Published:Updated:

பகத்சிங்கின் இறுதி ஆசை என்ன தெரியுமா ?

பகத்சிங்கின் இறுதி ஆசை என்ன தெரியுமா ?
பகத்சிங்கின் இறுதி ஆசை என்ன தெரியுமா ?

து ஆங்கிலேயே காலனியாட்சியை எதிர்த்த காலம். இதன்பொருட்டே ‘இந்திய வீரர்களை பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்பட வைத்தார்’ என்று கத்தார் புரட்சிகர கட்சியின் தலைவர் சர்தார் சிங் சராபா கைதுசெய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. 16-11-1915 அன்று தூக்குமேடை ஏறிய சராபா, “எனது தேசத்தை சுதந்திர மண்ணாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் ஒன்றை மட்டுமே விரும்புகிறேன். அது, எம் தேசத்தின் சுதந்திரம். எனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை, எத்தனைமுறை அமைந்தாலும், அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்வேன்” என்று முழங்கியபடியே தூக்குக்கயிற்றை முத்தமிடுகிறார். அப்போது அவருக்கு வயது 20. இம்மாவீரனின் முழக்கம், ஓர் சிறுவனை உலுக்குகிறது. ‘வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும். மடிந்தால் இவர் போலவே நாட்டுக்காக மடிய வேண்டும்’ என்று,  அன்று சூளுரை எடுத்த அச்சிறுவனே, பின்னாளில் நாட்டுக்காக தன்னையே தியாகம் செய்து, தனது 23-வது வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டான். அன்றைய ஆங்கிலேயே ஆட்சி அவனுக்கு சூட்டிய பெயர் ‘தீவிரவாதி’. ஆனால் வரலாறு அவனுக்கு சூட்டியப் பெயர் ‘மாவீரன் பகத்சிங்’.

பகத்சிங்கின் சூளுரை :

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத போராளி பகத்சிங். இன்றும் இளைஞர்கள் நெஞ்சில் விடுதலை வேள்வியைப் பற்ற வைக்கும் தீப்பொறியாக இருக்கிறார் அவர். 28-9-1907 அன்று லைலாபூர் மாவட்டத்திலுள்ள பங்கா எனும் கிராமத்தில் வித்யாவதி - கிஷன்சிங் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பகத்சிங். மதம், சாதி, வர்க்கம் என்ற எவ்வித பிரிவினைக்கும் எதிரானவர் பகத்சிங். அவர் பிறப்பும் இதை போற்றும்விதமாகவே இருக்கிறது. அவர் பிறந்த பங்கா, தற்சமயம் பாகிஸ்தானில் இருக்கிறது. கத்தார் கட்சி என்பது ஆயுதப் போராட்டத்தின் மூலம் விவசாயிகளையும், ராணுவத்தினரையும் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வலியுறுத்திய கட்சி. எனவே, சிறு வயதிலேயே சராபா, பகத்சிங்-கின் ஆதர்ஷ நாயகனாக தோன்றியதால் அதன் தாக்கம், பகத்சிங்கின் உணர்வுகள், செயல்பாடுகளில் வெளிப்படாமல் இல்லை. அவருக்குள் ஒரு புரட்சிகர குணாதிசயத்தை வெளிப்படுத்தியபடியே வந்தன. இதுமட்டுமல்லாமல் மற்றொரு முக்கிய சம்பவம் பகத்சிங்-கை மிகத்தீவிரமாக புரட்சிகர நடவடிக்கைகளுக்கு மாற்றியது.

13-ஏப்ரல் 1919 அன்று ஒட்டுமொத்த அகிலத்தையும் உலுக்கும் இந்திய மக்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட அநீதி அரங்கேறியது. ஜாலியன் வாலாபாக் என்ற பகுதியில் நிராயுதபாணியாக நின்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்களை, ஜெனரல் டயர் என்ற கொடூரனின் ஆங்கிலேயப் படை, 1,600 முறை சுட்டது. அதிகாரபூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டதாக கூறினாலும், அங்கே இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய மக்கள் ஆயிரத்துக்கும் மேல். அப்போது லாகூரில் படித்துக்கொண்டிருக்கும் பகத்சிங்குக்கு வயது 12. அங்கிருந்து ஜாலியன் வாலாபாக் வந்து, இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கொண்டுவந்திருந்த கண்ணாடி பாட்டிலில் போடுகிறார். 'இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.

பகத்சிங்கை மாற்றிய 'தோழர்':

பகத்சிங்கின் சுவாசம், இயக்கம் எல்லாமே சுதந்திரத்தை நோக்கி மட்டுமே. அக்காலகட்டத்தில் ஆங்கிலேயே அரசை மகாத்மா காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கம்’ அசைத்துப் பார்த்தது. ஒருகட்டத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற்றுக்கொண்டது வீரியமிகு சிந்தனை கொண்ட இளம் பட்டாளத்துக்கு வருத்தத்தை உண்டாக்கியது. அதில் பகத்சிங்கும் ஒருவர். அந்தநேரத்தில் பகத்சிங்குக்கு அவரின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. "இது திருமணத்துக்குரிய நேரமல்ல; நாடு என்னை அழைக்கிறது" என்று அவரின் தந்தை கிஷான் சிங்குக்கு கடிதம் எழுதினார். ஆனால், அவரின் தந்தையோ ‘உன் பாட்டிக்காக (தன் தாயார்) திருமணத்துக்கு நீ ஒப்புகொள்ள வேண்டும்’ என்றார். எனினும் மீண்டும் தந்தைக்கு இப்படி கடிதம் எழுதுகிறார் பகத்சிங். “நீங்கள் பாட்டிக்காக கவலைப்படுகிறீர்கள். நான் 33 கோடி இந்திய மக்களின் தாயாக விளங்கும் நம் பாரத மாதாவுக்காக கவலைப்படுகிறேன். இந்தியாவின் நலனுக்காக நான் எல்லாவற்றையுமே தியாகம் செய்கிறேன்” என்றார். அவர்தான் பகத்சிங். நாட்டுக்காக தன் சொந்த நலன்களை, அபிலாசைகளையெல்லாம் துறந்த தேசத்துறவி அவர். இந்த நிலையில்தான் பகத்சிங்குக்கு கான்பூர்வாசம் அவரின் வாழ்வில் புதிய தடம் பதித்தது. திருமண நிர்பந்தத்திலிருந்து தப்பிக்க 1924-ல் கான்பூர் வந்தார். அங்குதான் சந்திரசேகர் ஆசாத், சிவவர்மா, பாதுகேஷ்வர் தத், ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி போன்றோரைச் சந்தித்தார். அவர்கள் மூலம் மற்றொரு நண்பரைச் சந்திக்கிறார். அவர் கம்யூனிஸ்ட் கொள்கையின் தந்தை ‘கார்ல் மார்க்ஸ்’. தனது இந்திய நண்பர்கள் மூலம் கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலை முழுமையாக வாசித்து முடித்தார். இங்கிருந்துதான் மாவீரன் பகத்சிங், தோழர் பகத்சிங்காக பரிணமிக்கிறார். இயல்பாகவே அவருக்குள் இருந்த அற உணர்வும், அத்தருணத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட அக்டோபர் புரட்சியும் அவரை கம்யூனிச கொள்கையின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்தது. 

பகத்சிங்கின் திட்டங்கள் :

தோழர்களுடன் இணைந்து ‘இந்தியக் குடியரசு சங்கம்’ (Hindustan Republic Association) எனும் அமைப்பை சசீந்திரநாத் சன்யால். இந்த அமைப்பில் பகத்சிங்-கும் ஒருவர். குடியரசு சங்கத்துக்காக நிதி தேவைப்பட, ஆங்கிலேயே அரசு கக்கோரி எனுமிடத்தில் ரயிலில் கொண்டுவந்த பணத்தை கொள்ளையடிக்க தோழர்கள் முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் 19-12-1927 அன்று தூக்கிலிடப்பட்டனர் இராம் பிரசாத் பிஸ்மில், அசபுல்லாகான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோர்.“எங்கள் தலையை தூக்குக் கயிற்றில் வைக்க, எங்கள் இதயங்களில் எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது. எங்களை தூக்குக் கயிற்றில் போடுபவனின் கைகள் வலுவாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும்” என மரணத்தை எதிர்கொண்டபோதும் அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட கம்பீரம், பகத்சிங்கை மேலும் உரமடையச் செய்தது. இதன்பிறகு ‘நவஜவான் பாரத் சபை’ என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார் பகத்சிங். ‘விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது, ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது, மதவாதப் போக்குகளற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது’ போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்படத் தொடங்கினர். ‘நமது இறுதி லட்சியம் சோசலிசம்’ என்பதை வலியுறுத்திய பகத்சிங், 1928 செப்டம்பர் 8, 9-ம் தேதிகளில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்’ (HRSA) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார். அப்போது அந்த அமைப்பைச் சேர்ந்த பகவதி சரண் வோரா எழுதிய அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

“புரட்சி என்பது அங்கொன்றும், இங்கொன்றும் குண்டுகளை வீசும் செயலல்ல. புரட்சி கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அது மனிதனுக்கு எதிரானது அல்ல” என்பதே. இந்தக் கூற்று இரண்டு உண்மைகளை முன்வைக்கிறது. ஆயுத வழிபாடோ,  இறைவழிபாடோ கொண்டவரல்ல பகத்சிங் என்பதே அது. அவரின் நோக்கம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களின் விடுதலையும்தான் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங். "தொழிலாளி வர்க்கம் அந்நிய மூலதனத்தின் தாக்குதல், இந்திய மூலதனத்தின் தாக்குதல் என்று இரண்டையும் எதிர்கொள்கிறது. சோசலிசம் மட்டுமே முழு சுதந்திரத்தை வழங்கும்” என்ற அவரின் அறிக்கையை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். 

பகத்சிங்கின் செயல்பாடுகள் இடதுசாரி கருத்தியல்களுடன் வீரியமடைந்ததால் இயல்பாகவே அவரை 'புரட்சிக்காரன்' என்று அப்போதைய ஆங்கிலேயே அரசு முத்திரை குத்திவிட்டது. அதைப் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட பகத்சிங், ‘புரட்சிக்காரன் எனில் குண்டுகளும், துப்பாக்கிகளும் வைத்திருப்பவன் என்பது பொருள் அல்ல. புதிய சமூகத்தைப் படைக்க மக்களிடையே பணியாற்றுபவனும் புரட்சிக்காரனே’ என்றார் பதிலடியாக.

கேளாத செவிகள் கேட்கட்டும் :

நாடு முழுக்க இளைஞர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை ஒடுக்க, ‘பொது பாதுகாப்புச் சட்டம், தொழில் தாவா சட்டம்’ போன்றவற்றைக் கொண்டுவந்தது ஆங்கிலேயே அரசு. மேலும், மீரட் சதி வழக்கின் பெயரால் 31 கம்யூனிஸ்ட் தலைவர்களை ஆங்கிலேயே அரசு கைதுசெய்தது. இதற்குப் பதிலடி கொடுக்க முற்பட்டதே ‘நாடாளுமன்றத்தில் ஒலித்த வெடிகுண்டு முழக்கம்’. 1929 ஏப்ரல் 28-ம் நாள், வெள்ளை ஏகாதிபத்தியத்தின் நாடாளுமன்றம் வழக்கம்போல இந்திய மக்களுக்கு எதிராக இயங்கிக்கொண்டிருக்க, அண்டமே அதிரும் வண்ணம் ஒரு பேரிரைச்சல். குண்டுவெடித்ததை உணர்ந்தவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். எங்கும் புகை...புகை மண்டலத்தை புயலாக கிழித்துக்கொண்டு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழங்கியபடியே வருகிறார் பகத்சிங். ஏற்கெனவே முடிவு செய்ததுபோல மக்களையும் துன்புறுத்தவில்லை, தப்பித்தும் செல்லவில்லை. “செவிடர்களை கேட்கச் செய்ய உரத்த சத்தம் தேவைப்படுகிறது’ என்றது அவர்கள் வீசிய துண்டறிக்கை. ஜூன் 6, 1929, நீதிமன்றத்தில் இவ்வழக்கையொட்டி, ‘உணவை உற்பத்தி செய்யும் விவசாயி பசியோடு இருக்கிறார். துணி நெய்து கொடுப்பவரின் குழந்தைகளோ துணியில்லாமல் தவிக்கின்றனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தொழிலாளிகளின் உழைப்பை முதலாளிகள் உறிஞ்சுகின்றனர். இந்தச் சூழ்நிலை வெகுகாலம் நீடிக்காது. இந்த சமூகத்தை மாற்றும் எரிமலைகள் நாங்கள்” என்று முழங்குகிறார் பகத்சிங். 'முடிவெடுத்த காதுகளில் எந்த முழக்கமும் விழாது' என்பதற்கேற்ப ஆங்கிலேயே செவிகள் அவர் உரையைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்திய இளைஞர்கள் இம்முழக்கத்தின் மூலம் மேலும் உரமேறினர். பகத்சிங்குக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால், ஏற்கெனவே சாண்டர்ஸ் கொலை வழக்கை தட்டி எடுத்து பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தது ஆங்கிலேயே ஆட்சி. போராளிகளுக்கு சிறைச்சாலையும் ஓர் பாடசாலை என்பதற்கேற்ப, சிறையினுள் வாசித்துக்கொண்டே இருந்தார் பகத்சிங். 151 நூல்களை வாசித்து, ஆறு சிறிய நூல்களை வெளியிட்டார். கையில் புத்தகங்கள் இல்லாமல் பகத்சிங்கை பார்க்கவே முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்போடு மத, மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார் என்பதற்கு அவர் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூல் சான்றாக உள்ளது. இந்நூலை தோழர் ஜீவா மூலம், தந்தை பெரியார் தமிழில் கொண்டுவந்தார் என்பது துணை வரலாறு.

