வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (01/10/2017)

கடைசி தொடர்பு:13:41 (01/10/2017)

பூமியில் எந்த இடத்திற்கும் ஒரு மணி நேரத்தில் செல்லலாம்... ஸ்பேஸ் எக்ஸின் ‘ஷேர் ராக்கெட்’! #BFR

ப்பிள் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை வெளியிடுவது போல, அடிக்கடி புதுப்புது ராக்கெட் மாடல்களையும், வியப்பூட்டும் திட்டங்களையும் வெளியிட்டு அசத்துவது எலான் மஸ்க்கின் வழக்கம். அப்படி, சமீபத்தில் நடந்த சர்வதேச ஆஸ்ட்ராநாட்டிக்கல் காங்கிரஸில் BFR எனப்படும் Big Falcon Rocket-ஐ அறிமுகம் செய்திருக்கிறார் மஸ்க். ராக்கெட் அறிமுகம் செய்ததோடு மட்டுமின்றி, அத்துடன் சில வியப்பூட்டும் அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

Big Falcon Rocket

இதுவரைக்கும் விண்வெளிக்கு செல்லவும், செயற்கைகோள்களை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தவும் மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருந்த ராக்கெட்கள் மூலம், பூமிக்குள்ளேயே பயணம் செய்யலாம் எனவும் அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் டெல்லியில் இருந்து சிட்னிக்கு வெறும் 36 நிமிடத்தில் (மணிக்கு 18,000 மைல் வேகத்தில்) சென்றுவிட முடியும். நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு வெறும் 29 நிமிடத்தில் சென்றுவிட முடியும். உலகின் எந்தவொரு இடத்திற்கும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். எப்படி இயங்கும் இந்த ராக்கெட்?

உதாரணமாக டெல்லியில் இருந்து சிட்னிக்கு ராக்கெட் செல்லவிருப்பதாக வைத்துக்கொள்வோம்.  முதலில், டெல்லி பயணிகள் ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே இருந்து பயணிகள் ராக்கெட்டில் ஏற்றப்படுவார்கள். பின்னர் ராக்கெட் பறந்து சென்று, சிட்னியில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இறங்கும். வெறும் 36 நிமிடங்களில் இந்தப் பயணம் நடந்து முடிந்துவிடும். ஒரு விமான டிக்கெட் செலவுதான் இதற்கு ஆகும் என்கிறது ஸ்பேஸ் எக்ஸ். அது எப்படி சாத்தியமாகிறது?

ராக்கெட்டில் பூஸ்டர் மற்றும் ஸ்பேஸ் ஷிப் என இரண்டு பாகங்கள் இருக்கும். பூஸ்டர் பகுதியில்தான் இன்ஜின்கள் இருக்கும். ஸ்பேஸ் ஷிப் பகுதியில் மனிதர்கள் இருப்பார்கள். பூமியில் இருந்து ராக்கெட் கிளம்பியதும், இன்ஜின்கள் உந்துசக்தியை அளித்து ராக்கெட்டை மேலே பறக்க உதவி செய்யும். ராக்கெட் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து சென்றதும், இந்த இன்ஜின்கள் தேவைப்படாது. எனவே அவை ஸ்பேஸ் ஷிப்பில் இருந்து பிரிந்து மீண்டும் ராக்கெட் கிளம்பிய இடத்திற்கே சென்றுவிடும். இதனை வீடியோவில் தெளிவாகக் காணலாம். பின்னர் ராக்கெட் ஸ்பேஸ் ஷிப் பூமியை சுற்றிவிட்டு, இறங்க வேண்டிய இடத்திற்கு வந்து சேரும். BFR ராக்கெட்டின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. இந்த வசதியையும் சில மாதங்களுக்கு முன்னர் Falcon 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது ஸ்பேஸ் எக்ஸ்.

இப்படி பூஸ்டர்களைத் திரும்பப் பெற முடிவதால், அடிக்கடி ராக்கெட்டுகளை புதிதாக ஏவ வேண்டிய அவசியம் இருக்காது. ஒரே ராக்கெட் மூலம் பல செயற்கை கோள்களை விண்வெளியில் ஏவ முடியும். செலவும் மிச்சம். இதுதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ப்ளஸ். இதையே பூமிக்குள் ராக்கெட் விடும் திட்டத்திலும் பின்பற்றுவதால், குறைந்த செலவில் அந்நிறுவனத்தால் பயணங்களை ஏற்பாடு செய்ய முடியும். இதனால்தான் ஒரு விமான டிக்கெட் அளவிலான கட்டணத்திலேயே இந்த ராக்கெட் மூலம் பயணம் செய்ய முடியும் என்கிறார் மஸ்க். தற்போது இந்தத் திட்டம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் சோதனைக்கு வரவில்லை. ஆனால் இன்னும் 6 முதல் 9 மாதங்களுக்குள் இதற்கான கட்டுமானப் பணிகளைத் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதேபோல, 2022-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றவிருப்பதாகக் கூறியிருந்தார் மஸ்க். அங்கே ஒரு காலனியை உருவாக்கி அதில் மனிதர்களை வசிக்க செய்ய திட்டமிருப்பதாகவும், முதல்கட்டமாக 100 பேரை அனுப்பவிருப்பதாகவும், அதற்கான டிக்கெட் விலை குறித்தும் அப்போது அறிவித்திருந்தார். இந்தமுறை அதனை உறுதி செய்திருக்கிறார் மஸ்க். தற்போது அறிமுகம் செய்திருக்கும் BFR ராக்கெட் மூலமாக 2024-ம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்போவதாகக் கூறியிருக்கிறார். செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதோடு மட்டுமின்றி, சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை டோர் டெலிவரி செய்ய, செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப என பல்வேறு விஷயங்களுக்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்தலாம். மேலும், Interplanetary Transport System-ற்காக ஸ்பேஸ் எக்ஸ் எப்படி இந்த ராக்கெட்டை பயன்படுத்தவிருக்கிறது என்பதையும் விளக்கினார். 

ஸ்பேஸ் எக்ஸ் BFR ராக்கெட்

2022-ம் ஆண்டு இந்த ராக்கெட் மூலமாக இரண்டு கார்கோ ராக்கெட்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி சோதனை செய்யவிருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இத்துடன்  செவ்வாய் கிரகத்தின் தண்ணீர் வளம், எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான சாத்தியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். பின்னர் 2024-ம் ஆண்டு இரண்டு கார்கோ ராக்கெட்களும், இரண்டு மனிதர்களை ஏற்றிச்செல்லும் ராக்கெட்களும் செவ்வாய்க்கு அனுப்பப்படும். கார்கோ ராக்கெட்டில் ஆராய்ச்சி மற்றும் மனிதர்களுக்கு தேவையான பொருள்கள் இருக்கும். மனிதர்கள் அங்கே இறங்கிய பின்னர் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான உலைகள் நிறுவப்படும். பின்னர் மனிதர்களுக்கான இருப்பிடத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகளும் துவங்கும். பின்னர் அங்கே மனிதர்களுக்கான நகரம் நிர்மாணிக்கப்படும். 

இப்படி நம்பவே முடியாத விஷயங்களை எல்லாம் மஸ்க் அறிவிக்க, இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இதற்கு சாத்தியமே இல்லை என்கிறார்கள் விண்வெளித் துறையைச் சேர்ந்த ஆர்வலர்கள். ஆனால், "சவாலான இந்தப் பணியை செய்துமுடிப்போம். இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கின்றன. எனக்கு இந்த அவகாசமே அதிகம்" என தைரியமாக தம்ப்ஸ் அப் காட்டுகிறார் மஸ்க்.

சொல்வது எலான் மஸ்க் என்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்