வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (03/10/2017)

கடைசி தொடர்பு:12:19 (03/10/2017)

15 வருட கோமாவை வென்ற மனிதர்... உதவிய மருத்துவம்!

எது விழிப்பு நிலை? எது உறக்க நிலை? இவ்விரண்டுக்கும் ஏதாவது அளவுகோல் இருக்கிறதா? இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்று ஒன்று இருக்கிறதா? உறக்க (கோமா) நிலைக்குச் செல்லும் முன் இருக்கும் நினைவுகள், இருக்கும் திறன்கள், இவை அனைத்தும் விழித்தப் பின்னும் இருந்தால்தானே அது சரியான விழிப்பு நிலையாக இருக்க முடியும்? ஏதோ ஆன்மிக தர்க்கமாக தெரியும் இதுகுறித்து கட்டுரையின் இறுதியில் காண்போம்.   

கோமா நிலை

அந்த 35 வயது மனிதர் மருத்துவமனையின் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். விதவிதமான நவீன மருத்துவ உபகரணங்கள் அவர் உடம்பில் மாட்டப்பட்டிருக்கின்றன. 20 வயதில் ஒரு கோரமான கார் விபத்தில் மாட்டிக்கொண்டார். அப்போதிருந்து இப்போது வரை கோமா (Comatose) நிலை. 15 வருடங்கள் மருத்துவமனையில் உயிர் இருந்தும், மூளை செயலிழந்ததால் பிணமாக இருக்கும் நிலை. ஆங்கிலத்தில் வெஜிடேட்டிவ் ஸ்டேட் (vegetative state) என்று அழைப்பார்கள். எந்த வகை சிகிச்சையையும் பயனளிக்காது போகவே, நவீன ஆராய்ச்சிகள் பக்கம் சென்றனர் மருத்துவர்கள்.

தற்போது அவர் இருக்கும் நிலையில், மூளை நரம்புகளில் முக்கிய நரம்பான வேகஸ் நரம்பை (Vagus Nerve) தூண்டி விடுவதன் மூலம் மீண்டும் மூளைக்கு உயிரூட்டலாம். அதை உணர்ந்த நரம்பியல் மருத்துவர்கள், சிறிய அளவிலான மின் தூண்டுதல்கள் கொண்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இது வலிப்பு நோயாளிகளுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் கொடுக்கும் சிகிச்சை. இந்த வேகஸ் நரம்பானது உடம்பின் பல்வேறு உறுப்புகளோடு தொடர்புடையது. அதன் செயல்பாடுகளை பெருமளவில் பாதிக்கும் ஒன்று. எனவே, இதன் மூலம் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் அந்த நபரின் மார்பில் ஒரு சிறிய கருவியைப் பொறுத்திவிட்டனர். அது அவ்வப்போது சிறிய அளவில் மின் தூண்டுதல்களை அரங்கேற்றி வேகஸ் நரம்பைத் தூண்டி விடும் முயற்சியில் இறங்கியது.

ஒரு மாத காலம் முடிந்த பின், சிறிதளவு முன்னேற்றத்தை மருத்துவர்களால் உணர முடிந்தது. மூளையின் செயல்படாமல் இருந்த பல பகுதிகள் இதனால் செயல்படத் தொடங்கியது. ஒரு பொருளை கண் முன்னே காட்டிவிட்டு அதை வலது மற்றும் இடது புறமாக நகர்த்தும் போது, அவரின் கருவிழிகள் அதேபோல் நகரத் தொடங்கின. யாரேனும் பேசும்போது, அவர்கள் இருக்கும் திசையை நோக்கித் திரும்பத் தொடங்கினார். அவருக்கு மிகப் பிடித்தமான பாடலை ஒலிபரப்பியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. சிகிச்சை தொடரும் பட்சத்தில் நிச்சயம் இன்னமும் முன்னேற்றம் நிகழும், விரைவில் இவர் முன்பிருந்த நினைவுகளுடன் பூரண குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். இந்த ஆச்சர்யமான மருத்துவ நிகழ்வைக் குறித்து ‘தற்போதைய உயிரியல்’ (Current Biology) என்ற ஆய்வுக் கட்டுரையில் விலாவாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளை நரம்புகள் சிகிச்சை

சரி, இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம். எது விழிப்பு நிலை? ஒரு நோயைப் போல, இது இருக்கிறதா இல்லையா என ஒரு பரிசோதனையின் மூலம் மட்டும் நமக்கு இதற்கான விடை கிடைத்து விடாது. கிரிக்கெட் ஆட்டத்தில் ரன் அவுட்டா இல்லையா என மூன்றாவது அம்பயர் கொண்டு கண்டுபிடித்துவிடலாம். ஆனால், LBW விக்கெட்கள் முழுக்க முழுக்க அம்பயர்கள் தருவதே. DRS கருவிகள் இருந்தாலும், அது பந்து இப்படிச் சென்றிருக்கலாம் என்று தன் கணிப்பை மட்டுமே சொல்லும். அதேபோல் தான் இந்த கோமா நிலையும்.

ஒரு சில நாடுகளில் வெஜிடேட்டிவ் ஸ்டேட்டில் இருக்கும் நோயாளி திரும்பவும் எழுந்து நடமாட வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், அவரின் உறவினர்கள் விருப்பப்பட்டால் கருணைக் கொலை செய்யலாம். ஒரு சில நோயாளிகள் அரை விழிப்பு நிலையில் இருப்பார்கள். அவர்கள் இன்னொருவரின் துணை கொண்டு தனக்கு வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் கருணைக் கொலை செய்துவிடுவார்கள். இந்தியாவில் இப்படிச் செய்யச்சொல்லி பலமுறை வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது விழிப்பு நிலை, இது கோமா நிலை என்று அளவுகோல் எல்லாம் கிடையாது. கோமா நிலை என்று உணர்ச்சியில்லாமல் படுத்திருந்த ஒருவர், எழும்போது, மருத்துவமனையில் தன்னைச் சுற்றி என்னவெல்லாம் நடந்தது என்று விளக்கிய சம்பவமெல்லாம் நடந்துள்ளது. எனவே, உண்மையில் எது விழிப்பு நிலை, எது கோமா நிலை, ஒருவர் மீண்டும் நினைவுகளுடன் எழுவாரா, எழ மாட்டாரா என்று எவராலும் கூறிவிட முடியாது, மருத்துவர்கள் உட்பட. இந்நிலையில், கருணைக் கொலை என்ற முடிவு, கொலைக்குச் சமமானதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்