இயற்கை எழில்... கொஞ்சம் திகில்... பயமும் பசுமையும் கலந்த கிராமங்கள்!

பேய் பிசாசுகள் பற்றிய கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. எத்தனை முறை கேட்டாலும், யார் சொல்ல கேட்டாலும் கொஞ்சம்கூட சலிப்பு தட்டாதவை; எனவேதான் எழுத்தாளர்களும், இயக்குநர்களும் இன்னும் அவற்றை உயிர்ப்புடனே வைத்திருகின்றனர். புனைவுகளில் மட்டுமல்ல; ஒவ்வோர் ஊரிலும் இப்படிப்பட்ட கர்ணவழிக் கதைகள் இருக்கின்றன. அப்படிக் காலம்காலமாக நம்பவைக்கப்பட்டிருக்கும் சில ஊர்களின் கதை இவை. 

பொம்மை

பொம்மை தீவு

ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்.... ஜூலியன் சண்டனா பெரேரா என்கிற மனிதர் மெக்சிகோவின் xochimilco  என்கிற இடத்திற்குக் கால்வாய் வழியாகச் செல்கிறார். பயணிக்கிற வழியில் ஓர் இளம்பெண்ணின் சடலத்தைப் பார்க்கிறார். பக்கத்தில் ஒரு பொம்மை கிடக்கிறது. அன்றைய இரவு அந்தப் பகுதியில் வினோத சத்தங்கள் வருவதைக் கேட்கிறார். ஒரு பெண் அழுவது போலவும் சில கால் தடங்களையும் பார்க்கிறார். அடுத்த நாள் கால்வாயில் கிடந்த பொம்மையை அங்கிருக்கும் மரத்தில் தொங்க விடுகிறார். பிறகான நாள்களில் சினாம்பஸ் பகுதியில் மரங்கள் எங்கும் நூற்றுக்கும் மேலான பொம்மைகளை மரங்களிலும் மாட்டி வைக்கிறார். சத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இறந்த பெண்ணை சமாதானப்படுத்துவதற்கும் பல வகையான  பொம்மைகளை எல்லா இடங்களிலும் கட்டி வைக்கிறார். சில இரவுகளில் பொம்மைகளிலிருந்து சத்தங்கள் வந்ததாகவும்  சொல்லியிருக்கிறார். முப்பது வருடங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்தவர் மரங்கள் முழுதும் பல நூறு பொம்மைகளை மாட்டி வைத்திருக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பெரேரா  இறந்து போகிறார். 

பொம்மை

மேற்கண்ட சமபவங்கள் நடந்து முடிந்து சிலகாலம் கழித்து, ஊடக வெளிச்சத்தின் பயனாக பொம்மை தீவு வெளி உலகிற்குத் தெரிய வருகிறது. பல சுற்றுலா பயணிகளும் தீவுக்கு வந்து செல்கின்றனர். வருகிறவர்கள் எல்லோரும் திகிலோடு பொம்மைகளைத் தீவில் கட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்தத் தீவு இருக்கிற இடத்தில் மயான அமைதி நிலவுவதாகவும் உடைந்த நிலையில் கிடக்கிற பொம்மைகள் வேறு விதமான ஒரு பய உணர்வைத் தருவதாகவும் பயணிகள் நெட்டில் தட்டி விடுகிறார்கள். பெரேரா இறந்து 17 வருடங்கள் கடந்த பிறகும் அங்கே வினோத சத்தங்கள் கேட்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்தச் சத்தம் இறந்து போன பெண்ணின் சத்தம் எனவும் சிலர் பெரேராவின் சத்தம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  இறந்த பெண், பொம்மை, பெரேரா என அந்தத் தீவு பற்றிய எந்தத் தெளிவான விஷயங்களும் இல்லை. ஆனால் தீவில்  ஏதோ ஒன்று இருப்பதாய் மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். பேய் பிசாசு இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும், பல வருடங்களாகத் தனிமையில் இருந்த பெரேரா மன அழுத்தம் காரணமாக பொம்மைகளை மரங்களில் தொங்க விட்டிருக்கலாம் என்கிறார்கள் இங்கு வந்துபோன ஆராய்ச்சியாளர்கள். 

பொம்மை

மீனவக்கிராமம் அவுட்டோவன்

சீனாவின் மீனவக்கிராமம் அவுட்டோவன். செங்க்ஷி தீவில் இருக்கிறது. மீன் பிடிப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்ட இப்பகுதி மக்கள் 1990-ம் ஆண்டின் முற்பகுதியில் போதிய உணவு மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் கிராமத்திலிருந்து நகர்ப்பகுதிகளுக்கு குடியமர்த்தப்படுகின்றனர். கிராமம் யாருமின்றி அமைதியாய் இருந்திருக்கிறது. இந்த ஒரு காரணமே போதுமே! உடனே இந்தக் கிராமத்தை பேய் கிராமம் எனக் கதைகட்டி விடுகின்றனர் மற்றவர்கள். நாட்கள் செல்லச் செல்ல கிராமம் உயிர்ப்பிக்க ஆரம்பிக்கிறது.

வீடு வாசல் என எல்லா இடங்களிலும் பசுமை சூழ ஆரம்பிக்கிறது. பேய் கிராமம் என ஒதுக்கி வைத்த கிராமம் இப்போது பசுமையை போர்த்திக் கொண்டிருக்கிறது. இப்போதும் பேய் இருக்கிறது என்ற வதந்தி சுற்றிக்கொண்டிருப்பதால் யாரும் கிராமத்திற்கு செல்வதில்லை. மறு குடியமர்தல் சாத்தியமில்லை என்ற சீன அரசு, இப்போது அவுட்டோவன் கிராமத்தைச் சுற்றுலாத்தலமாக அறிவித்திருக்கிறது. மனிதர்களே இல்லாத இந்தக் கிராமம், முழுக்க முழுக்க இயற்கையின் கைவண்ணத்தில் பசுமையாக காட்சியளிக்கிறது. ஒரு வேலை உலகம் அழிவைச் சந்தித்தால் அடுத்த இருபது ஆண்டுகளில் பூமி இப்படித்தான் காட்சியளிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

டர்காவ்ஸ்

இறப்பின் நகரம்

ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள கிராமத்தின் பெயர் டர்காவ்ஸ். ஐந்து உயரமான மலைகளுக்கு இடையில் குன்று போல அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். இந்த இடத்திற்கு 'இறப்பின் நகரம்' என்கிற புனைப்பெயரும் இருக்கிறது. இதுவரை யாரும் சென்று உயிருடன் திரும்பியதில்லை என்கிறார்கள். இங்கு இருக்கிற ஒவ்வொரு வீட்டுத் தளங்களிலும் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஒரு வீட்டின் முகப்பில் இருக்கிற கிணற்றில் ஓடீசியா மக்கள் நாணயங்களை வீசுகிறார்கள். அப்படி நாணயங்களை வீசுவதால் இறந்தவர் சொர்க்கம் செல்வார் என்று நம்பப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கிராமத்தை ஆய்வு செய்ததில் அங்கிருந்த வீடுகளில் இறந்து போன உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள். படகு வடிவ மரப்பெட்டியில் இறந்தவர்கள் புதைத்திருக்கிறார்கள் என்பதைக்  கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாகவும் மோசமான பாதை காரணமாகவும் யாரும் போவதில்லை என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். 

இப்படிப்பட்ட கட்டுக்கதைகளால் இயற்கையின் எழிலோடு, திகிலையும் சுமந்து நின்றுகொண்டிருக்கின்றன இந்தக் கிராமங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!