சியிருக்கிறார்.

101 படங்களை இயக்கியிருக்கிறார்.

65 நடிகர்-நடிகைகளையும் 36 தொழில் நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி யிருக்கிறார்.

25 மெகா சீரியல்களின் உருவாக்கத்தில் பங்கு பெற்றிருக்கிறார்.

84 வயதில் மரணமடைந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism