இந்தக் கப்பல் திரும்பவே 3 கி.மீ தேவை! வியக்கவைக்கும் உலகின் ராட்சதக் கப்பல்கள் | Interesting facts about worlds biggest ships

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (26/09/2017)

கடைசி தொடர்பு:17:54 (26/09/2017)

இந்தக் கப்பல் திரும்பவே 3 கி.மீ தேவை! வியக்கவைக்கும் உலகின் ராட்சதக் கப்பல்கள்

தன் நிலப்பரப்பைத் தவிர்த்து எந்தவொரு நாடு பற்றியும் அறிந்திராத மனிதன், புதுப்புது நாடுகளைக் கண்டறியவும் மனித இனம் உலகம் முழுவதும் பரவவும் காரணமாக இருந்த வாகனம் கப்பல்தான். பழங்காலத்தில் மட்டுமல்ல; தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட தற்போதுகூட நாடுகளுக்கிடையே மிக முக்கியமான சரக்கு போக்குவரத்துகள் கப்பல்கள் மூலம்தான் நடக்கின்றன. இதனால்தான் உலகின் ஏதோ ஓர் இடத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் நம் வாகனங்களுக்குள் பெட்ரோலாக இருக்கிறது; நம் ஊரில் விளையும் மாம்பழங்கள் மற்றொரு நாட்டில் 'ஜாம்'மாக இருக்கிறது. வர்த்தகம் தவிர்த்து, ஒரு நாட்டின் ராணுவப் பாதுகாப்பு, கண்காணிப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கும் இந்தக் கப்பல்கள்தான் கைகொடுக்கின்றன. அப்படிப் பல்வேறு துறைகளில் பயன்பட்ட, பயன்பட்டுக்கொண்டிருக்கிற சில ராட்சதக் கப்பல்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Seawise Giant

Seawise Giant


இதுவரை உலகில் கட்டமைக்கப்பட்டதில் இதுதான் மிக நீளமான கப்பல். கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்குப் பயன்படும் இந்தக் கப்பலின் நீளம் 458 மீட்டர். செங்குத்தாக நிறுத்தி வைத்தால் ஈபிள் டவரைவிடவும் உயரமாக இருக்கும். ஜப்பானில் கட்டமைக்கப்பட்டு 1979- ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இந்தக் கப்பலின் பெயர் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது, பல்வேறு உரிமையாளர்களின் கீழ் இருந்திருக்கிறது. இந்தக் கப்பலில் 42 லட்சம் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லலாம். நீராவி இன்ஜின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இதன் வேகம் மணிக்கு 30 கி.மீ. இது முழுவதுமாகத் திரும்புவதற்கு குறைந்தபட்சம் 3 கி.மீ தூரமாவது தேவைப்படும். இதிலிருந்தே இதன் நீளத்தைப் புரிந்துகொள்ள முடியும். 1988-ம் ஆண்டு ஈராக் போரின்போது இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. உலகம் முழுவதும் சுற்றி 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த Seawise Giant, கடந்த 2010-ம் ஆண்டில் உடைப்பதற்காக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

OOCL Hong Kong

OOCL Hong Kong

தற்போது பயன்பாட்டில் இருக்கும் நீளமான கப்பல்களில் இதுவும் ஒன்று. OOCL என்ற சீன நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல், 2015-ம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டு கடந்த மே மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. சாம்சங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல் கன்டெய்னர்கள் ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் கன்டெய்னர்கள் ரக கப்பல்களிலேயே அதிக கொள்ளளவைக் கொண்டது OOCL Hong Kong. இதில் 21,413 TEU அளவுக்கு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும்.

Madrid Maersk

Madrid Maersk


கன்டெய்னர் வர்த்தகத்தில் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றான Maersk நிறுவனத்துக்குச் சொந்தமானது இது. OOCL Hong Kong-ஐவிட சற்று நீளம் குறைவானது. இரண்டு கப்பல்களிலும் ஒரே நிறுவனத்தின், ஒரே வகையிலான இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் இருக்கும் இரட்டை இன்ஜின்கள் இந்தக் கப்பலுக்கு அதிக சக்தியை அளிக்கின்றன.கடலில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 47 கி.மீ. இந்தக் கப்பலில் 20,568 TEU அளவுக்கு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும்.


Mozah 

 Mozah 


கத்தார் அரசுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், LPG எனப்படும் திரவ பெட்ரோலிய வாயுவைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. சாம்சங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இது, 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தக் கப்பலில் 26 கோடி லிட்டர் பெட்ரோலிய வாயு திரவத்தைக் கொண்டு செல்ல முடியும். கடலில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 36 கி.மீ. 


USS Enterprise

USS Enterprise கப்பல்


அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் அணு சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பல் என்ற சிறப்பைக் கொண்டது. 1958-ல் கட்ட தொடங்கப்பட்டு, 1961-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் நீளம் 342 மீட்டர்கள். அமெரிக்க கப்பற்படைக்கு மிகப்பெரிய பலமாக இருந்த இந்தக் கப்பலில் அதிநவீன ரேடார்கள் மற்றும் தாக்குதலுக்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. கப்பல் இயங்குவதற்கு தேவையான சக்தி, இதிலிருந்த 8 அணு உலைகள் மூலம் பெறப்பட்டது. அணு சக்தியால் இயங்குவதால் அடிக்கடி எரிபொருள் நிரப்ப தேவையிருக்காது என்பது இதன் சிறப்பு. இந்த கப்பலில் அதிக பட்சம் 5,828 நபர்கள் வரை பயணிக்க முடியும்;  60-க்கும் மேற்பட்ட போர்விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். 50 வருடங்களாக பயன்பாட்டில் இருந்த இது 2012-ம் ஆண்டு இராணுவத்தில் இருந்து விடைபெற்றது.


டிரெண்டிங் @ விகடன்