Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின் முதல் தோனி வரை... அம்மாடியோவ்! கிரிக்கெட்டர்களிடம் இத்தனை கார்களா?

Chennai: 

கிரிக்கெட்டில் ஸ்கோர் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும். அவங்க வீட்டு கேரேஜிலும் காஸ்ட்லி கார்களாக வாங்கி ஸ்கோர் பண்ணுவது நம்ம கிரிக்கெட்டர்களின் ஹாபி. அப்படி நம் ஊர் கிரிக்கெட்டர்களின் வாகனங்கள் என்னென்னனு ஒரு சின்ன டூர்!

கிரிக்கெட்

விராட் கோலி

களத்தில் நின்று ஆடி விளையாடும் கோலிக்கு ரொம்பப் பிடித்தது ஆடி கார்கள்தான். திடீர்னு ஒரு ஷார்ட்ஸ், டீ-ஷர்ட்டோட கிளம்பிப் போய் ஆடி ஷோ ரூமில் ஏதாவது ஆடி கார் புக் பண்ணிட்டு வருவது கோலியின் ஸ்டைல். அப்படி இவர் கடைசியாக வாங்கிய கார் `ஆடி A8'. இவரிடம் ஆடி R8 V10, R8 LMX, ஆடி A8 W12, Q7, Q5, A6, S6 என எக்கச்சக்க ஆடிகள் உள்ளன. இதில் R8 கார், 2 சீட்டர் கார்தான். டெல்லியில் புதிதாகத் திறந்திருக்கும் ரெஸ்டாரன்ட்டில் அடிக்கடி கோலியின் R8 காரைப் பார்க்கலாம். இது தவிர, குட்டிக் குட்டி ரூரல் ஏரியாக்களுக்கு என்றால், இவரின் ஃபார்ச்சூனர் கிளம்பும். “மிட் நைட். ஆளே இல்லாத ஹைவேஸ்ல என்னோட ஆடி காரை விரட்டுறதுதான் எனக்கு கிரிக்கெட்டுக்குப் பிறகு வாழ்க்கையில் ரொம்பப் பிடிச்ச விஷயம்!’’ என்று ஒரு பேட்டியில் உளமகிழ்ந்திருக்கிறார் கோலி. இனிமேல் ஆடி கம்பெனியிலிருந்து கார் ரிலீஸானால்தான் கோலிக்கு வேலை. 

sachin

சச்சின் டெண்டுல்கர்

கோலிக்கு ஆடி என்றால் சச்சினுக்கு பிஎம்டபிள்யூ. ‘தமிழ் தலைவாஸ்’ தவிர, பிஎம்டபிள்யூவின் பிராண்ட் அம்பாஸடரும் சச்சின்தான். திடீரென பிஎம்டபிள்யூ ஃபேக்டரிக்குள் என்ட்ரி கொடுத்து, ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுப்பாராம் சச்சின். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், X5 M, M6 கிராண் கூபே, M5, பிஎம்டபிள்யூ i8 என, சச்சினின் கேரேஜில் பிஎம்டபிள்யூ வாசம். இதில் M5 கார் மொத்தமே 300 கார்கள்தான் தயாரிக்கப்பட்டன. அதில் ஒன்று சச்சினின் கிரே கலர் M5. இதில் i8, பார்த்தவுடன் கொள்ளைகொள்ளும் செம ஸ்போர்ட்ஸ் கார். இரண்டு சீட்டர் காரான இதுதான் சச்சினின் ஃபேவரைட். காரணம், இது பிஎம்டபிள்யூவே சச்சினுக்குப் பரிசளித்த கார்.  “இதன் ஹேண்ட்லிங் நான் வேறு எந்த கார்களிலும் பார்த்ததில்லை’’ என்று உருகுவார். இவரின் அனைத்து பிஎம்டபிள்யூகளும் 100 கி.மீ-யை 4 விநாடியில் தாண்டக்கூடியது.

