Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வண்டலூர் பூங்காவுக்கு முன் சென்னையின் இதயத்தில் இருந்தனவாம் விலங்குகள்! நம்புவீர்களா?

பூங்கா

வரலாற்றையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள கூடிய சக்தி இரண்டு விஷயங்களுக்க மட்டும் தான் இருக்க முடியும். ஒன்று நூலகம் மற்றொன்று அருங்காட்சியகம்.

சென்னை வரலாற்றின் ஆவணமாக இருப்பவைகளில் முக்கியமானது பாந்தியன் சாலையில் அமைந்திருக்கும் “சென்னை அரசு அருங்காட்சியகம்“. கொல்கத்தா அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் என்ற பெருமை கொண்டது சென்னை அருங்காட்சியகம். 

1846ல் மதாராசு கல்விக் கழகம் தங்களுக்கு ஓர் அருங்காட்சியகம் வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில், அப்போதைய மதாரசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த “ ஹென்றி பாட்டிங்கர் ”பிரித்தானிய கிழக்கிந்திய குழுவின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தார். வெறும் 1100 பொருட்களுடன் தற்போதைய ஜார்ஜ் கோட்டையின் மேல் தளத்தில் உருவானது தான் இந்த அருங்காட்சியகம். 

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இந்த அருங்காட்சியகம்தான் பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லலாம். இங்கு பாதுகாக்கப்பட்டு வந்த விலங்குகள்தான் நாளடைவில் வண்டலூருக்கும் , மூர்  மார்க்கெட் அருகிலிருக்கும் ’மை லேடீஸ்’ பூங்காவிற்கும் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. பாடம் செய்யப்பட்ட உயிரினங்கள் இங்கு அதிகம் இருப்பதால் மக்கள் இதனை “செத்த காலேஜ்“ என்று அழைக்கும் வழக்கமும் உருவானது.

பின்னர், நிர்வாக வசதிக்காகவும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கவும் இந்த அருங்காட்சியகம் பல மாறுதல்களை அடைந்தது.  இன்று, 6 கட்டடங்களில் வரலாற்றின் ஆதாரமாக நிற்கிறது. இந்த ஆறு கட்டடங்களும் வெவ்வேறு பிரிவுகளாக உள்ளன.

சென்னை அருங்காட்சியகம்முதல் கட்டடம் : சேகரிப்பு பொருள்கள்

பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தாவர இனங்களும், விலங்கினங்களின் பாடங்களும், பொருளாதார நாகரிக சம்பந்தப்பட்ட பொருள்களும் இங்கு தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய ஆண் யானை மற்றும் திமிங்கலத்தின் பதப்படுத்தப்பட்ட உருவங்கள் ஆச்சர்யத்தைத் தருகின்றன. சிந்து சமவெளி நாகரிகங்களிலிருந்து கிடைக்கபெற்ற பொருள்களில் சிலவும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டடம் : மனித வாழ்க்கை மற்றும் பண்பாடு

பழங்கால மக்களின் வாழ்க்கையைக் குறித்தும், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் கல் ஆயுதங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் விதமாக இங்கு பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாகரிகத்தின் பண்பாடு, கலாசாரம் முதலியவற்றை ஆய்வு செய்யும் தொல்லியல் நிபுணர்களின் விருப்பக் கட்டடம் என்றே இதைக் கூறலாம்.

பல்லாவரத்தில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருள்களும் இங்கு தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரிசாவில் நரபலி கொடுத்த “மெரியா பரித்தூணும்”, தென் இந்தியாவின் முதல் பெண் வெண்கல சிலையும் மக்களின் கவனத்தை கவர்கின்றன.

மூன்றாவது கட்டடம் : படிமக் கூடம்

படிமக் கூடம் என்பது பல்வேறு சிலைகளின் தொகுப்பு. சைவ , வைணவ சிற்பங்கள் இந்த இடத்தை வியாபித்து இருப்பதை பார்க்க முடிகிறது. சிவன் சிலைகளை நாம் பல கோவில்களில் பார்த்திருக்கலாம். ஆனால் சிவனின் பல்வேறு வடிவங்களை ஒரே இடத்தில் இங்கு பார்க்கலாம். பெரும்பாலும் பல்லவ சிலைகளை விட சோழர்காலத்து சிலைகளே இங்க அதிகம் உள்ளன.

நான்காவது கட்டடம் : குழந்தைகளுக்கான கூடம்

இங்கு வரும் பள்ளி குழந்தைகளுக்கான பிரத்யேக கூடம் இது. புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும், பழங்கால ஆடைகள், பொம்மைகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாவது கட்டடம் : மரபு சார்ந்த கலைக்கூடம்

இங்கு பழங்கால ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தென் இந்தியாவின் வரலாற்றைக் குறிக்கும் ஓவியங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆறாவது கட்டடம் : சமகாலத்து ஓவியங்கள்

இங்கு தான் ரவிவர்மாவின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பலஆண்டுகால வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்களும், முழு உருவ படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை அருங்காட்சியகம்கடந்த வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த அருங்காட்சியத்தின் வளர்ச்சிக்காக 10 கோடி ருபாய் நிதி ஒதுக்கினார் . இந்த நிதி கொண்டு காட்சியமைப்பு கூடங்கள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு காட்சிக்கூடம் சீரமைக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இன்னும் அந்த பணிகள் முடிந்தபாடில்லை. அதை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே இங்கு வருகை தரும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை. மற்ற நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement