Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரைவர் இல்லாமல் ஓடும் ட்ராக்டர் வந்துவிட்டது விவசாயிகளே! #DriverlessTractor

தண்ணி லாரியாகப் பார்த்திருப்பீர்கள்; லோடு அடிக்கும் ட்ரக்காகப் பார்த்திருப்பீர்கள்; வயலில் உழுது பார்த்திருப்பீர்கள். இப்போது டிரைவர் இல்லாமல் பார்க்கப் போகிறீர்கள். ஆம்! டிரைவர்லெஸ் ட்ராக்டர் (Driverless Tractor) வரவிருக்கிறது.

சாலையில் ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறக்க முடியாது. ஆனால், சாலையே இல்லாத இடங்களில் செல்வதுதான் ட்ராக்டர்களின் ஸ்டைல். ஏனென்றால், இதில் புல்லிங் பவரும் கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகம். அதனால்தான், மேடு பள்ளங்கள் - சேறு சகதிகள் என்று எந்த ஏரியாவிலும் ட்ராக்டர்களை வைத்துத் தைரியமாகப் போகலாம். அதேபோல், விவசாயிகளை வாழ வைப்பதிலும் ட்ராக்டர்களுக்கு அதிகப் பங்குண்டு. அப்படிப்பட்ட ட்ராக்டர் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்தான், அடுத்த கட்டத்துக்குப் போய் ‘டிரைவர்லெஸ் ட்ராக்டரை’ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Driverless Tractor

 

இந்தியன் ட்ராக்டர் தொழிற்சாலையில் 43% மார்க்கெட் ஷேர் வைத்திருக்கிறது M&M. செங்கல்பட்டுக்கு முன்பு உள்ள மஹிந்திராவின் R&D ரிஸர்ச் சென்டரில் இந்த ட்ராக்டரை அறிமுகம் செய்துவைத்தார் இதன் நிறுவனர் பவன் கோயங்கா. 

முதலில் இந்த ட்ராக்டர், மூன்று நிலைகளாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. முதல் நிலை, டிரைவர் அசிஸ்ட். இரண்டாவது, குவாஸி-டிரைவர்லெஸ். அதாவது, டிரைவர் பாதி வேலையைப் பார்த்தால் போதும். மூன்றாவதுதான், டிரைவர்லெஸ். 

விவசாயிகளுக்குப் பாதி வேலையைக் குறைப்பது டிராக்டர்கள்தான். அதில் டிரைவர் இல்லாமல் இருந்தால் இன்னும் வசதிதானே! ஆனால், டிரைவர் இல்லாமல் எப்படி டிராக்டரைக் கையாள முடியும்?

முடியும் என்கிறது மஹிந்திரா. நவீன கார்களில் இருக்கும் டெக்னாலஜிபோல், GPS தொழில்நுட்பத்திலும், மொபைல் ஆப் மூலமும் இயங்கக் கூடிய வகையில் இந்த ட்ராக்டரை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் இதன் ஸ்பெஷலே! இதில் இருப்பது ஆட்டோ ஸ்டீயரிங் என்பதால், GPS வழிகாட்டும் ஸ்ட்ரெயிட் லைனில் ஸ்டீயரிங் அலைபாயாமல் நேராகவே செல்லும். அது தவிர, ஆட்டோ-ஹெட்லாண்ட் டர்ன் எனும் வசதி, இன்னும் அதிநவீனம். அதாவது, வயல்களில் அடுத்தடுத்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதைகளுக்கேற்ப இது தனது திசையை டிரைவர் இல்லாமல் தானாகவே மாற்றிக்கொள்ளும். அடுத்தது, ஜியோஃபென்ஸ் லாக். இதன் அம்சம் என்னவென்றால், வயல் வரப்பைத் தாண்டாதவண்ணம் டிராக்டரின் செட்டிங்ஸை மாற்றிவிட்டால் போதும். வேலி தாண்டாத ஆடாக உழைத்துக்கொட்டும். டிரைவர்கள், பழைய கஞ்சியையோ, சீரக சம்பாவையோ ஓரமாக உட்கார்ந்து விருந்துண்டபடி வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும். 

இது போக சொகுசான சீட், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் போன்ற வசதிகளும் விவசாயிகளை முன்னிறுத்தியே தந்திருப்பதாகச் சொல்கிறார் பவன் கோயங்கா. ‘‘இதில் இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள்தான் இந்த வசதிக்காகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்லாமே இறக்குமதி என்றால், விலை கட்டுப்படியாகாது என்பதால் இதை வயலில் விட்டபிறகுதான் மெக்கானிக்கலாக எந்தெந்த பாகங்களை நம் உள்ளூரிலேயே தயாரிக்கலாம் என்கிற ஐடியா கிடைக்கும். அப்போதுதான் நம் விவசாயிகளும் பயன்பெற முடியும். அதற்காகத்தான், இப்போதிருக்கும் மாடலைவிட இந்த மாடலுக்கு 1 லட்ச ரூபாய் குறைவாக விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். உணவு உற்பத்தியிலும், விவசாயிகள் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதிலும் இனி அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.’’ என்று சொன்னார் பவன்.

இதுதவிர, சுற்றுச் சூழலைக் காக்கும் பொருட்டு, எலெக்ட்ரிக் கார், பஸ், ஆட்டோ தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது மஹிந்திரா. விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாமாம். 

அப்புறம், என்ன ‘டர் புர்’னு ட்ராக்டரை வயலில் விட வேண்டியதுதானே என்கிறீர்களா? ‘‘இன்னும் அரசாங்கத்திடம் இருந்து இந்த டிரைவர்லெஸ் ட்ராக்டருக்கான அனுமதி கிடைக்கவில்லை. விலைக் குறைப்பு செய்வதைவிட இதுதான் எங்களுக்குப் பெரிய சவால். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்!’’ என்று, ஆதாருக்கு அப்ளை பண்ணிய குடிமகன்போல் சொன்னார் பவன்.

ஏற்கெனவே, ட்ராக்டர்களின் விலையை ஏற்றி, சொகுசு கார்களின் விலையைக் குறைத்துப் புண்ணியம் செய்த அரசை இந்த விஷயத்திலாவது நம்புவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement