தீபாவளிக்கு அக்டோபர் 15 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளிக்கு அக்டோபர் 15 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 18-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
இந்த வருடத்துக்கான சிறப்புப் பேருந்துகள் குறித்து முடிவெடுக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்டோபர் 15 முதல் 17-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 4,820 பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினமும் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுக்குமேல், இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், அண்ணா நகர் மேற்கு உள்ளிட்ட சென்னையின் ஐந்து பகுதியிலிருந்து இயக்கப்பட உள்ளது. எனினும் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அமைச்சர் தலைமையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முடிவில் முன்பதிவு தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.