Published:Updated:

‘இதுதான் டிஜிட்டல் இந்தியா!’ - பயணிகளைப் பரிதவிக்கவிட்ட ரயில்வே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘இதுதான் டிஜிட்டல் இந்தியா!’ - பயணிகளைப் பரிதவிக்கவிட்ட ரயில்வே
‘இதுதான் டிஜிட்டல் இந்தியா!’ - பயணிகளைப் பரிதவிக்கவிட்ட ரயில்வே

‘இதுதான் டிஜிட்டல் இந்தியா!’ - பயணிகளைப் பரிதவிக்கவிட்ட ரயில்வே

சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த தென்மாவட்ட பயணிகளுக்குத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பயணிகளுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வழியில்லாத சூழ்நிலையில் டிஜிட்டல் இந்தியா குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருப்பதாகப் பயணிகள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.

ரயில்களில் பயணிக்க 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட்களை முன்பதிவு செய்ய வசதியுள்ளது. பண்டிகை, விழா, தொடர்விடுமுறை போன்ற தினங்களுக்குரிய முன்பதிவு டிக்கெட்கள் விரைவில் காலியாகிவிடும். ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் கிடைக்காதவர்கள் தட்கல் டிக்கெட்களை நம்பியிருப்பதுண்டு. பயணத் தேதியிலிருந்து ஒருநாள் முன்பு தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஏ.சி வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கும் படுக்கை வசதியுள்ள இரண்டாம் வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும். இதற்காக மக்கள் டிக்கெட் முன்பதிவு மையங்களில் விடிய விடிய காத்திருப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது. சில நிமிடங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும் சூழ்நிலை நிலவுகிறது. 

ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி எனத் தொடர்ச்சியாக அரசு விடுமுறை வந்ததால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படவுள்ளதால் தங்களது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால் ரயில், பஸ்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதிவருகின்றன. குறிப்பாக ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கட்டணக் கொள்ளை நடக்கிறது. இதனால், மக்கள் ரயில், அரசு பஸ்களில் பயணிக்க ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக, ரயில் பயணம் பாதுகாப்பானது என்று மக்கள் கருதுவதால் அதில் செல்ல மக்கள் மத்தியில் அதிகளவில் போட்டி நிலவுகிறது. மக்கள் நலன்கருதி சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுவதுண்டு. சிறப்பு ரயில்களில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. 
 


தொடர்விடுமுறையையொட்டி சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்தது. சிறப்பு ரயில், இன்று (அக்-2) தாம்பரத்தில் காலை 6 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தவர்கள் இன்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். காலை 6 மணி கடந்த நிலையில் ரயில் வருகை குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லை. இதனால், பயணிகள், தாம்பரம் ரயில் நிலைய அதிகாரியிடம் விவரத்தைக் கேட்டனர். அப்போது, அங்கு பணியிலிருந்த பெண் அதிகாரி, செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில் காலை 5 மணிக்கு சென்றுவிட்டதாக கூலாகப் பதிலளித்துள்ளார். இதனால், பயணிகளுக்கும் பெண் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளைச் சமரசப்படுத்தினர். 
 

இதுகுறித்து ரயிலைத் தவறவிட்ட ஜான்பீட்டர் கூறுகையில், “என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தனர். தென்காசிக்குச் செல்ல சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். காலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 5.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தேன். என்னைப்போல 75-க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கிருந்தனர். காலை 6 மணி கடந்தபிறகும் ரயில் வரவில்லை. இதனால், ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் கேட்டபோது, சிறப்பு ரயில் 5 மணிக்கு புறப்பட்டுச் சென்றவிட்டதாக பதிலளித்தார்.

ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்ட தகவல் பெரும்பாலான பயணிகளுக்குத் முறையாக தெரிவிக்கவில்லை. டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ரயில்வே துறையில் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்ட விவரத்தைக்கூட பயணிகளுக்குத் தெரிவிக்க வழிவகை இல்லை. பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் நேரம் மாற்றப்பட்ட தகவலைத் தெரிவித்திருக்கலாம். இதனால், 75-க்கும் மேற்பட்ட பயணிகளுக்குத் தேவையில்லாத சிரமம் ஏற்பட்டுள்ளது. டிக்கெட்களை ரத்து செய்யுங்கள் என்று ரயில்வே ஊழியர்கள் பதிலளிக்கின்றனர். பள்ளி, வேலைக்குச் செல்பவர்களின் நிலைமை குறித்த அக்கறையில்லாமல் ஊழியர்கள் பேசுகின்றனர்.

மக்களுக்காகச் சேவை செய்வதாகச் சொல்லும் ரயில்வே நிர்வாகத்தில் பொறுப்பற்ற சிலரால் ஒட்டுமொத்த ரயில்வே துறைக்குக் கெட்டப் பெயர் ஏற்படுகிறது. சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நாங்கள் பரிதவிப்பதைத் தாம்பரம் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. எங்களின் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூருக்குச் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் கூடுதலாக ரயில் பெட்டி இணைக்கப்பட்டது. தென்காசி, செங்கோட்டைக்குச் செல்ல முன்பதிவு டிக்கெட்களைப் பதிவு செய்தவர்களால் குருவாயூர் எக்ஸ்பிரஸில் செல்ல முடியவில்லை. மதுரை வரை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணித்தனர். வேறுவழியின்றி டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறோம்'' என்றார். 

 இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்குச் இன்று சென்ற சிறப்பு ரயிலை முதலில் காலை 6 மணிக்கு இயக்க திட்டமிட்டிருந்தோம். சில காரணங்களுக்காக அந்த ரயிலை காலை 5 மணிக்குப் புறப்பட முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அதுதொடர்பான அறிவிப்புப் பத்திரிகை, டி.வி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்குத் தெரியப்படுத்தினோம். எஸ்.எம்.எஸ் மூலமும் நேரம் மாற்றப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலருக்கு எஸ்.எம்.எஸ் சென்றடையவில்லை. இதனால் அவர்கள் சிறப்பு ரயிலைத் தவறவிட்டுவிட்டனர். அடுத்து தென்மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஒரு ரயில் பெட்டி இணைக்கப்பட்டு அதில் சிறப்பு ரயிலைத் தவறவிட்டப் பயணிகளை அனுப்பி வைத்துள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு