வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (15/09/2017)

கடைசி தொடர்பு:21:30 (15/09/2017)

சிட் ஃபண்ட் வணிகத்தை முறையாகப் பதிவுசெய்து வெற்றிகரமாக நடத்துவது எப்படி? 

`சிட் ஃபண்ட்' என்றதும், நம்மில் பலருக்கு ஒருவித அச்ச உணர்வே எழும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் `சேமிப்பு' என்ற பெயரில் பறிபோய்விடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். பத்து, பதினைந்து பேர் இணைந்து, ஒவ்வொருவரும் தன் பங்களிப்பாக குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இவர்களில் யாருக்குத் தேவையோ, அவர்கள் அந்த மாதத்தில் ஏல முறையில் பணம் பெற்றுக்கொள்வதே `சிட் ஃபண்ட்'. 

சிட் ஃபண்ட்
 

முறையற்ற சிட் ஃபண்ட் நிறுவனங்கள்! 
மக்களிடமிருந்து பணத்தைப் பெறுபவர்கள், சீட்டை பதிவுசெய்திருக்க வேண்டும்.  ஆனால், சிட் ஃபண்ட் என்ற பெயரில் போலி அலுவலகம் நடத்தும் பலர், எந்தவிதமான பதிவும் செய்யாமல் மக்களிடம் பணத்தை வசூல் செய்துகொண்டு காணாமல்போய்விடுகிறார்கள்.  இந்தியாவில் 12,000 பதிவுசெய்யப்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த சிட் ஃபண்ட் நிறுவனங்களின் மூலம் 35,000 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. இது 35 சதவிகிதம் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே. ஆனால், 65 சதவிகிதம் அளவில் பதிவுசெய்யப்படாத, வரைமுறைக்கு உட்படாத நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி அளவில் பரிமாற்றத்தை நடத்திவருகின்றன. 

இப்போது பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ள சிட் ஃபண்ட் நிறுவனங்கள், டிஜிட்டல் முறையில் வளர்ச்சியடைந்துவருகின்றன. சிட் ஃபண்டைப் பொறுத்தவரைப் பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் மட்டுமே பிரச்னையைச் சந்தித்துவருகின்றன. இவர்களால் மீண்டும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவர்கள் காலப்போக்கில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களாக மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

குறைந்த வருமானம் உள்ளவர்கள், சுயஉதவிக் குழுக்கள் எனப் பலரும் பல இடங்களில் சீட்டுத் தொழிலை நடத்திவருகின்றனர்.  இந்த நிலையில் சிட் ஃபண்ட் வணிகத்தை முறையாகப் பதிவுசெய்வது எப்படி, வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதுகுறித்து அகில இந்திய சீட்டு நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அ.சிற்றரசுவிடம் பேசினோம்... 

சிற்றரசு``சிட் ஃபண்ட் என்பது, சேமிப்பாக அமைவது மட்டுமின்றி பலருடைய அவசரத் தேவைக்கும் பயன்படுகிறது. மாதந்தோறும் 2,500 ரூபாயை வாடிக்கையாளர் ஒருவர் சீட்டாகச் செலுத்துகிறார் எனில், நான்கு அல்லது ஐந்தாவது மாதத்திலேயே அவருக்கு 50,000 அல்லது 60,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். வேறு எங்குமே இவ்வளவு பெரிய தொகை எளிதில் கிடைக்காது. இதுமட்டுமின்றி, எந்த மாதம் பணம் எடுக்க வேண்டும்; எவ்வளவு தள்ளி எடுக்க வேண்டும் என்பதை முடிவுசெய்வது அனைத்தும் வாடிக்கையாளர்கள்தான். இதுவே வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனங்கள் என்றால், வங்கியாளர்கள் சொல்வதுதான் சட்டம். 

சிட் ஃபண்டை ஒரு முதலீடாக நினைத்து பணத்தைச் சேமித்துவந்தால், வங்கி வட்டியைவிட அதிக வருமானம் பெறலாம். சிட் ஃபண்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர்கள் இருக்கிறார்கள். சீட் நடந்த விரும்புபவர்கள், அந்த சீட்டை மாவட்டப் பதிவாளரிடம் முறைப்படி பதிவுசெய்ய வேண்டும். எந்தச் சீட்டாக இருந்தாலும், அது எவ்வளவு பணமாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு சீட்டு நடத்தும்போதும் அந்தச் சீட்டை மாவட்டப் பதிவாளரிடம் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென தனியாக ஒரு விண்ணப்பம் இருக்கிறது. அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும். 

என்ன செய்யக்கூடாது?  
சீட்டு நடத்துபவர்கள், அதிகபட்சம் ஐந்து சதவிகிதம் வரை கமிஷனாகப் பெறலாம். கிராமத்தில் இரண்டு சதவிகிதம் மட்டுமே கமிஷனாக வைத்து பதிவுசெய்யாமல் நடத்திவருவார்கள். ஆனால், அவர்களும் முறைப்படி பதிவுசெய்து ஐந்து சதவிகிதத்துக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் கமிஷனாக வைத்து சீட்டு நடத்தலாம். 

சீட்டு நடத்துபவர்கள் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வேறு எந்த ஒரு தொழிலும் பயன்படுத்தக் கூடாது. பல சீட்டு நிறுவனங்கள், 10 சீட்டு நடத்துகிறார்கள் என்றால் அதில் பாதிச் சீட்டு மட்டுமே பதிவுசெய்து, மீதிச் சீட்டைப் பதிவுசெய்யாமலே நடத்திவருகிறார்கள். இது தவறான நடவடிக்கை. இதைச் செய்யக் கூடாது. சீட் நடத்துபவர்கள், ஒவ்வொரு மாதமும்  குறிப்பிட்ட தேதிக்குள் சீட் பணத்தை வழங்கிட வேண்டும். சீட் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும்போது போதிய ஆவணங்களைக் கேட்டு வாங்கிய பிறகே பணத்தைக் கொடுக்க வேண்டும்.

100% பாதுகாப்பு! 
சிட் ஃபண்டை நடத்துபவர்கள், 100 சதவிகிதம் முறையாகப் பதிவுசெய்துகொள்வது அனைவருக்கும் நல்லது. சீட்டைப் பதிவு செய்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. ஒருவேளை சீட்டு எடுத்தவர்கள் பணம் கட்டத் தவறினால்கூட, சிவில் கோர்ட்டுக்குப் போகத் தேவையில்லை. மாவட்டப் பதிவாளரிடம் முறையிட்டாலே போதும். அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்டவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பர். ஆனால், பதிவுசெய்யாத நிறுவனங்களால் எதுவும் செய்யவும் முடியாது; யாரிடமும் சொல்லவும் முடியாது. ஆகையால், முறைப்படி சீட்டை பதிவுசெய்து நடத்துவது நல்லது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்