Published:Updated:

நீதி கிடைத்தது... நிம்மதி கிடைக்கவில்லை!

நீதி கிடைத்தது... நிம்மதி கிடைக்கவில்லை!
நீதி கிடைத்தது... நிம்மதி கிடைக்கவில்லை!

ஜூனியர் விகடனிலிருந்து...

ம்பி நாராயணனை யாரும் மறந்திருக்க முடியாது. 'ராக்கெட் ரகசியத்தைக் கடத்​தினார்’ என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைதானவர். 'இந்தியாவின் ரகசியத்தைக் கடத்து கிறார்கள்’ என்ற செய்தி வரும்​போதெல்லாம், நம்பி நாராயணன் பெயரும் அதில் உதாரணமாகக் காட்டப்படும். அப்படிப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. தான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்றுள்ளார் அவர். 'இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, 100-வது ராக்கெட் அனுப்பிப் பெருமைபட்டுக்கொள்ளும் இந்த நேரத்தில், அங்கே பணிபுரிந்த ஒரு தமிழருக்கு நேர்ந்த அநியாயத்துக்கு நியாயம் வழங்கி இருக்கிறது நீதிமன்றம்’  என்கிறார்கள் அவரது நண்பர்கள்! 

1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். தன் மீது பொய்யாகப் புகார் சுமத்தப்​படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நியாயம் கேட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில், சி.பி.ஐ. ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம், இவர் மீதான

நீதி கிடைத்தது... நிம்மதி கிடைக்கவில்லை!

அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்து, 'நிரபராதி’ என்று 1998-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதைஅடுத்து, தனக்கு ஏற்பட்ட மானநஷ்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடுகோரி, திருவனந்தபுரம் சப் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

இந்திய தேசிய மனித உரிமை ஆணையத் துக்கும் இதே புகாரைச் சமர்ப்பித்து நீதி கோரி னார் நம்பி நாராயணன். அங்கே, 'நஷ்டஈடு கேட்டு நம்பி நாராயணன் தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் இடைக்கால நிவாரணமாய் உடனடியாக அவருக்கு 10 லட்ச ரூபாயை வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணம் வழங்குவது தாமதமாகவே, மீண்டும் சட்டப் போராட்டத்தில் இறங்கினார் நம்பி. இதில்​தான், உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் கடந்த 7-ம் தேதி, ''மூன்று வாரங்களுக்குள் 10 லட்சம் ரூபாயை அளிக்க வேண்டும்'' என்று கேரள அரசுக்குக் கொட்டு​ வைத்து இருக்கிறது.

நிரபராதி என்று தீர்ப்பு வந்ததுமே நம்பி நாரா​யணன், இஸ்ரோவில் மீண்டும் பணியில் அமர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றி​ருக்கும் நம்பி இப்போது, திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். அவரைச் சந்தித்தோம்.

''நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று எவ்வளவோ கனவுகளுடன் தீவிரமாகப் பணியாற்றியவன் நான். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மட்டுமே தெரிந்த ராக்கெட்டுக்கான திரவ எரிபொருளை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றதில், என்னுடைய பங்கை இஸ்ரோவின் சரித்திரம் சொல்லும். இதில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுக்க முடியாத சில வெளிநாட்டு சக்திகள், இங்கிருக்கும் சிலரை விலைக்கு வாங்கி நாட்டின் பலத்தைச் சிதைக்கத் திட்டமிட்டது. அந்தச் சதியின் விளைவுதான் நான் கைது செய்யப்பட்டது. ராக்கெட் ரகசியம் கடத்தப்பட்டதாக ஒரு பொய்ச் செய்தியைப் புனைந்து, அதில் வெற்றியும் கண்டனர். இந்த உண்மை பிறகு இந்திய அரசுக்குப் புரியவந்ததும், நான் குற்றப்பழியில் இருந்து விடுபட்டேன்.

மூன்றரை ஆண்டுகள் 'துரோகி’ என்ற அவப் பெயரில் நான் கூனிக்குறுகி, சிறையிலும் வெளியிலும் நடைப்பிணமாக வாழ்ந்தேன். ஜாமீனில் வந்த பிறகும் என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. சமுதாயத்தில், வெளியிடங்களில் நானும் என் குடும்பத்தாரும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டோம்; எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவியின் மனநிலை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. இவற்றை​யெல்லாம் எந்த இழப்பீட்டுத் தொகையாலும் மீட்டுக் கொடுத்துவிட முடியாது.

எனினும், இழப்பீடு கோரி நான் தொடர்ந்த வழக்கின் விளைவாக, இந்திய தேசிய மனித உரிமை ஆணை யம் இடைக்கால நிவாரணமாக 10 லட்ச ரூபாய் எனக்கு வழங்கப் பரிந்துரைத்தும், கேரள அரசு அதை வழங்காமல் 12 வருடங்களாக இழுத்தடித்து வருகிறது. இப்போது கிடைத்திருக்கும் தீர்ப்பையாவது அரசு மதித்து நடக்க வேண்டும். நான் நிரபராதி என்பதை உரக்கச் சொல்வதற்காகவே நான் தொடர்ந்து நீதிமன்றப் படி ஏறுகிறேன். மற்றபடி பணம் எனக்கு முக்கியம் இல்லை'' என்கிறார் அமைதியான குரலில்.

நாடறிந்த விஞ்ஞானிக்கே நீதி கிடைப்பதில் இத்தனை தாமதம் என்றால், சாதாரண மக்களின் நிலை..?

- ஜே.வி.நாதன்

படம்: ரா.ராம்குமார்