Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தையில் டாலர்களில் வியாபாரம்... நாடு கடத்தப்படும் தேவாங்கு!

இதைக் கடத்திக்கொண்டு போய் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு “ஐயையோ இப்படியெல்லாம் செய்வார்களா?” என்கிற பதற்றமான கேள்விதான்  பதிலாக வந்து விழுகிறது. நம் காடுகளில் மட்டும் வாழப் பழகிய உயிரினத்தைப் பல நாடுகளில் விற்பனைக்குக் கொண்டுபோய் கொடுமைப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

தேவாங்கு

பாங்காக்கில் செயல்படும் விலங்குகள் சந்தையில் தடை செய்யப்பட்ட விலங்குகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. சந்தையில் பதுங்கி இருக்கும் ஸ்லீப்பர் செல்களைத் தேடி காவல்துறை துப்பறியும் வேலையைத் தொடங்குகிறது. பத்து காவலர்கள் ஒன்று கூடி கடத்தல் கும்பலுக்கு எதிரான மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்குகிறார்கள். சந்தையின் ஒவ்வொரு கடையாக விசாரிக்கிற காவல்துறைக்கு ஒரு கடையில் வினோத உயிரினம் இருப்பதாகத் துப்பு கிடைக்கிறது. நாய், பூனை, முயல், குரங்கு, உடும்பு, பாம்பு, பறவைகள் எனப் பல வகை உயிரினங்களின் குட்டிகள் விற்பனைக்கு இருக்கின்றன. காவலர்கள் கண்காணிப்பு கேமிராவோடு கடைக்குச் செல்கிறார்கள். மிகத் தீவிர உரையாடல்களுக்குப் பிறகு ரகசிய உயிரினம் பற்றிய தகவல் கடைக்காரரிடமிருந்து காவல்துறைக்குக் கிடைக்கிறது. வாடிக்கையாளர் போல நடித்த காவல்துறைக்கு 30,000 அமெரிக்க டாலர்கள் விலையில் அந்த உயிரினம் டெமோ காட்டப்படுகிறது. துணி சுற்றி மிகவும் பாதுகாப்பாக இருந்த அந்த உயிரினம்“தேவாங்கு”.

தேவாங்கு

உஷாரான காவல்துறை தீவிரமாக விசாரிக்க இந்தோனேஷிய நண்பர் ஒருவரிடம் 2000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதைக் கடைக்காரர் ஒத்துக்கொள்கிறார். இந்தோனேஷிய நண்பரின் முகவரியை வாங்கிச் சம்மந்தப்பட்ட நபரை அலேக்காகத் தூக்கி வந்து விசாரிக்கிறது காவல்துறை. விசாரணையில் இந்தோனேசியாவில் இருந்து 45000 ஆயிரம் தாய்லாந்து பாத்திற்கு தேவாங்கு குட்டிகளை வாங்கியதாகச் சொல்கிறார். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏழு தேவாங்கு குட்டிகளும் மீட்கப்படுகின்றன. மீட்கப்பட்ட ஏழு தேவாங்குகளும் 30000 அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்துவதற்காக வைத்திருந்ததாகச் சொல்கிறார். கடத்தலுக்குத் துணை போன எல்லோரையும் தூக்கி உள்ளே போட்டு விட்டு விடிய விடிய விலங்கு கடத்தல் சோதனையை நடத்திக் கொண்டிருக்கிறது தாய்லாந்து காவல்துறை. 

தேவாங்கின் ஒவ்வொரு உடலுறுப்பும் பல லட்சங்களுக்கு விலை போவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை காடுகளில் இருந்து கடத்தப்படுகிற தேவாங்குகளை  மயக்க ஊசிகள் மூலம் 20 மணி நேரத்துக்கு மேலாக மயக்க நிலைக்கு கொண்டுபோகிறார்கள். மயக்க நிலையில் இருக்கிற தேவாங்கு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டுகளிலும் சூட்கேஸ்களிலும் மணிபர்ஸிலும் வைத்து கடத்தி விடுகிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் உடல்கூறு ஆராய்ச்சிக்காகவும், ஊக்க மருந்து தயாரிப்புக்காகவும் தேவாங்குகள் கடத்தப்படுகின்றன. தேவாங்கு தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் தொழுநோய் தீரும் என்பது போன்ற மூட நம்பிக்கைகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. 

சாதுவான உயிரினம் தேவாங்கு. இரவில் மட்டுமே இறை தேடும் உயிரினத்தை கடத்தலுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் முதலில் அதன் பற்களை பிடுங்கி விடுகிறார்கள். பற்கள் பிடுங்கப்பட்ட தேவாங்குகளைப்   பல ஆயிரம் டாலர்களில் விற்று விடுகிறார்கள். பல நாடுகளிலும் பற்கள் பிடுங்கப்பட்ட தேவாங்குகள் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன என்பதுதான் இப்போதைய மார்க்கெட் நிலவரம். இங்கிருந்த ஓர் உயிரினம் இந்தோனேசியா தாய்லாந்து அமெரிக்கா ரஷ்யா  என பல நாடுகளுக்கும் கடத்துகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய சந்தையை தேவாங்கு என்கிற உயிரினத்துக்கு நிர்ணயித்திருக்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள். 

தமிழ்நாட்டில் தேவாங்கின் நிலை வேறுமாதிரியாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒருவர் தேவாங்கை வைத்து கயிறு விற்பனை செய்துகொண்டிருந்தார். தேவாங்கு உடலில் கட்டிய கயிறை குழந்தைகளுக்கு கட்டினால்  குழந்தைகள் எந்த நோயும் இன்றி வளர்வார்கள் என்கிற நம்பிக்கையை மக்களிடம் விதைத்து தொழில் செய்து கொண்டிருந்தார். தேவாங்கின் உடலில் கட்டியிருந்த ஒவ்வொரு கயிறாக எடுத்து 250, 300 ருபாய் என  விற்றுக்கொண்டிருந்தார். விழித்தெழுந்த சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுக்க, தேவாங்கோடு  சேர்த்து அவரையும் அள்ளிக்கொண்டு போயிருக்கிறது  வனத்துறை. 

படித்தவர்கள் படிக்காதவர்கள் என பாரபட்சமில்லாமல் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் மூட நம்பிக்கை நம்பப்படுவதால் இங்கே கடத்தல்கள் பலவிதங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நமக்கு தெரிந்து இன்று தேவாங்கு. தெரியாமல் இன்னும் எதையெல்லாம் கடத்திக் கொண்டிருக்கிறார்களோ!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close