கொஞ்ச நாள்களுக்கு முன்பு மும்பையில் சிவப்பு நிற ஃபெராரி கார் பறந்தால், அதில் சச்சின் இருக்கார்னு அர்த்தம். இப்போது ஒரு பிசினஸ் புள்ளியிடம் ஃபெராரியை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் சச்சின். இவரின் இப்போதைய செல்லம், `நிஸான் GTR' என்னும் ஸ்போர்ட்ஸ் கார். ``உலகம் முழுக்க இதற்கு ரசிகர்கள் உண்டு. அதில் நானும் ஒருவன்’’ என்பார். 549 குதிரை சக்தியை வெளிப்படுத்தும் GTR, 100 கி.மீ-யை 2.8 விநாடியில் தாண்டும். இது தவிர, ஒரு பென்ஸ் C63 AMG காரும் இவரிடம் உண்டு.

yuvaraj

யுவராஜ் சிங்

பேட்டிங்காக இருந்தாலும் சரி, ஃபீல்டிங்காக இருந்தாலும் சரி, கேன்சராக இருந்தாலும் சரி - அடித்து முன்னேறுவது யுவராஜின் ஸ்டைல். யுவராஜும் பெரிய கார் கலெக்டர். ஆரம்பத்தில் சாதாரண ஹோண்டா சிட்டி பயன்படுத்திய யுவராஜ், அதற்குப் பிறகு `போர்ஷே 911' பயன்படுத்தினார். பிறகு இளைஞர்களின் கனவு காரான `லம்போகினி' ரொம்ப நாள்களாகப் பயன்படுத்தி வந்தார். ஆரஞ்சு வண்ண இந்த லம்போகினியில் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரை மாட்டுத்தாவணியை ரீச் பண்ணலாம். ஆனால், இதன் அனுபவத்தை உணர வேண்டும் என்றால், ரேஸ் ட்ராக் போன்ற சாலை தேவை. அதனால், டெல்லி புத் ரேஸ் சர்க்யூட்டில் அடிக்கடி லம்போகினியில் பறப்பாராம் யுவி. சச்சினுக்குப் பிடித்த வீரர் என்பதாலோ என்னவோ, கார் விஷயத்தில் சச்சின் வழியை ஃபாலோ செய்கிறார். பிஎம்டபிள்யூ M5 காரில் யுவராஜை அடிக்கடி பார்க்கலாம். இது தவிர, ரவிசாஸ்திரி பரிசளித்த ஆடி Q5 காரும் யுவராஜிடம் உண்டு.

ganguly

சவுரவ் கங்குலி

கங்குலிக்கு பென்ஸ் ஃபீவர். ஆம், பென்ஸ் என்றால் கங்குலிக்கு உயிர். E க்ளாஸ் கூபே, CLK, M க்ளாஸ், C220 என இவரிடம் 20-க்கும் மேற்பட்ட பென்ஸ் கார்கள் இருக்கின்றன. அதிலும் கன்வெர்ட்டிபிள் கார்கள் என்றால் ரொம்ப இஷ்டம். கன்வெர்ட்டிபிள் என்றால், காரின் ரூஃபைத் திறந்து பைக் போல் வெளிக்காற்று மூஞ்சியில் அடிக்கும்படியும் பயணிக்கலாம். லேட்டஸ்ட்டாக அவர் வாங்கியிருக்கும் பென்ஸ் CLK கன்வெர்ட்டிபிள்தான் கங்குலியின் ஃபேவரைட். இது தவிர, நான்கு பிஎம்டபிள்யூக்கள், இரண்டு ஆடி, ஒரு ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி என்றும் நீள்கிறது இந்த ‘பெங்கால் டைகர்’-ன் கார் கலெக்‌ஷன்.

harbajan

ஹர்பஜன் சிங்

ஸ்பின்னர் ஹர்பஜனுக்குப் பிடித்தது, எஸ்யூவி வகை கார்கள். ஹர்பஜனுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. இந்திய கிரிக்கெட்டர்களில் ஹம்மர் கார் வாங்கிய முதல் வீரர், ஹர்பஜன் சிங்தான். ஹம்மரில் மூன்று வகை உண்டு. H1, H2, H3. இதில் H3தான் கொஞ்சம் பட்ஜெட் குறைந்த ஹம்மர். சுமார் 2.5 கோடி. வேரியன்ட் குறையக் குறைய, விலை அதிகரிக்கும். ஹெச்3-ன் ஸ்பெஷல் 3.5 அடி தண்ணீரில் மூழ்கிச் செல்லக்கூடிய திறன்கொண்டது. அப்படியென்றால், H1 வேற லெவல். பஜ்ஜியிடம் இருப்பது H2. 6,200 சிசி, 8 சிலிண்டர்கொண்ட இதற்கு மேடு-பள்ளங்கள், சேறு சகதி, பாறைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. ‘நான் ஏறிப் போறவன்டா’ என்பதுபோல், எந்த வகையிலான சாலைகளிலும் ஏறிச் செல்வது ஹம்மரின் ஸ்பெஷல். தனது ஜெர்ஸி நம்பரான 0003 எனும் எண்ணையே தனது ஹம்மருக்கும் வாங்கிவிட்டார் ஹர்பஜன். இது தவிர, பென்ஸ் GL க்ளாஸ், ஃபோர்டு எண்டேவர் போன்ற கார்களும் இவரிடம் உண்டு.

ரோஹித் ஷர்மா

பிஎம்டபிள்யூதான் கிரிக்கெட்டர்களின் கெத்து கார். இப்படித்தான் நினைக்கிறார் ரோஹித் ஷர்மா. ரோஹித்தும் கிரிக்கெட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களிலேயே 1.50 கோடி ரூபாய் விலைகொண்ட பிஎம்டபிள்யூ வாங்கிவிட்டார். இது தனது கனவு கார் என்று சொல்லிவந்த ரோஹித், M5 எனும் ஸ்போர்ட்ஸ் சலூன் காரில் பறக்க ஆரம்பித்துவிட்டார். இந்த கார் வாங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சச்சினும் யுவராஜும் வைத்திருப்பது பிஎம்டபிள்யூ M5. மற்றொன்று “இந்த காரில்தான் சோலார் சென்ஸார் இருக்கிறது. வெளியே உள்ள வெப்பநிலைக்கு ஏற்ப உள்ளே கதகதவெனப் பயணிக்கலாம்’' என்கிறார் ரோஹித் ஷர்மா.

suresh

சுரேஷ் ரெய்னா

பெரும்பான்மையான கார்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸராகக் கிடைக்கும். அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவும் லக்கி ஃபெல்லோ. மினி கூப்பர், பிஎம்டபிள்யூ போன்றவை இவருக்குப் பரிசாக வந்த கார்கள். இது தவிர, மஞ்சள் நிற போர்ஷே பாக்ஸ்டர் காரை தன் சொந்தச் செலவில் வாங்கியிருக்கிறார் ரெய்னா. மஞ்சள் நிற காரைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம் என்கிறார் ரெய்னா. ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான இவரின் ஜெர்ஸி கலர் - மஞ்சள். உ.பி-யிலிருந்து இந்த போர்ஷேவில் லாங் டிரைவ் போவது ரெய்னாவுக்குப் பிடித்த விஷயம். 

 

sehwag
வீரேந்தர் சேவாக்

கிரிக்கெட் உலகத்துக்கே தெரியும். பென்ட்லி கார் வருகிறது என்றால், அதிரடி மன்னன் சேவாக் வருகிறார் என அர்த்தம். இவரின் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் காரின் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய். பயிற்சியின்போது, நம் ஊர் பசங்க கிரிக்கெட் பொருள்களை சைக்கிளிலோ, பைக்கிலோ ஏற்றி வருவதுபோல், சேவாக்கின் பென்ட்லியில்தான் பொருள்கள் வந்திறங்கும். இது தவிர, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும் சேவாக்கிடம் இருக்கிறது.

 

ஹர்திக் பாண்டியா

‘காக்க காக்க’ வில்லன் பாண்டியா மாதிரி, ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் வில்லனாக இருந்து டெரர் காட்டிய ஹர்திக் பாண்டியாவும் கார் ஃப்ரீக்தான். ஒவ்வொரு முறை டெல்லியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவுக்கு, குடும்பத்துடன் பிக்னிக் செல்வதுபோல் கிளம்பி புதுப்புது கார்களுடன் செல்ஃபி எடுப்பது ஹர்திக் பாண்டியா குடும்பத்துக்குப் பிடித்தமான விஷயம். இவரிடம் பெரிய கார் கலெக்‌ஷனெல்லாம் இல்லை. ஒரு பென்ஸ் மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ இரண்டும்தான் இவரின் கேரேஜில் வீற்றிருக்கின்றன. லேட்டஸ்ட்டாக தான் சம்பாதித்த சொந்தப் பணத்தில் தன் தந்தைக்கு ஜீப் காம்பஸ் கார் பரிசளித்திருக்கிறார் ஹர்திக்.

ராகுல் டிராவிட்

‘இந்தியாவின் தடுப்புச்சுவர்’ ராகுல் டிராவிட்டுக்கு 2004-ம் ஆண்டில் ஐசிசி சார்பாக, ஒரு ஹூண்டாய் டூஸான் எனும் எஸ்யூவி பரிசளிக்கப்பட்டது. எளிமை விரும்பியான ராகுலும் அதில்தான் பயணத்தைத் தொடர்ந்தார். அதற்குப் பிறகு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும், ஒரு ஆடி Q5 எஸ்யூவியும் வாங்கினார் டிராவிட். அவரின் லேட்டஸ்ட் ஃபேவரைட் கார், சிவப்பு நிற போர்ஷே 911 டர்போ.

dravid

மஹேந்திர சிங் தோனி

‘உங்களுக்கு கார் பிடிக்குமா... பைக் பிடிக்குமா?’ என்றால், ‘இரண்டுமே’ என்று யோசிக்காமல் பதில் சொல்வார் தோனி. கவாஸாகி நின்ஜா H2, ஹெல்கேட் X132, நின்ஜா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், யமஹா தண்டர்கேட், டுகாட்டி 1098 என்று மொத்தம் 22 சூப்பர் பைக்குகள் உறுமிக்கொண்டிருக்கின்றன தோனியிடம். இதில் நின்ஜா H2 பைக்கின் ஆன்ரோடு விலை 35 லட்சம். இதன் டாப் ஸ்பீடு 300 கி.மீ. இது தவிர, க்ளாசிக் பைக்குகள் மீதும் தோனிக்கு ஒரு கண். BSA கோல்டுஸ்டார், நார்டன் ஜூபிளி, சுஸூகி ஷோகன், யமஹா RD350 என்று பழைய காலத்து பைக்குகளையும் ‘பவர் பாண்டி’ ராஜ்கிரண் போல் பட்டி டிங்க்கரிங் பார்த்துக்கொண்டிருப்பாராம் தோனி.

dhoni

கார்களும் தோனிக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு காரை நினைத்தால், அது தோனியின் கேரேஜில் இருக்கலாம். சாம்பிளுக்கு சில கார்கள். ஃபெராரி 590 GTO, ஆடி Q7, ஹம்மர் H2, அவுட்லாண்டர், லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற GMC சியரா என்னும் முரட்டுத்தனமான எஸ்யூவி, ஆடி Q5 எனக் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கார்கள் தோனி வசம். மிட்சுபிஷி பஜேரோ, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா கரோலா ஆல்டிஸ், மாருதி SX4 போன்ற லோக்கல் பிராண்டுகளும் இதில் அடக்கம். பைக்குகளைப்போல் கார்களையும் மாடிஃபிகேஷன் செய்வது என்றால், லீவு போட்டு மெக்கானிக் கூடவே இருந்து ஐடியா கொடுப்பாராம் தோனி. தன்னிடமிருந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை ஹம்மர் லெவலுக்கு ரீ-மாடிஃபிகேஷன் செய்து, அதில் வலம்வருவது என்றால் தோனிக்கு இஷ்டம். 

அனில் கும்ப்ளே

ஒரு டீமில் மொத்தம் 11 பேர் என்றால், அதில் 10 விக்கெட்களைச் சாய்த்து, ‘அவ்வளவுதானா' என்று கேட்டவர் அனில் கும்ப்ளே. கும்ப்ளேவிடமிருப்பது இரண்டே இரண்டு கார்கள் மட்டும்தான். ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி மற்றும் பென்ஸ் E க்ளாஸ். தன் சொந்த ஊரான பெங்களூரில், பென்ஸ் E க்ளாஸ் காரில் தானாகவே பென்ஸை ஓட்டிச் சென்று ஷாப்பிங் பண்ணுவது கும்ப்ளேவின் பாலிசி.

shihar

ஷிகர் தவான்

இந்த லிஸ்ட்டில் ஷிகர் தவானை மிஸ்பண்ணினால் அது மகா பாவமாகிவிடும். படா படா லக்ஸூரி கார்கள்/பைக்குகள் தவிர்த்து கிரிக்கெட்டர்களில் படகுகளையும் தனது கேரேஜில் நிறுத்திவைத்திருப்பவர் ஷிகர் தவான். உலகின் தலைசிறந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் இவரே! இதுதவிர, ஜாகுவார், பிஎம்டபிள்யூ i8, பெர்சிடீஸ் பென்ஸ் என சொகுசு கார் ப்ரியர் ஷிகர் தவான். ஹார்லி டேவிட்சன், ஹயபூஸா என்று பைக்குகளையும் நிறுத்திவைத்திருக்கிறார். சிட்டிக்குள் பென்ஸ் காரை செல்ஃப் டிரைவில் பறப்பதுதான் தவானுக்குப் பிடிக்கும்.

அஷ்வின் ரவிச்சந்திரன்

அஷ்வினும் கார் ப்ரியர்தான். சுத்தத் தமிழனான அஷ்வினிடமும் எக்கச்சக்க கார்கள் இருந்தாலும், அவர் பயணிப்பது என்னவோ டொயோட்டா ஃபார்ச்சூனரில்தான். 

mitali raj

மித்தாலி ராஜ்

உலகக்கோப்பையில் பெண்கள் கிரிக்கெட் டீமை இந்தியாவை ஃபைனலுக்கு இழுத்துச் சென்ற நம்பிக்கை - கேப்டன் மித்தாலி ராஜ். இந்த ஆகஸ்ட் மாதம், தெலங்கானா பேட்மின்டன் அசோஷியேஷன் துணைத் தலைவர் சாமுண்டேஸ்வரநாத், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார் மித்தாலிக்கு. தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட மித்தாலி ராஜ், அதற்கு முன்பு வரை 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாதாரண மாருதி சுஸூகி காரில்தான் வலம் வந்தார்.

karun

கருண் நாயர்

ஒண்ணு பண்ணினாலும் நின்னு அடித்தார் கருண்நாயர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முச்சதம் என்றால் சும்மாவா? சிவப்பு நிற ஃபோர்டு மஸ்டாங் காரை, கிட்டத்தட்ட 90 லட்சம் செலவில் வாங்கிவிட்டார் கருண். மஸ்டாங்கை மறந்தவர்களுக்காக... டெத் ரேஸ், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், நீட் ஃபார் ஸ்பீட் போன்ற படங்களில் குதிரை லோகோவுடன் ஒரு கார் பறக்குமே... அதே கார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement