Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த மூன்று விஷயத்தில் உறுதியாக இருந்தால் நீங்கள் லட்சாதிபதி!

Chennai: 

`கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம், செலவுபண்றோம்... கடைசியில கையில ஒண்ணும் மிச்சம் இல்லையே!'ன்னுதான் எல்லோரும் கவலைப்படுறோம். எப்போ நாமெல்லாம் கோடீஸ்வரர் ஆகப்போறோம். சொந்த வீடு, கார், பசங்களுக்கு நல்ல படிப்பு, நல்ல இடத்துல கல்யாணம் இப்படி நியாயமான ஆசைகளும், ஊட்டி, டார்ஜிலிங்னு உள்ளூர்ல டூர், அப்புறம் அமெரிக்கா, ஆஸ்திரேலியானு கொஞ்சம் பெரிய டூர்னு  விதவிதமான கனவுகள் எல்லோருக்குமே இருக்கு. இது எல்லாத்துக்கும் தேவையானது பணம் மட்டும்தான். 

லட்சாதிபதி

ஆனால், அவ்ளோ பணத்துக்கு எங்கே போறது? வாங்குற சம்பளமே 15 ஆயிரமோ 20 ஆயிரமோ! பலருக்கு இந்தச் சம்பளத்தை வெச்சுட்டு வாராவாரம் சினிமா, மால்னுகூட போக யோசனையா இருக்கு. ஆனால், சம்பாதிக்கிற பணத்தை ஸ்மார்ட்டா ப்ளான் பண்ணிக் கையாண்டால், எல்லாராலயும் இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். 

`யார்கிட்ட கதைவிடுறே!'ன்னு நீங்க நினைக்கலாம். இந்த உலகத்துல முடியாதுன்னு நினைச்ச எல்லாமே சாத்தியம்னு யாரோ ஒருத்தவங்க நிரூபிச்சுக்கிட்டேதான் இருக்காங்க. சரி, எப்படி ப்ளான் பண்ணி பணத்தைக் கையாண்டு லட்சாதிபதி ஆகுறதுன்னு பாக்கலாமா... 

முதல்ல, நீங்கள் மூணு சத்தியம் செய்து கொடுக்கணும். அட, எனக்கு இல்லைங்க... உங்களுக்கு நீங்களே. ஒன்று: இன்றே முதலீட்டைத் தொடங்குவது. இரண்டு: மாதம் தவறாமல் முதலீடு செய்வது. மூன்று: இலக்கை அடையும் காலம் வரை முதலீடு செய்வது. இந்த சத்தியங்களை நீங்கள் மீறினால், சாமி கண்ணைக் குத்தாது; நீங்களே உங்க கண்ணைக் குத்திக்கிட்ட மாதிரிதான். எனவே, இந்த மூன்று விஷயத்துலயும் உறுதியாக இருப்பது அவசியம். 

சரி, இன்றே முதலீடு செய்யத் தொடங்கிவிட்டீர்கள். எவ்வளவு முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்வது என்பதை முடிவுசெய்ய வேண்டும். உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். எனவே, உங்கள் சக்திக்கு முடிந்த அளவு முதலீட்டைத் தீர்மானிக்கவும். அதற்கு முதலில் உங்கள் செலவுகளைப் பட்டியலிடுங்கள். அதில் தவிர்க்கக்கூடிய செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள். உதாரணத்துக்கு, புகை, மது மற்றும் நண்பர்களுக்கு வீண் செலவு செய்வது போன்றவை. குறைக்க முடிந்த செலவுகளைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, அவசியமான நேரங்களில் மட்டும், மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றைப் பயன்படுத்துவது, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு தூங்குவது, குடி உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீரை வீணாக்காமல் இருப்பது. நீண்டதூரப் பயணங்களுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது. நல்ல படங்களை மட்டுமே பார்ப்பது. இப்படி நிறைய விஷயங்கள் உள்ளன. 

இவையெல்லாம் செய்வதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பின்பற்ற ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கையே மிக எளிமையாகிவிடும். உங்களுடைய செலவும் குறைந்து கையில் அதிகப் பணம் மிச்சமாகும். அந்தப் பணத்தை நீங்கள் முதலீடு செய்யலாம். உண்மையைச் சொன்னால், சம்பளம் - முதலீடு = செலவு என்பதுதான் சரி. ஆனால், முதல்முறை முதலீடு செய்பவர்களுக்குத் தங்களுடைய செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்துகொண்டு ஆரம்பத்தில் சம்பளத்தில் செலவு போக மீதமுள்ள தொகையை முதலீடு செய்து பழகலாம். 

அடுத்த கேள்வி எதில் முதலீடு செய்வது? முன்பெல்லாம் கையில் இருக்கும் பணத்தை வங்கிச் சேமிப்புக் கணக்கிலோ, தங்கமாக வாங்கி வைத்தோ சேமித்துவந்தோம். ஆனால் இப்போது, தங்கத்தை ஒரு முதலீடாக வைத்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது. பெண் குழந்தைகள் உள்ள வீட்டில்கூட நீங்கள் இன்று வாங்கி வைக்கும் தங்க நகைகள் அவர்களுடைய காலத்தில் பழையதாகிவிடும். அப்போது தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்தாலும்கூட நீங்கள் கூடுதல் பணம் போட்டுதான் தங்கம் வாங்கவேண்டிய நிலை வரும். நீங்கள் இன்று வாங்கும் தங்கத்துக்கான சேதாரமும் நீங்கள் நகையை விற்கும்போது திரும்பக் கிடைக்காது.

அதேபோல் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டிவிகிதங்கள் குறைந்துவிட்டன. சேமிப்புக் கணக்கில் பணத்தைச் சேமிப்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல. ஆனால், ஆர்.டி கணக்கு ஓரளவுக்கு வருமானம் தரக்கூடியது. ரியல் எஸ்டேட்டும் தற்போது டல்லடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் இன்றும் வாங்கும் நிலத்தை அவசரத் தேவையின்போது வாங்குவதற்கு ஆள் இல்லாமல்போனாலோ, குறைவான விலைக்கு விற்க நேர்ந்தாலோ ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, முதலீடுகளைப் பொறுத்தவரை தற்போது அதிக வருமானம் தரக்கூடிய முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட்தான் உள்ளது.    

மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தையை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது. இதில் நாம் செய்யும் முதலீடானது கூட்டுவட்டி (Power of Compounding) அடிப்படையில் வளர்கிறது. ஆரம்பகாலத்தில் நாம் செய்யும் முதலீடு சிறியதாகத் தெரிந்தாலும், காலப்போக்கில் அதன் வருமான வளர்ச்சியானது மிகப்பெரியதாக இருக்கிறது. 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முக்கியமான சில காரணங்கள் உள்ளன. ஒன்று, யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இரண்டு, நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். நம்முடைய ரிஸ்க்குக்கு ஏற்ப நமக்கு வருமானமும் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டில் 8 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும்கூட வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ரிஸ்க் குறைவானதே. 

இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று விதை போட்டு, நாளையே பழங்களை அறுவடை செய்ய முடியாது. ஒரு தொழிலில் வெற்றியடைய எப்படி சிலபல ஆண்டுகள் ஆகுமோ, அப்படித்தான் முதலீட்டிலும். அதுவரை நிறுத்தாமல் முதலீடு செய்ய வேண்டும். அவ்வப்போது நம்முடைய முதலீடு சரியான பாதையில் செல்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். 

போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றைக் கூடுதல் செலவுகளுக்காகத் திட்டமிடாமல், கூடுதல் முதலீடுகளாகத் திட்டமிடுங்கள்.  மொத்தமாகப் பணம் ஏதும் கிடைத்தாலும் அதை அப்படியே முதலீடு செய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் விரும்பும் இலக்கை விரைவில் அடைய முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement