Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காணாமல் போன விமானங்கள்... விடை தெரியாத மர்மங்கள்! #MysteryStories

'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை  வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில்  தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற ரீதியில் 24 மணி நேரக் கண்காணிப்பிலேயே இருந்த விமானங்கள் பலவும் தொலைந்து போய் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமலே இருக்கிறது. வெறுமனே விமானங்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் தேடாமல் விட்டிருக்கலாம். எல்லா விமானங்களிலும் 200 பயணிகளுக்கும் மேலாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விஷயமாய் இருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை தேடிவிட்டு கடலில் விழுந்திருக்கலாம் என ஜஸ்ட் லைக் தட் அறிக்கை கொடுத்துவிட்டு கடந்து வந்திருக்கின்றன சம்பந்தப்பட்ட அரசுகள். எல்லாமே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற சம்பவங்கள். ராணுவ விமானங்கள், போர்க்கப்பல்கள் எனச் சர்வதேச படைகளின் கூட்டுத் தேடல்களில் இன்று வரை விடை கிடைக்காத விமானங்கள் ஏராளம்.

விமானம்

டிசம்பர் 28, 1948 அன்று, மியாமி (புளோரிடா) தலைநகரான போர்டோரிகோவின் சான் ஜுவான் விமான நிலையத்திலிருந்து  டக்ளஸ் டகோடா DC-3 என்கிற விமானம் இரவு 10.03 மணிக்குப் புறப்பட்டது. 28 பயணிகள் மூன்று விமான சிப்பந்திகளுடன் பயணித்தது. “வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான தகவலுக்காக காத்திருக்கிறேன்”  என விமானி செய்தி அனுப்புகிறார்.  அந்த விமானத்திலிருந்து கடைசியாய் வந்த தகவல் இது மட்டும்தான். இப்போது வரை அந்த விமானம் தரை இறங்காமலே இருக்கிறது. 


1948, ஜனவரி 30-ம் தேதி இரண்டாம் உலகப்போரில் வீர தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் ஆர்தர் கோணிங்கம் பயணம் செய்த ஸ்டார் டைகர் விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 25 பயணிகளுடன் பெர்முடா தீவில் இருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இதுவரை தரை இறங்கவில்லை. எங்கெங்கோ தேடியவர்கள் கடைசியில் பெர்முடா முக்கோணத்தைக் கைகாட்டிவிட்டு அப்படியே ஒதுங்கிவிட்டார்கள். 


1949-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு கிளம்பிய ஸ்டார் ஏரியல் விமானம் கட்டுப்பாட்டு அறையின் அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது.  விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடைசிச் செய்திகளும் சாதாரணமானவை. தேடுதலைக் கைவிட்ட பிறகு  1998ல் ஆண்டிஸின் மலைகளில் காணாமல் போனதற்கான சாத்தியக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது ஸ்டார் ஏரியல் விமானம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் இப்போது வரை கிடப்பிலேயே கிடக்கிறது விமானமும் அதுசார்ந்த கோப்புகளும். 

விமானங்கள்

1962-ம் ஆண்டு அமெரிக்க  ராணுவ விமானம் ப்ளையிங் டைகர் லைன் விமானம் 739 மாயமானது. இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும்போது திடீரென்று மாயமாகிவிட்டது. விமானத்தில் 93 அமெரிக்க போர் வீரர்கள் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 107 பேர் பயணித்தனர். விமானம்குறித்த தகவலும் பயணிகள்குறித்த தகவலும் இப்போது வரை தேடப்படும் பட்டியலில்தான் இருக்கிறது. விமானம் வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. விமானத்தைத் தேடுவதை கைவிட்டு மாமாங்கம் ஆகிறது. 
 
ஏர் பிரான்ஸ் விமானம் 447 விமானம் கடந்த 2009-ம்  ஆண்டு 228 பேருடன் பிரேசில் வான்வெளியில் இருந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும்போது, கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இன்று வரை என்ன நடந்தது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தீவிர  விசாரணைக்குப்  பிறகு, அந்த விமானம்  அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது வெடித்திருக்கும் என்று யூகித்து அப்படியே விட்டுவிட்டார்கள். 228 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது விபத்தில் வெடித்துச் சிதறியது உறுதியானது. 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அன்று 00:41 மணியளவில் 239 பயணிகளுடன் போயிங் 777- 200 MH 370 விமானம் புறப்பட்டது. தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவைக் கடக்கும்போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பிரேக்கிங் செய்திகள் அலற மலேசிய சீன நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் இரு நாடுகளும் புலன் விசாரணையில் இறங்கின. உலகம் முழுவதிலும் பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டே இருந்தது. விமானம் பற்றிய  எந்தத் தகவலும் கிடைக்காத இரண்டொரு நாளில் உலக நாடுகளின் உதவியை நாடியது மலேசிய அரசு. உலகம் முழுவதிலும் இருந்து 25 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் தேடியும் ஒரு துப்பு கூடக் கிடைக்காமல் போனது. கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் என இந்தியப் பெருங்கடலில் ஆரம்பித்து ஆஸ்திரேலிய கடல் பகுதி வரை  சல்லடைப்  போட்டு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காமல் போன பரிதாப விமானம் போயிங் 777. இப்போது வரை விமானத்தின் பாகங்கள் அங்கே கிடைத்தது இங்கே கிடைத்தது என உறுதிப்படுத்த முடியாத  தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது. விமானம் என்ன ஆனது என்றுதான் இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது

விமானங்கள்

2016 ஜூன் 21-ம் தேதி 29 பேருடன்  தாம்பரத்தில் இருந்து அந்தமான் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் காணாமல் போனது. தகவல் கிடைத்த நொடியில் இருந்து ஆறு கப்பல்கள் பதினைந்து விமானங்கள் எனப் பல இடங்களில் தேடியும் விமானத்தின் சிறிய பகுதிகூட இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பயணம் செய்த 29 பேரும்  இறந்துவிட்டதாக அரசு அறிவித்திருக்கிறது. 

பெரும்பாலான விமானங்கள் இயந்திரக் கோளாறுகளால் விபத்துக்குள்ளாகின்றன. சில விபத்துகள் வானிலை மாறுவதால் நடந்திருக்கின்றன. சில விமானங்கள் பறவை மோதுவதால் நிகழ்கின்றன. ஆனால் காணாமல் போன விமானங்கள் எப்படி நடந்தன என்கிற எந்த எந்தக் குறிப்பையும் கொடுக்காமல் காணாமல் போயிருக்கின்றன. 

விமானம் விபத்தில் சிக்கினால் அந்த விமான விபத்துக்குக் காரணம் என்ன என்பதைக் கறுப்புப் பெட்டியை வைத்துக் கண்டறிந்துவிடலாம். விமானி உரையாடலில் தொடங்கி விமானத்தின் அனைத்துத் தகவல்களையும் சேமித்து வைக்கும் கறுப்புப் பெட்டியை விமானத்தின் வால் பகுதியில் பொருத்தி இருப்பார்கள். எளிதில் பாதிக்கப்படாத வண்ணம் கறுப்புப் பெட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானம் செயல் இழந்தாலும் முப்பது நாள்களுக்கு சிக்கனல்களை வழங்கிக்கொண்டே இருக்கும். 2012 டிகிரி வெப்பத்தையும், 1000 டன் எடையையும் தாங்கும் விதமாகக் கறுப்பு பெட்டிகள் இருக்கும். எப்படி இருந்தாலும் மனிதனால் தயாரிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்கள் எல்லாக் காலங்களிலும் உதவியாய் இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது. மேற்கூறிய விமான விபத்துகளில் மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியைக் கூட இப்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் தொழில் நுட்ப வளர்ச்சியின் முரண்.

இந்த எல்லா விமானங்களும் மாயமானதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காரணம் தெரிந்தவர் யாரும் உயிரோடு இல்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement