வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (28/09/2017)

கடைசி தொடர்பு:16:15 (28/09/2017)

சென்னையைக் கலக்கும் 'பொம்மை ஆட்டோ'!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நங்கநல்லூரில் இருக்கும் தனக்குத் தெரிந்தவர் வீட்டில் கொலு வைப்பதற்காக அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் கிருஷ்ணமூர்த்தி அழைக்கப்படுகிறார். கொலு பொம்மைகள் வைப்பதற்காக இரும்பால் ஆன பலகைகளை பொருத்த கிருஷ்ணமூர்த்தி உதவி செய்துகொண்டிருந்தார். அப்போது, தன்னை சூழ்ந்திருந்த பொம்மைகள் மீது அவரின் கவனம் குவிந்தது. கொலு முடித்து, சுண்டல் மற்றும் இன்னபிற ஐட்டங்களை உள்ளே தள்ளிவிட்டு வெளியே வந்த பிறகும், கிருஷ்ணமூர்த்தியின் எண்ண ஓட்டம் பொம்மைகள் மீது இருந்துள்ளது.

ஆட்டோவுடன் கிருஷ்ணமூர்த்தி


வெளியே வந்தவர், தனது ஆட்டோவை மேலும் கீழுமாக இரண்டு மூன்று முறை பார்த்துள்ளார். அடுத்த நாளே ஆட்டோவின் டாப்பை கொலு ஸ்டாண்டாக மாற்றி, பொம்மைகளை புதியதாக வாங்கி அதில் பொருத்தியுள்ளார். இப்படி ஆட்டோவை அலங்கரித்த சில நாள்களிலேயே லோக்கலில் மட்டும் அல்லாமல் பக்கத்து ஏரியாக்களிலும் ‘பொம்மை ஆட்டோ’-வின் புகழ் பரவத் தொடங்குகிறது. திரிசூலம் அம்மன் நகரில் கிருஷ்ணமூர்த்தி வசித்து வந்தாலும், தற்போது பொம்மை ஆட்டோ என்றால் நங்கநல்லூரைச் சுற்றியுள்ள அனைத்து ஏரியாக்களிலும் ஃபேமஸ் ஆகியுள்ளது.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த பொம்மைகளெல்லாம் வாங்கும்போதே கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் வரை இது செலவு பிடிச்சுது. வருஷத்துக்கு ஒரு முறை பொம்மைகளெல்லாம் புதுசா மாத்திட்டு இருக்கேன். இப்ப அதைவிட செலவு கூடதான். இருந்தாலும், நான் ஹாப்பி. அதனால, செலவு பத்தி கவலைப் படல’’ என்று முடித்தவரிடம், யார் இந்த ஆட்டோக்களில் அதிகம் விரும்பி சவாரி ஏறுகின்றனர் என்று கேட்டோம்.

ஆட்டோவின் உள்புறம்


‘‘இதுல என்ன சந்தேகம்… குழந்தைங்கதான்! நான் பொதுவா காலைலேயும் சாய்ந்தரமும் ஸ்கூல் சவாரி போவேன். அப்ப, என் ஆட்டோவுக்கு வரப் பசங்கலத் தாண்டி மத்த பசங்களும் அவங்க அப்பா, அம்மாகிட்ட ‘பொம்மை ஆட்டோவுல’ போகணும் அப்டின்னு அடம் பிடிக்கிறது தினம் நடந்துட்டுதான் இருக்குது. குழந்தைகளுக்கு இப்படி பொம்மையெல்லாம் இருந்தா பிடிக்கும்ணு தெரியும். ஆனா, அவங்கள இவ்ளோ ஈர்க்கும்ணு நினைக்கவேயில்லை. ஒரு சின்ன குறை என்னனா, கொஞ்சம் அசால்ட்டா இருந்தா, நல்லா இருக்கிற பொம்மைகள குழந்தைங்க யாராவது எடுத்துருவாங்க. ஆனா, பரவாயில்லைங்க. அவங்க குழந்தைங்கதான’’ என்று வெள்ளந்திச் சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார், ‘‘இந்த ஏரியா பெண்கள்கூட ஆட்டோவுல ஏறிட்ட அப்புறம், ‘ரொம்ப நாளா உங்க ஆட்டோ எங்க வீட்டுப் பக்கத்தில போறத பார்த்திருக்கோம். இதுல சவாரி செய்யணும்னு நினைச்சிகிட்டே இருப்போம். இவ்ளோ நாள் கழிச்சி இப்பதான் அந்த ஆசை நிறைவேறுது. சரி, உங்க போன் நம்பர் கொடுங்க. அடுத்த முறை உங்களையே வீட்டுக்கு வர சொல்லிட்றோ’-னு வந்த கஸ்டமர் ஏறாலமா இருக்காங்க” என்று பெருமிதத்தோடு விவரித்தார்.

மேலே பொம்மைகள் வைத்திருப்பது மட்டுமின்றி, ஆட்டோவுக்கு உள்ளே, செல்லாத பழைய காசுகளை ஒட்டி வைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதே போன்று, பல மிருகங்களின் படங்களால் ஆட்டோவின் பக்கவாட்டில் ஒரு சின்ன கேப் கூட விடாமல் அலங்கரித்திருக்கிறார். இதெல்லாம் எதற்கு என்று கேட்டால், ‘‘இதெல்லாம் பார்த்த சின்னப் பசங்க குஷியாகிடுவாங்க. அவ்ளோதாங்க’’ என்கிறார்.

சுதந்திர தினத்தின் போது அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ


சாதரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள், காக்கிச் சட்டை போடவில்லை என்றாலோ நம்பர் ப்ளேட்டில் ஸ்டைலாக எண்களை எழுதினாலோ தமிழ்நாடு போலீஸ் தன் கடமையைச் செய்ய தவறுவதில்லை. அப்படி இருக்க, ஆட்டோவையே அலங்காரப் பொருளாக மாற்றி இருப்பதால் எந்தப் பிரச்னையையும் சந்தித்ததில்லையா என்று கேட்டோம். “அப்பப்ப போலீஸ் நிறுத்தி ‘என்ன இதெல்லாம்னு’ கேட்பாங்க. நான், ‘சார், குழந்தைங்க சவாரி ஓட்டுறேன். அதான் இப்படி பண்ணி வச்சிருக்கேன்’ அப்படின்னு சொன்னாலே பெரும்பாலான போலீஸ்காரங்க விட்டுருவாங்க. அதனால இதுவரைக்கும் எல்லாம் ஸ்மூத்தான். குழந்தைங்க ஹாப்பி அண்ணாச்சி… ஐ எம் ஹாப்பி அண்ணாச்சி…’’ என்று வழியனுப்பி வைத்தார்.