Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு... அண்டார்டிகாவில் ஒரு நாள் எப்படி இருக்கும்?

பூமிப் பந்தின் தென் துருவத்தில் ஒரு காலிஃபிளவர் வடிவத்தில் இருக்கிறது அண்டார்டிகா. உலகின் ஐந்தாவது பெரிய கண்டமான அது, உலகிலேயே குளிரான இடமும்கூட. முழுக்க முழுக்க பனி ஆக்கிரமித்த பகுதியான அது, சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் கனவுத் தாயகம். நாசாவின் பல்வேறு விஞ்ஞானிகள் இங்கேயே தங்கள் வீடுகள் இருப்பதுபோல் பாவித்து வருடத்தில் பாதி நாள்களைக் கழிக்கிறார்கள்.

அண்டார்டிகா மெக்முர்டோ நிலையம்

Photo Courtesy: Gaelen Marsden

செவ்வாய்க் கிரகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் அண்டார்டிகாவை தான் படிக்க வேண்டும் என்று பல நாசா விஞ்ஞானிகள் வற்புறுத்துகிறார்கள். இதற்குக் காரணம், உயிர்காற்றான ஆக்சிஜன் தவிர்த்து செவ்வாயின் சூழலும், அண்டார்டிகாவின் சூழலும் ஒன்றுதான். இப்படி பூமியின் மற்ற இடங்களோடு ஒத்துப்போகாமல் இருக்கும் அண்டார்டிகாவில் ஒரு நாள் என்பது எப்படி இருக்கிறது?

ஆறு மாதம் வெளிச்சம், ஆறு மாதம் இருள்

பூமியின் மற்றப் பகுதிகளில் ஒரு நாள் என்பது இரவு, பகல் சேர்ந்ததுதான். ஆனால், அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான். வெயில் காலம், குளிர் காலம் என அங்கே இரண்டே இரண்டு பருவ நிலைகள்தான். இதற்குக் காரணம், பூமி தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாகும். இதனால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி வருடத்தில் பாதி நாள்கள் சூரிய வெளிச்சத்தைப் பெற்றுவிடும். வெயில் காலங்களில், நடு இரவில் கூட சூரியன் அசராது தன் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும். ஆனால், குளிர்காலத்தில் சூரியனை நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பார்க்கவே முடியாது. அப்போது அண்டார்டிகாவின் வெப்ப நிலை அகலப் பாதாளத்துக்குச் சென்றுவிடும். சராசரியாக மைனஸ் 34.4 டிகிரி செல்சியஸ் இருக்கும் அது, குறைந்தபட்சமாக ஒரு முறை மைனஸ் 89.4 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வெறும் 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே.

அண்டார்டிகா ஒரு பாலைவனம்

ஆச்சர்யமாக இருந்தாலும், இதுதான் உண்மை. அண்டார்டிகா ஒரு பாலைவனம் போலத்தான். பனியால் மூடப்பட்டிருந்தாலும் அங்கே மழைப்பொழிவு என்பதே அரிதான ஒன்று. பனிப்பொழிவு கூட எப்போதாவதுதான். நிலப்பரப்பு பனிப்பாறைகள், பனித் தாழிகள் ஆகியவற்றால் ஆனது. எவ்வித மரங்களோ, செடிகளோ கிடையாது. கடுமையான குளிரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய தாவரங்களான மரப்பாசிகள் மற்றும் பாசிகள் மட்டுமே வாழ்கின்றன. அங்குப் பெரிய அளவில் நடக்கக்கூடிய ஆராய்ச்சிகளில் ஒன்று எரிகற்கள் குறித்த ஆராய்ச்சி. பூமியின் மற்ற பகுதிகளில் விழும் எரிநட்சத்திரங்களைவிட இங்கு நிறைய அளவில் அவை காணப்படும். இதற்குக் காரணம், மக்கள் நடமாட்டம் குறைவு, மற்றும் பனி நிலம், அந்தக் கற்களை அழியாமல் பார்த்துக்கொள்கிறது.

அண்டார்டிகாவில் ஒரு நாள்

அண்டார்டிகாவில் நியூசிலாந்து நாட்டுக்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது புகழ்பெற்ற அமெரிக்காவின் மெக்முர்டோ நிலையம் (McMurdo Station). அங்கு இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களிலே இதுதான் பெரியது. தற்போது அங்கே 1258 பேர் வசிக்கிறார்கள். எந்தப் பொருள்கள், மனிதர்கள் அண்டார்டிகா வந்தாலும், அந்த நிலையத்தைக் கடக்காமல் செல்ல முடியாது. அங்கு ஒரு நாள் எப்படி இருக்கும் என விளக்குகிறார் அங்குப் பாதுகாப்பு பொறியாளராக இருக்கும் டேவிட் நோல்ட்.

ஆராய்ச்சி பயணம்

Photo Courtesy: Liam Quinn from Canada

“அண்டார்டிகா நிச்சயம் ஆபத்தான இடம்தான். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நிதிப் பற்றாக்குறையால் தங்கள் ஆராய்ச்சிகளை போதிய பாதுகாப்பில்லாமல் செய்ய துணிவார்கள். அது விபத்தை ஏற்படுத்தும். அனுபவமில்லாத பலர் இங்கே தவறுசெய்து பேராபத்தில் மாட்டி இருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இரண்டு ஆராய்ச்சியாளர்கள், கூடத்தைவிட்டு வெளியே சென்றிருந்தனர். புயல் எச்சரிக்கை வரவே, சீக்கிரம் கூடத்துக்குத் திரும்ப வேண்டுமெனப் பாதுகாப்பான வழியை விடுத்துக் குறுக்குப் பாதையில் நடந்தனர். பிளவுபட்ட பனித்தகடுகளில் காலை வைத்து மாட்டிக்கொண்டனர். நீங்கள் தண்ணீரில் இறங்க வேண்டும் என்றில்லை, பனித்தகடுகளின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலே போதும் ஓர்கா இன திமிங்கலங்கள் உங்களைக் கொண்டு சென்றுவிடும். ஒரு சீசனுக்கு சராசரியாக நூறு விபத்துகள் வரை ஏற்படும். பத்து வருடங்களுக்கு முன்னால் இறப்புகூட நிகழ்ந்துள்ளது.

அண்டார்டிகாவின் குளிர்காலம், அதாவது பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை முழுவதும் இருட்டு என்பதால் விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்படும். நீங்கள் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இங்கே வந்தால், குறைந்தது ஆறு மாதங்கள் இங்கேயே தங்கிவிட வேண்டிய நிலை ஏற்படும். வெளியுலகத்தில் இருந்து எந்த உதவியும் வராது. ஆனால், தினமும் இன்டர்நெட் சேவை இருக்கும், செய்திகளை அறிந்துகொள்ளலாம். சராசரியாக இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் பத்து மணி நேரங்கள் வேலை செய்வார்கள். அதன் பின்னர் கொண்டாட்டம்தான். பார் வசதி உள்ளது, பௌலிங் ஆடுவார்கள். கொஞ்சம் பழைய இடம்தான் என்றாலும், உற்சாகத்துக்கு குறைவியிருக்காது.

வாக்கிங், ட்ரெக்கிங் செல்ல வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்கும். எப்போது சென்றாலும், ஒரு துணையில்லாமல் செல்லக் கூடாது. கையில் ரேடியோ இல்லாமல் செல்லக் கூடாது. முறையாக அனுமதி பெறாமல் செல்லக் கூடாது எனப் பல விதிமுறைகள் உண்டு. அனைத்தையும் பின்பற்றினால், எந்த பிரச்னையும் இல்லை. சுத்தமான காற்று, மாசில்லா பூமி, இதை விடச் சொர்க்கம் எங்கு இருக்க முடியும்?”

யோசிக்க வைப்பதாகத்தான் இருந்தது டேவிட் அவர்களின் பேச்சு. மிகுந்த சிரமத்துக்கு இடையில் இங்கே ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்வது நம் பூமிக்காகவும், அதில் நம் வாழ்க்கைக்காகவும் என்பதை மறுக்க முடியாது. அது சரி, நீங்கள் அண்டார்டிகா போக வேண்டுமென்றால் என்னவெல்லாம் நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா?

அண்டார்டிகா விமானப் போக்குவரத்து

Photo Courtesy: anta0187

அத்தியாவசியப் பொருள்கள்

21 முறை அண்டார்டிகா சென்று வந்த ராஸ் விர்ஜினியா என்ற சூழலியாளரின் அறிவுரைப்படி, சுற்றுலாப் பயணிகள் அண்டார்டிகாவுக்கு வெப்ப காலத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அவர் போகும்போது நிச்சயம் எடுத்துச்செல்லும் பொருள்கள் குறித்து விளக்குகிறார்.

“கூலிங் கிளாஸ் மிகவும் அவசியம். நடு இரவில் கூட சூரியன் இருப்பதால், அதை நேரடியாகப் பார்க்கும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க UVயில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் எடுத்துச் செல்வேன். இசை எனக்கு ஒரு உற்றத்துணையாக இருக்கும். பிடித்த பாடல்களை iPod அல்லது MP3 பிளேயர்களில் சேமித்துக்கொண்டு எடுத்துச் செல்வேன். சில ஆபத்தான நேரங்களில் வெளியே வரக்கூடாது என்று கூறிவிடுவார்கள். சில சமயம், அந்த உத்தரவு இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை கூட நீடிக்கும். அப்போது என் இசை நிச்சயம் கை கொடுக்கும். உறங்கும்போது பயன்படுத்த “eye mask” வேண்டும். சூரிய வெளிச்சம் என்னைத் தூங்க விடாமல் செய்யலாம். அதற்காக இது. குளிரைச் சமாளிக்க “Single Malt Scotch” பாட்டில் எடுத்துக்கொள்வேன். இதெல்லாம் இல்லாமல், ஒரு நாள் கூட என்னால் அங்குத் தாக்கு பிடிக்க முடியாது.”

வாய்ப்பு கிடைத்தால், அண்டார்டிகாவை ஒரு ரவுண்டு போய் பார்த்து விடலாமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement