வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (23/09/2017)

கடைசி தொடர்பு:18:32 (23/09/2017)

வருகிறது பிங்க் நிற சாக்லேட்... நிறத்துக்காக என்ன சேர்க்கிறார்கள்? #RubyChocolate

பிங்க்


முன்பு ஒரு விளம்பரம் வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்துப் பார்க்கும் ஒரு பெண், “இதுல பிங்க் கலர் கிடைக்குமா?” என்பார். இன்று பெண்கள், ஆண்கள் என அனைவருக்குமே பிங்க் பிடித்த நிறம். சட்டையில் இருந்து கார் வரை பிங்க் நிறத்தில் வந்தால் விற்பனை தூள் கிளப்பும். ஆனால், சாக்லேட்டை இதுவரை பிங்க் நிறத்தில் பார்த்திருக்கிறீர்கள்? கூடிய சீக்கிரம் பார்ப்பீர்கள்.

வெறும் சாக்ரிம்களால் மட்டுமே செய்யப்பட்டு வந்த சாக்லேட் இப்போது ’பெர்ரி காலபட்’ நிறுவனத்தால் இயற்கைப் பொருட்களை கொண்டு செய்யப்பட்டு ரூபி சாக்லேட் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ’சாக்லேட் சாப்பிடக் கூடாது’ என்று சொல்லி வளர்க்கும் காலகட்டத்தில் நிறத்திற்காகவோ அதன் மனத்திற்காகவோ எந்தவித கெமிக்கல்களையும் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட  ரூபி சாக்லேட்டை தாராளமாக வரவேற்கலாம். 

சுவிஸ் நாட்டில் சாக்லேட் தயாரிப்பாளர்கள் ஒரு புதுவித வண்ணம் கொண்ட சாக்லேட்டை உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். பழச்சுவைகள் நிறைந்து நாவின் நுனி பட்டு ஒரு கடி கடிக்கும் போதே நம்மை அது பிங்க் உலகில் மிதக்க செய்து விடுகிறது. 80 வருடங்களுக்கு முன்பு நெஸ்லே வொயிட் சாக்லேட்டை அறிமுகம் செய்தது. வொயிட், டார்க் , மில்க் என்ற சாக்லேட் ரகங்கள் பெர்ரி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நான்காவது ரகமாக சிறந்த கோகோ விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தரம் வாய்ந்த ரூபி சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சிகப்பை விட பிங்க் நிறமே அதிகம் கொண்டதால் இதற்கு ரூபி எனவே பெயரிட வேண்டும் என முடிவு எடுத்தனர்.

ரூபி பீன் மற்றவற்றில் இருந்து தனித்து தெரியும் பண்புகளை கொண்டது. இதில் பழத்தின் சுவையும் நிறமும் இயற்கையாக இடம் பெற்றுள்ளது.உலகின் பல இடங்களில் இருந்து பெறப்படும் கோகோ விதைகளில் இருந்து ரூபி தயாரிக்கப்படுகிறது. ”சாக்லேட் வகையில் நான்காவது வகையான ரூபி சாக்லேட் ஆனது துவர்க்கும் தன்மையோ பாலின் சுவையாகவோ இனிப்பாகவோ இருக்கவில்லை. பழச்சுவைக்கும் மிகுந்த மென்மைக்கும் இடைப்பட்ட ஒரு புது வித சுவையை கொண்டுள்ளது” என்கிறார்கள் இதைச் சுவைத்தவர்கள்.
     
10 வருட வளர்ச்சிக்கு பிறகு பெர்ரி சாக்லேட் நிறுவனமானது கோகோ விதையின் தனித்துவம் நிறைந்த சுவையை பயன்படுத்துவதற்கே ஒரு புதுவித முறையை கையாள்கிறது. இதன் சுவையே போதுமானதாக இருப்பதால் வேறு எந்த செயற்கை சுவையூட்டிகளோ நிறமூட்டிகளோ எதுவும் புதிதாக சேர்ப்பது இல்லை.

”இந்த சாக்லேட் பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் நோக்கில் மட்டுமே தயரிக்கப்படவில்லை. மாறாக இது பழச்சுவையையும் அதன் மேன்மையையும் கூறும் நோக்கில் அமைந்துள்ளது. பார்த்தாலே வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் தன்மை உடையது. அதே சமயத்தில் சாக்லேட்டிற்கான உண்மைத் தன்மையையும் கொண்டுள்ளது” என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ அந்தோணி டி செயிண்ட் கூறியுள்ளார். இந்த நிறுவனத்தின் தரப் பிரிவு அதிகாரி பீட்டர் பூனே அவர்கள் ”விரைவில் வணிக பங்குதாரர்களுடன் இணைந்து, எந்த வித ரசாயனங்களும் இன்றி தயாரிக்கப்பட்ட இந்த ரூபி சாக்லேட் அனைத்து சந்தைகளிலும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.

ரூபி சாக்லேட் 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று அனைத்து விற்பனை கூடங்களிலும் கிடைக்கும். பிங்க் நிறம் கொண்ட ஹார்ட் வடிவ ரூபி சாக்லேட்க்கு  வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 


டிரெண்டிங் @ விகடன்