முன்னணி கார் நிறுவனங்கள், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை ஏன் தவிர்க்கின்றன?

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி எனப் பெயர் பெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, SIAM மற்றும் CII சார்பில் கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்படுகிறது. இது டெல்லியில் இருந்து 25 முதல் 30 கிமீ தூரத்தில் இருக்கிறது. எனவே 2016 ஆட்டோ எக்ஸ்போவைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்வதில் இருந்து, 6 கார் தயாரிப்பாளர்கள் - 4 பைக் தயாரிப்பாளர்கள் விலகியிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கு ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்டால் அமைப்பதற்காக அதிக தொகை வசூலிக்கப்படுவதும், அதற்கேற்ற வகையில் வர்த்தகம் நடைபெறாததுமே காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

முன்பே சொன்னது போல, ஃபோர்டு - ஃபோக்ஸ்வாகன் - ஸ்கோடா - ஆடி - நிஸான் - ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய கார் தயாரிப்பாளர்களும், பஜாஜ் - டுகாட்டி - ராயல் என்ஃபீல்டு - ஹார்லி டேவிட்சன் ஆகிய பைக் தயாரிப்பாளர்களும், டெல்லியில் நடைபெறும் 2018-ம் ஆண்டுக்கான  ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கப் போவதில்லை. 2016-த் தொடர்ந்து, 2018 ஆட்டோ எக்ஸ்போவிலும் ஸ்கோடா, பஜாஜ், ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை. இதைப் பற்றி, அந்தந்த நிறுவனங்கள் சொன்ன விளக்கம் மற்றும் காரணம்,  ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. 

''இந்திய சந்தைகளுக்கு ஏற்ற பிரத்யேகமான மாடல்கள் இல்லாததால், எதையுமே காட்சிபடுத்தப்பட முடியாத நிலை நீடிக்கிறது. தவிர இவர்களின் கைவசம் பல கான்செஃப்ட் மாடல்கள் இருந்தாலும், அவை அதிக நாட்களுக்கு டிரெண்டிங்காக இருக்காது என்பதும் ஒரு காரணம். மேலும் சர்வதேச சந்தைகளில் இந்நிறுவனங்கள் ஜொலித்தாலும், இந்தியாவில் இவர்களின் விற்பனை எண்ணிக்கை, எதிர்பார்த்த அளவில் இல்லை. எனவே 50 முதல் 60 கோடி ரூபாய் செலவழித்து ஸ்டால்கள் அமைத்து, இடத்துக்கு வாடகை கொடுத்து, கார்கள் மற்றும் இதர பொருட்களுக்கான போக்குவரத்து மற்றும் இறக்குமதி செலவுகள் செய்வது லாபகரமாக இருக்காது'' எனக் கூறியுள்ளார்கள்.

2018 delhi auto expo

 

ஃபோக்ஸ்வாகன் குழும நிறுவனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்த டீசல் கார்களின் மாசு அளவுகளில் மோசடி செய்ததால், அதற்கான அபராதத் தொகையைச் செலுத்தியதில் பலத்த நஷ்டத்தைச் சந்தித்துவிட்டது. எனவே அதனைச் சரிகட்டுவதற்காக, தனது குழும நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டியை விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறது. மேலும் சர்வதேச அளவில், புதிய மாடல்களுக்கான தனது முதலீடுகளையும் குறைத்துக் கொண்டு வருகிறது. 

ஆனால் ஒரேடியாக 10 நிறுவனங்கள், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இருந்து வெளியேறிவிட்டாலும், சீனாவைச் சேர்ந்த SAIC - MG மோட்டார் இந்தியா, ஃப்ரான்ஸைச் சேர்ந்த பெஜோ (Peugeot), கொரியாவைச் சேர்ந்த கியா (Kia) மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்க உள்ளனர். எனவே முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனங்கள் இடம்பெற உள்ளனர். இவர்களுடன் இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்யும் டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸூகி, மஹிந்திரா, ஹோண்டா, ஹூண்டாய் போன்ற கார் நிறுவனங்களும் போட்டிக்கு வருவதால், அசத்தலான கான்செஃப்ட்களையும், புதிய கார்களையும் எதிர்பார்க்கலாம்.

greater noida

லக்ஸூரி கார் நிறுவனங்களில், மெர்சிடீஸ் பென்ஸ் - பிஎம்டபிள்யூ - ஜாகுவார் ஆகியோர் இருப்பார்கள் எனத் தெரிகிறது. இதனுடன் இந்திய பைக் நிறுவனங்களான டிவிஎஸ் மற்றும் ஹீரோ, தமது புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை வரிசைபடுத்துவர் என நம்பலாம். 2025-க்குள் உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தை என்ற பெருமையைப் பெறப்போகும் இந்தியா, ஜூலை 2017 நிலவரப்படி, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7.29% வளர்ச்சி கண்டுள்ளது. 

நொய்டா

தற்போதைய சூழ்நிலையின்படி, இந்தியாவில் ஆயிரத்துக்கு 18 பேரிடமே கார் இருக்கிறது. அமெரிக்காவில் ஆயிரத்துக்கு 800 பேர் கார் வைத்துள்ளனர். ஆனால் மக்களிடையே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகும் கார்களின் எண்ணிக்கை மற்றும் கண்காட்சியைப் பார்வையிட வந்த மக்களின் எண்ணிக்கையை உறுதிபடுத்துகிறது. மேலும், பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களது வருகையை உறுதி செய்வர் என்பதால், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவும், சென்ற ஆண்டைவிடப் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!