பகத்சிங்கின் சிறை குறிப்புகள் :

பகத்சிங்கின் சிறைக் குறிப்புகளில் 108 படைப்பாளிகள் எழுதிய 43 படைப்புகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பஞ்சாபி, உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைகொண்டவர் பகத்சிங். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடிவயிறு கலங்கும் வகையில் ஆளுமைமிக்க மாவீரனான பகத்சிங் இறுதி ஆசையாக கேட்டது என்ன தெரியுமா? "நான் இருந்த சிறையின் கழிவறையைச் சுத்தம் செய்யும் 'போகா' என்ற பெண்மணியின் கையால் ஒரு வாய் சாப்பிட வேண்டும்" என்பதுதான். ஆனால், ஏழைத் தாயின் உணவை உட்கொள்வதற்கு முன், 23 மார்ச் 1931 அன்று தூக்கிலிடப்பட்டார் மாவீரன் பகத்சிங். சிறை அதிகாரிகள், தூக்கிலிடுவதற்காக அவரை அழைக்கச் சென்றபோது, “இருங்கள், ஒரு புரட்சிக்காரன், மற்றொரு புரட்சிக்காரனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான்’ என்றார் பகத்சிங். அவர் வாசித்துக்கொண்டிருந்த நூல் லெனினின் ‘அரசும் புரட்சியும்’. மரணத்தைத் தழுவதற்குமுன் நடந்த இந்த இரண்டு சம்பவமும், அவர், "இந்திய விடுதலை மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் நிரந்தர விடுதலையே அவரின் வேள்வி" என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.சமத்துவமே அவரின் கோட்பாடாக ஒளிர்ந்தது. எப்போதும் எளிய மனிதர்களுக்கான வசந்தத்தை மட்டுமே சிந்தித்த அக்னிக் குஞ்சுகள்தான் தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ். “இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்களோடு முடியப்போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப்போக்கில் தொடரும்” என்றார்கள். "நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைந்து விடுவேன். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...." என்று முழங்கிவிட்டு தூக்குகயிற்றுக்கு முத்தமிட்டனர் அந்த மாவீரர்கள்.

இன்றும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, களங்களில் பிறந்துகொண்டே இருக்கிறார்கள் சராபாக்களும், பகத்சிங்குகளும். இந்த 2017-ம் ஆண்டிலும் அநீதிக்கு எதிராகக் களத்தில் கனன்று கொண்டிருக்கும் இளம் பட்டாளங்களின் முகங்களில் மிளிர்கிறார் ‘பகத்சிங்’. இந்நாட்டின் விடுதலைக் குறியீடு-'பகத்சிங்'.

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

த.சிவக்குமார் தொகுத்த “கேளாத செவிகள் கேட்கட்டும்..தியாகி பகத்சிங்”

அ.அன்வர் உசேன் தொகுத்த “பகத்சிங்”.