Published:Updated:

சரிவில் பங்குச்சந்தை... பறிபோன பல லட்சம் கோடி... இனி சந்தை எப்படி இருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சரிவில் பங்குச்சந்தை... பறிபோன பல லட்சம் கோடி... இனி சந்தை எப்படி இருக்கும்?
சரிவில் பங்குச்சந்தை... பறிபோன பல லட்சம் கோடி... இனி சந்தை எப்படி இருக்கும்?

சரிவில் பங்குச்சந்தை... பறிபோன பல லட்சம் கோடி... இனி சந்தை எப்படி இருக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பங்குச்சந்தை, கடந்த ஏழு நாள்களாகக் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களின் பணம் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி ரூபாய் காணாமல்போனது. இந்த வருடத்தில் சந்தை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வந்தது; அடுத்தடுத்து புதிய புதிய உச்சங்களைக் கண்டுவந்தது. தொடர்ந்து வளர்ச்சியின்போக்கில் இருந்த சந்தை, ஏன் இப்படி மாறியது?

கடைசியாக நிஃப்டி 10,178 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 32,500 புள்ளிகளிலும் உச்சம் கண்டன. ஆனால், அதைத் தொடர்ந்த ஏழு நாள்களும் சரிவைச் சந்தித்ததில் சந்தை நான்கு சதவிகித வீழ்ச்சியைக் கண்டது. நிஃப்டி 400 புள்ளிகள், சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கும்மேல் இறக்கம் கண்டன. பெரும்பாலான பங்குகள் இந்த இறக்கத்தால் அதிகபட்சமாக 30 சதவிகிதம் வரையிலும்கூட இறக்கத்தைச் சந்தித்தன. முக்கியமாக, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் அதிக இறக்கத்தைச் சந்தித்துள்ளன. நிஃப்டி மிட் கேப் ஐந்து சதவிகிதமும் நிஃப்டி ஸ்மால் கேப் ஏழு சதவிகிதமும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. 

இந்த வருடத்தில் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் முறையே 21.9 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் ஏற்றம் கண்டு சர்வதேசச் சந்தைகளில் வேகமாக வளர்ந்துவந்த நிலையிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஏழு வாரங்களில் 2.66 பில்லியன் டாலர் முதலீட்டை வெளியே எடுத்திருக்கின்றனர். மேலும், இந்த வருடத்தில் ஜனவரி முதல் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரையிலான காலத்தில் நிஃப்டி 50, நிஃப்டி 500 குறியீடுகள் முறையே 23 மற்றும் 27 சதவிகிதம்தான் வளர்ச்சி கண்டுள்ளன. நிஃப்டி மிட் கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் இரண்டும் முறையே 31 சதவிகிதம் மற்றும் 49 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருந்த சந்தை, தலைகீழாக மாறிவிட்டது.

சந்தையின் இந்தத் தொடர் இறக்கத்துக்கு, பல காரணங்கள் உள்ளன. அவை சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவிலான தாக்கங்கள், அமெரிக்கா - கொரியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றங்கள், ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தியதால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நிலை எனப் பல காரணங்கள் படையெடுத்தன. பெரும் உச்சங்களைச் சந்தித்துவந்த சந்தை, எப்போது காரணம் கிடைக்கும் எனக் காத்துக்கொண்டிருந்த சமயத்தில், இந்தக் காரணங்களை எல்லாம் பயன்படுத்திக்கொண்டது. 

இந்தியாவில் சமீபத்தில் செய்யப்பட்ட சில பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்தியப் பொருளாதாரத்தைக் குறுகிய காலத்துக்குக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், துறைவாரியாகப் பார்க்கும்போது பெரும்பாலான துறைகளில் வளர்ச்சி இருக்கவே செய்கிறது. மேலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் தங்கள் முதலீடுகளை அதிகரித்துவருகின்றனர். எனவே, மேக்ரோ அளவிலான காரணிகள் சந்தையைப் பாதித்தாலும்கூட நல்ல நிறுவனப் பங்குகளின் செயல்பாடுகளால் சந்தை தன்னுடைய போக்கில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என நம்பலாம்.

இந்தியப் பங்குச்சந்தையின் இறக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் மகத்தான பங்கு ஃபண்ட் நிறுவனங்களுக்கு உள்ளன. சந்தை சரிவைச் சந்திக்கும் நிலையிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுக்கும்போதும் சந்தைக்குள் நுழைந்து முதலீடுசெய்வது ஃபண்ட் நிறுவனங்களின் வாடிக்கை. இதனால் சந்தை இறக்கம் அதிகளவில் இருப்பதில்லை. 

மேலும். பங்குச்சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என, பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“கடந்த வாரம் சந்தை தொடர்ந்து இறக்கத்தைச் சந்தித்தது. இந்த இறக்கம், ஆரோக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், சந்தை தொடர்ந்து பல புதிய உச்சங்களைச் சந்தித்துவந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இறக்கத்தைச் சந்திக்கலாம் என்ற பதற்றம் நிலவியது. எனவே, இந்த இறக்கம் எல்லோரும் எதிர்பார்த்ததுதான்.

அதுமட்டுமல்லாமல் சந்தை கடந்த வியாழன் அன்று மீண்டும் மெள்ள ஏற்றமடைய ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமையும் பெரிய அளவில் இறக்கம் இல்லை. நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சந்தை ஏற்றத்தில்தான் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்த்ததுபோலவே சந்தை மீண்டு வந்திருக்கிறது. இது விழாக்காலம் என்பதால், சந்தை ஏற்றமடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. எனவே, இறக்கத்தின்போது நல்ல பங்குகளை தாராளமாக வாங்கலாம்” என்றார்.

அதன்படியே இன்றைய வர்த்தகத்தில் சந்தை காலை முதலே ஏற்றத்தில் வர்த்தகமாகிவருகிறது. நிஃப்டி 9,850 புள்ளிகளைத் தாண்டியது. இதன் மூலம் சந்தை இறக்கத்திலிருந்து மீண்டு, மீண்டும் ஏற்றத்தின்போக்கில் நகரும் என்பது தெளிவாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு