“அரசியலை கவிஞனின் மொழியில் சொல்ல வேண்டும்” - ஜெயமோகன் | Writer Jayamohan Interview

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (30/09/2017)

கடைசி தொடர்பு:10:55 (30/09/2017)

“அரசியலை கவிஞனின் மொழியில் சொல்ல வேண்டும்” - ஜெயமோகன்

ஒரு ரயில்நிலையத்திலோ, பேருந்து நிலையத்திலோ, நண்பர்களின் அறைகளிலோ எனக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நாடோடித்தன்மையோடு அலைந்துதிரிந்து தன் காலத்தின் சிரிப்பை, கண்ணீரை, அவமானங்களை, கேளிக்கைகளை,நெஞ்சுரத்தை, வன்கொடுமைகளை, ரத்தத்தை, சமூக அவலங்களை என அத்தனையையும் எழுத்துகளில் பொறித்துவைத்துவிட்டு, நிராதரவாளர்களாக காலந்தோறும் எழுத்தாளர்கள் இருந்துவருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை, தொன்றுதொட்டு காலம் தன் சட்டைப்பையில் சுமந்து கொண்டேதான் வருகிறது. ஆனால், இப்படி நாடோடித் தன்மையானவர்களுக்குத் தங்க இடம் கொடுத்து எழுதுவதற்கான வெளியையும் உண்டாக்கியிருக்கும் ஓர் இடம்தான் நாகர்கோவிலில் உள்ள 'நிழற்தாங்கல்'. இவ்விடத்தை கவிஞர் லஷ்மி மணிவண்ணன் ஏற்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அவ்வப்போது படைப்பாளர்களை அழைத்து படைப்புகள் குறித்து ஓர் ஆக்கபூர்வமான உரையாடலையும் செய்துவருகிறார். அப்படியோர் நிகழ்ச்சியைத்தான் கன்னியாகுமரியில் சமீபத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜெயமோகன்

இது முழுக்க முழுக்க  கவிதைக்கான விழாவாக இருந்தது. கிட்டத்தட்ட 14 கவிஞர்களின் கவிதைத்தொகுப்புகளின் அறிமுகம் மட்டுமல்லாமல், இடையிடையே வாசகர்களின் கருத்துகளையும், அதுகுறித்த கலந்துரையாடலையும் விமர்சனப் பூர்வமாக இருந்ததை உணரமுடிந்தது. ஒருவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதில் முரண்பட்டதைத் தயங்காமல் நேரிடியாகக் கேள்வி கேட்பதுமாகவும், எதிர்த்தரப்பினர் அதற்கு பதிலுரைப்பதுமாகவும் ஆரோக்கியமாக இருந்தது. நிகழ்வை ரோஸ் ஆன்றா ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக  M.C..ராஜன் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர்கள் விக்ரமாதித்யன், லஷ்மி மணிவண்ணன், போகன் சங்கர், கண்டராதித்தன், சூர்யா ஆகியோர் கவிதை நூல் கூறித்து விமர்சனம் செய்தனர். பொள்ளாச்சியிலிருந்தும் நாகர்கோவிலிலிருந்தும் சென்னையிலிருந்தும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

நிகழ்விலிருந்து....

"பகடி பண்ணினாலே அலட்சியம்தான். பகடியையும் அலட்சியத்தையும் பிரிக்கமுடியாது. பகடிக்குத் தமிழில் ஒரு மரபார்ந்த பாடல் உண்டென்றால் அது தனிப்பாடல் திரட்டுதான். அப்பாடல்களிலும் கவிதை மொழியில் உச்சத்தைத் தொட்டவன் கவி காளமேகம். அவனிடமும் ஓர் அலட்சியம் உண்டு. ஆனால், அப்பகடி வாழ்க்கையிலிருந்து வந்ததா, இல்லை அவனே அப்படியோர் ஆளுமையா இருந்தானா? அது எங்கிருந்து வந்ததென்று தெரியாது. சமகாலத்தில சொல்லவதென்றால் லிபி ஆரண்யாவின் பகடி ஓர் அலட்சியத்தைக் கொடுக்கிறது. அதேபோல் இசையின் கவிதையிலுள்ள பகடியும் அலட்சியத்தைக் கொடுக்கும். பகடியென்று வந்துவிட்டாலே அலட்சியமும் சேர்ந்து வந்துவிடும். எனவே, பகடியை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றால், அலட்சியத்தையும் சேர்த்துதான் ஏற்றுக்கொள்ளணும். அல்லது பகடியாவே நீங்க கண்டனம் பண்ணனும். உங்களைச் சொல்லலை(எதிரில் இருப்பவரைப் பார்த்து). கவிதையின் தன்மையைச் சொல்கிறேன். ஞானக்கூத்தன் என்றால், அவரின் எல்லாப் பகடிக் கவிதையிலும் ஓர் அரசியல் இருக்கும். அது பெரிய இடத்துக்குப் போகும்போதுதான் சீரியஸ்னெஸ் வரும். தாளத்தோட ஒரு பொலிடிக்கல் சட்டையர் வருவதினால்தான் சீரியஸ்னெஸ் வரும்" என்று விக்ரமாதித்யன் பேசிக்கொண்டிருக்கையில் நிகழ்ச்சியின் இடையே எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகனுடன் வந்தார். அவருடன் கவிஞர் போகன் சங்கர் உட்பட சில நண்பர்கள் வந்தனர். கவிதை முற்றத்தில் நுழைந்த ஜெயமோகன் கவிஞர் விக்ரமாதித்யனிடம் ஆசிபெற்று அமர்ந்தார். நினைவுப் பரிசு வழங்கியபோது தன் மகனை அழைத்த ஜெயமோகன் ‘குட்டிப்பையனாப் பாத்தீங்களே... அதற்குப்பிறகு இப்பத்தான் பாக்குறீங்க’ என்று கவிஞர் விக்ரமாதித்யனிடம் நினைவு கூர்ந்தார்.

ஜெயமோகன்

மீண்டும் கவிஞர் விக்ரமாதித்யன் உரையாடலைத் தொடர்ந்தார். "ஒற்றைத்தன்மைகொண்ட கவிதைகள் பெரும்பாலும் அந்தக் காலத்துக்கு மட்டும்தான் பொருந்தும். லஷ்மி மணிவண்ணன் 'ஒற்றை மதிப்பு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். நான் அதைத் தன்மை என்று கூறுகிறேன். அவர் தொடர்ந்து 'மதிப்பு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அப்படிச் சொல்கிறபோது பலருக்கும் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. புரியுறதுக்காக நான் அதைத் தன்மை என்கிறேன்" என்றார் விக்ரமாதித்யன். "இடையில் புரியாமல் போனால் அதுக்கு ஒன்னும்செய்யமுடியாது" என்று ரோஸ் ஆன்றா பேச,  "நிறைய இளைஞர்கள் வர்றாங்க இல்லையா, அவர்களுக்கு அது புரியணும்" என்று விக்ரமாதித்யன் சொல்ல, "அதுதான் லேயர்ஸ்ன்னு லஷ்மி மணிவண்ணன் சொல்றாரு இல்லையா" என்று ரோஸ் ஆன்றா மீண்டும் கூறினார். அதற்கு 'ஒற்றைத்தன்மை அல்லது ஒற்றைப் பரிமாணம் என்கிற சொல் புழக்கத்தில் இருக்கிறது'. இதைப் பயன்படுத்தலாம்" என்று விக்ரமாதித்யன் கூறினார்.

"பகடி அல்லது அலட்சியம்தான் இந்த யுகத்தின் உணர்வு என்கிறேன். அதனால்தான் இந்தமாதிரியான கவிதைகள் அதாவது சீரியஸா தோற்றமளிக்காத கவிதைகள் மதிப்பும் ஆர்வமும் உள்ளதாக இருக்கிறது. இலக்கியத்தில் எதையும் சீரியஸா அணுகுவது இந்த யுகத்தின் உணர்வாக நான் கருதவில்லை’’ என்று சொல்லியவாறு தன் உரையாடலைத் தொடர்ந்தார் கவிஞர் போகன் சங்கர். சபரிநாதனின் 'களம் காலம் ஆட்டம்' தொகுப்பை வாசிக்கையில் மிகுந்த நம்பிக்கை கொடுத்தது. சில ஆண்டுகள் கழித்து 'வால்' தொகுப்புப் படிக்கையில் அவநம்பிக்கைதான் ஏற்பட்டது. வால் கவிதைகளில், தத்துவத்தோட ஒரு நோயினுடைய வைரஸ் சிக்னேச்சர் இருக்கு. 'களம் காலம் ஆட்டம்' தொகுப்பிற்கும் 'வால்' தொகுப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் சபரிநாதனுக்கு நிறையத் தத்துவப் புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் இருக்குன்னு தெரியுது. நிறைய உலகக் கவிதைகளையும் படிச்சிருக்கார். முக்கியமா பிரம்மராஜன் கவிதைகளின் இடம் இருக்கு. ஏன்னா?... நான் ஒரு சக நோயாளிங்கிறதுனாலதான் என்னை இப்படிச் சொல்லவைக்கிறது. தத்துவமும் கவிதையும் ஒன்னா என்கிற இடம் இருக்கு. தத்துவமும் கவிதையும் எந்த இடத்தில் வித்தியாசப்படுது அப்படிங்ற இடம் இருக்கு. ஆனால், இவர் ஒரு தத்துவத்தையையே கவிதையாய் வச்சிடுறார்" என்று போகன் சங்கர் கூறினார்.  

ஜெயமோகன்

"வாக்காளர் அட்டையிலிருந்து வந்தேனா அது நல்ல கவிதை. ஆதார் அட்டையா வந்து சேர்ந்துட்டேனா அது நல்ல கவிதை இல்லை. அது ரொம்ப அளவுக்கு personalize ஆக இல்லை. ரொம்ப அளவுக்கு impersonal ஆக இருக்கு. மற்றபடி இப்ப எழுதக்கூடியவுங்க எல்லோருமே ஓரளவுக்குக் கவிதையின் மொழிக் கட்டமைப்பை (Structural Language) அடைஞ்சுராங்க. அதிகமான வார்த்தைகள் இல்லாம எங்க நிறுத்தணுமோ அங்க நிறுத்திடுறாங்க. முன்னாடியெல்லாம் ஒரு கவிதைக்குப் பின்னாடி இன்னொரு பாரா இருக்கும். இப்போது இரண்டாவது பாராவை வேண்டாம் என்று,  படைப்பாளிகளே நிராகரித்து முடிவு செஞ்சுடுறாங்க. இப்ப வெங்கட்சாமிநாதனிடம் உங்க கவிதைகளைக் கொடுத்தால் இதையெல்லாம் கவிதைகள் என்று சொல்லிவிடுவார். வெங்கட்சாமிநாதன் எதற்காகப் போராடினாரோ அதை எல்லாத்தையும் நீங்க அடைந்துவிட்டீர்கள். இப்ப பேராமீட்டரைத் தாண்டி வைத்திருக்கிறோம். அந்த ஓர் அம்சம்தான் குறைவா இருக்கிறது என்றுதான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம்.

முன்னாடியெல்லாம் கோவில்பட்டியில்தான் கவிதைகளின் தொந்தரவு அதிகம் இருக்கும். கோணங்கியோட நகைச்சுவை ஒண்ணு இருக்கு 'ஒருவர் பஸ் பிரேக் டவுன் ஆகி கோவில்பட்டியில் இறங்கிட்டாரு, அடுத்த பஸ்ல ஏறுவதற்குள் அவர் கவிஞர் ஆகிட்டாரு'ன்னு. இன்பெஃஷன் ஆகிடுச்சு. அதுபோல இப்ப பொள்ளாச்சிப் பக்கம் நடமாட முடியாது போலிருக்கே. 

முன்பெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் சிறுபத்திரிகை வரும். அடுத்த இதழ் வரும்வரை அதை வச்சுப் படிப்பாங்க. எப்படியென்றால், பழைய காலத்தில் நம்ம அம்மாக்கள் பாலித்தீன் கவர்களை மடிச்சு வச்சுருந்து, அதைப் பின்னாடி பயன்படுத்துவாங்க. இப்ப பாலித்தீன் கவர்களை அப்படியே குப்பையில் போட்டுவிடுகிறோம். அப்ப வந்த சிறுபத்திரிகையை கடன்வாங்கிப் படிப்பாங்க. அதில் வரும் கவிதைகளின்மேல் அவ்வளவு கவனம் இருந்தது. நான் நல்ல கவிதைகள் படிச்சேன்னா, லக்‌ஷ்மி மணிவண்ணனுக்கு ஒரு கடிதம் போடுவேன். அப்படி நிறையப் பேருக்கு கடிதம் போட்டு கவிதைகளைப் பகிர்ந்துகொள்வோம். இப்ப செய்தி மூலமா ஃபார்வேர்டு கூட பண்ணுறாங்களான்னு சந்தேகம் இருக்கு. கவனமின்மை கவிதைக்கு ஒரு பெரிய தவறு" என்று ஜெயமோகன் கூறினார். 

"எந்த ஒரு தொழிலுக்கும் கலைக்கும் ஒரு நீண்ட பயிற்சி இருக்கும்போது, அது வேற ஒண்ணா மாறி, நமக்கு ஒன்றைக் கொடுக்கும். இன்றைக்கு எழுதுறவங்க அப்படியெல்லாம் செய்யுறாங்களா என்பது தெரியலை. இப்ப எழுதுறவங்களின் கவிதைத் தொகுப்புகளிலிருந்து அப்படி எதுவும் செய்யலை போலிருக்கே. எனக்குக் கொடுக்கப்பட்ட பணி அல்லது நான் எடுத்துக்கொண்ட பணியிலிருந்து சொல்லணும்னா, 'களையெடுப்பின் இசைக்குறிப்புகள்’ என்ற தலைப்பே ரொமான்டிக்காதான் இருக்கு. களையெடுப்பு ரியாலிட்டி, இசைக்குறிப்பு ரொமான்டிசைஸோடு வந்திடுது. இவை இரண்டையும் மெர்ஜ் பண்ணும்போது ரொமான்டிக்கும் மைல்டான எக்ஸ்ப்ரெஸனிஷமும் தெரியுது. அப்புறம் இந்தக் கவிதைத் தொகுப்பில் நிர்பயாவிலிருந்து நிறையப் பெண்கள் வர்றாங்க. பெண்களை ஒடுக்குறது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது எல்லாத்தப்பத்தியும் எழுத்தாளர்கள் கண்டனம் பண்ணுறாங்க. இதைத்தான் பிரபலப் பத்திரிகைகள் செய்கின்றன. 

ஜெயமோகன்

இந்திய அளவில் எல்லா சேனல்களிலும் வருகின்றன. அப்பறம் நம்ம எதுக்கு அதைக் கையில் எடுக்கிறோம். கவிஞனுக்கு அந்தப் பணியெல்லாம் தேவையில்லை. கண்டனங்களை ஊடகங்கள் எடுத்துக்கொண்டபோது, கவிஞர்கள் அதை வேறொன்றாகத்தான் செய்யவேண்டியதுள்ளது. சில பத்திரிகைகளே கட்டுரைகளை மூன்றுமுறை ரீரைட்டிங் பண்றாங்க. தராசு மற்றும் நக்கீரனில் நானே பண்ணியிருக்கேன். ரிப்போர்ட்டர் நல்ல தமிழில் எழுதணும்ன்னு அவசியம் இல்லை, சமூக எதார்த்தங்கள், சமூக அநீதிகள்  எல்லாமே உடனுக்குடன் ஊடகங்களில் வந்துவிடுகின்றன. பெண்களைப் பற்றிய இதழ்கள் மட்டுமே தமிழில் ஏழெட்டு வருகின்றன. பெண்களுக்கான அநீதிகளைக் கவிதைகளில் கொண்டுவரும்போது, அதைப் பொறுப்பா கவிதை ஆக்கத்தில் கவனம் செலுத்தணும். அதற்காக அதை எழுதக் கூடாதுன்னு நான் சொல்லலை. இவ்வளவு பேர் எழுதும்போது, அதை, அதாவது தமிழ்நிலத்தில் நடப்பவற்றைக் கவிஞர்கள் தமிழ் வாழ்வியலின் ஆவணமாகச் செய்யணும். செறிவாக, அடர்த்தியாக, காலத்தைத் தாண்டி வென்று நிற்பதாக அது இருக்க வேண்டும். அப்படிச் செங்கவின் கவிதைகள் இருக்கான்னா... இந்த விசயங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் ரொமான்டிக்கான மொழியில் எழுதுறாங்க. எதார்த்தத்தை ரொமான்டிசைஸ் பண்ணும்போதே அது திரிபடைந்துவிடும். களப்பணி மூலமாக, பிரசாரத்தின் மூலமாக, வழிகாட்டுதலின் மூலமாக மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இலக்கியத்தின் மூலம் அது ஒருபோதும் இயலாது" என்று விக்ரமாதித்யன் கூறினார்.

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, வந்திருந்த கவிஞர்கள் கவிதைகள் வாசிக்க அக்கவிதைகள் குறித்து கருத்துரை வழங்கினார் கவிஞர் விக்ரமாதித்யன். வாசிப்பு நிகழ்த்தியவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை, முரண்பாடுகளை முன்வைத்துப் பேசியது, வழக்கமான நிகழ்ச்சிகளைப் போலில்லாமல் கொஞ்சம் காரசாரமாக இருந்தது வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதே.


டிரெண்டிங் @ விகடன்