வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (18/09/2017)

கடைசி தொடர்பு:13:46 (18/09/2017)

ஆழ்குகையில் பறவைக்கூடுகள்... உயிரைப் பணயம் வைத்து அதை எடுக்கும் மனிதர்கள்... ஏன்?

கூடு  திரும்புதல் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. நாம் வீடு திரும்புதல் போலத்தான் பறவைகளுக்கு கூடு திரும்புதல். தூக்கணாங்குருவி கூட்டிலிருந்து இருவாச்சி பறவைகளின் கூடுகள் வரை எல்லா கூடுகளுமே ஆச்சர்யங்கள் நிறைந்தவை. உலகின் மிகச்சிறந்த பொறியாளர்கள் எல்லாம் பறவை இனத்தின் கூடுகளில் இருந்துதான் தங்களை அப்டேட் செய்திருக்கிறார்கள்.  

கூடு


கற்பனை செய்துகொள்ளுங்கள். கடல்மட்டத்தில் இருந்து 2800 அடி உயரத்தில் இருக்கிற  மிகப் பெரிய காடு அது. அங்கே  இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக  தண்ணீர் பாய்கிற உயரமான இடத்தில் இயற்கையாகவே  ஒரு குகை உருவாகிறது. எல்லாக் காலங்களிலும் ஈரப்பதத்தோடு இருக்கிற மிகப் பெரிய குகை. இருள் சூழ்ந்து வெளிச்சம் போகாத வண்ணம் அதன் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட ஒரு வகையான பறவைகளின் கீச்கீச் சத்தங்கள் மட்டுமே அந்தக் குகைக்குள் நிரம்பி இருக்கிறது. இருளில் பறவைகளின் சத்தங்கள்தான் அவற்றுக்கான தகவல் தொடர்பு  மொழி. அப்பறவைகள் இனப்பெருக்கத்துக்கு முந்தையக் காலக்கட்டத்தில் கூடு கட்ட அக்குகையின் உயரமான ஓர் இடத்தை  தேர்ந்தெடுக்கின்றன.  

பறவை

ஆண் பறவை பெண் பறவை என இரண்டு இணைப்பறவைகளும் கூடு கட்டுவதற்கான செயலில் ஈடுபடுகின்றன. கூடு கட்டுவதற்கான எந்த பொருள்களும் அவற்றிடம் இல்லை. எந்த மூலப் பொருள்களும் இல்லாமல் வெறுமனே  கூட்டை கட்டத் தொடங்குகின்றன. எச்சிலில் இருக்கிற ஒரு வகையான திரவத்தை மூலதனமாக்கி கூட்டை கட்டுகின்றன. இரண்டு பறவைகளும் விடா முயற்சியில் இரண்டு மாதங்களில் கூட்டை கட்டி முடித்து விடுகின்றன. குடுவை வடிவில் வெண்மையான நிறத்தில் கூடு இருக்கிறது. காற்றுப் பட்டதும்  ஈரம் காய்ந்து கூடு பாறையைப் போல இறுகி விடுகிறது. 

கூடு கட்டி முடித்த பிறகே ஆண் பறவையும் பெண் பறவையும்  இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. (கழிப்பறை இருந்தால்தான் திருமணத்துக்கு சம்மதிப்பேன் என்கிற 'ஜோக்கர்' படத்தின் அடிப்படை விதியேதான் இங்கேயும்) முட்டையைக் கூட்டில் பத்திரப்படுத்தி அடைக்காக்கின்றன. அடைகாத்து  முட்டையிலிருந்து குஞ்சு  வெளி வருகிற காலம் வரை அந்த கூட்டுக்கு இரண்டு பறவைகளும் காவலுக்கு இருக்கின்றன. எதிரிகள் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பாக அவை வளர்க்கப்படுகின்றன. இப்படி அந்தக் குகை முழுமைக்கும் நூற்றுக்கணக்கான பறவைகளும் பல நூறு கூடுகளும் இருக்கின்றன. எச்சிலில் கூடு கட்டுகிற அப்பறவையின் பெயர் எடிபில்  நெஸ்ட்  ஸ்விப்ட்லெட். 

பறவை

ஸ்விப்ட்லெட் பறவை இனங்களில் ஒருவகையாகிய இப்பறவைகள் தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவுகளிலும் சுமத்ரா தீவுகளிலும் மலேசியாவின் வட  கிழக்கு கடலோரப் பகுதிகளிலுள்ள உள்ள உயரமான குகைகளில் வசிக்கிறன. ஆண் பெண் என இணைந்து வாழக்கூடிய இப்பறவைகள் பகல் நேரங்களில் இரைதேடி சென்று இரவு கூடு திரும்புகின்றன. இந்தப் பறவைகள் இருண்ட குகைகளில் தங்கள் இணையை கண்டுபிடிப்பதற்கு எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இனப்பெருக்க காலத்தில் ஒன்றிலிருந்து இரண்டு முட்டைகள் வரை இடும் இப்பறவைகள் இனப்பெருக்க காலம் முடிந்ததும் கூட்டை அப்படியே விட்டுவிடுகின்றன. பல நூறு ஆண்டுகளாக, கணக்கில்லாத ஸ்விப்ட்லெட்டுகள்  இங்கே  இனப்பெருக்கம் செய்கின்றன. 

பறவை


கூடுகள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஸ்விப்ட்லெட் பறவையின் கூடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும்,  நுரையீரலை வலுப்படுத்தவும், இருமலைத் தடுக்கவும் உதவுவதாக பல நாடுகளிலும் நம்பப்படுகிறது. சீனாவில் ஆரம்பித்து மலேசியா, வியட்நாம் என உலகெங்கிலும் கூட்டின் விலை பல ஆயிரங்கள். பல ஆயிரங்களில் விலை இருக்கும் கூடுகளை சும்மா விடுவார்களா மனிதர்கள்? அக்கூடுகளை எடுக்க குகைகளின் ஆழமான பகுதிகளில்  உயிரைப் பணயம் வைத்து அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். 

பறவை

கடற்கரை மற்றும் மலை குகைகளுக்குள்ளே ஆழமாக காணப்படும் கூடுகளை அடைய  ஆபத்தான கட்டமைப்புகள், கிரேன்கள், ஏணிகள், கயிறுகள் என  குகை வாசலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பார்வைக்கு ஒரு பதற்றமான இடமாகவே காட்சியளிக்கிறது. எந்த பிடிமானமும் இல்லாத உயரமான குகைக்குள் சென்றுவருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பாசிப் படர்ந்த பாறைகளில் கயிறுகள் மூலம் பயணிப்பது, உயிரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர்களால் மட்டுமே செய்ய முடிகிற காரியம். குகைக்குள் மரத்தாலான ஒரு நடைபாதை இருக்கிறது.  ஒவ்வொரு படியும் மிகவும் கவனமாக வைக்க  வேண்டும். பாறைகளில் இருந்து கொட்டுகிற நீர் பலகைகளில் வழிந்து வழுக்கும் தன்மையுடன் இருக்கும். பதினெட்டு வயதிலிருந்து ஐம்பது வயதான முதியவர்கள் வரை கூட்டை எடுப்பதற்கு இரவு பகலென வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் இனப்பெருக்க காலத்தின் கடைசி காலம் என்பதால் அங்கேயே தங்கி கூடுகளை எடுக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் ஸ்விப்ட்லெட் பறவையும் இருக்கிறது. கூடுகளை எடுப்பதை அரசு தடை செய்திருந்தாலும் கூடு வேட்டை இப்போதும்  மிகத்  தீவிரமாக நடந்து வருகிறது. 

உலகின் உள்ள எல்லா உயிருக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இயற்கையிடம் இருக்கிறது. அவற்றின் சில முடிவுகள்  மட்டும்தான் மனிதனிடம் இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்