ஓர் ஆண்டு முழுவதும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிட்ட மனிதர்... ஏன்? | This mas has taken only potato as food for one year

வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (05/10/2017)

கடைசி தொடர்பு:13:32 (05/10/2017)

ஓர் ஆண்டு முழுவதும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிட்ட மனிதர்... ஏன்?

உருளைக்கிழங்கு

உணவு ஒவ்வொரு மனிதனின் பிரதான தேவை. உயிர்வாழ்வதற்காக மட்டும் உண்டு கொண்டிருந்த மனித இனம் இன்று சமையலை ஒரு கலையாக பார்க்கிறது. உணவில் நாம் எத்தனையோ புதுமைகளை கொண்டு வந்துவிட்டோம். ஒவ்வொரு வேளைக்கும் பலவிதமான உணவுகளை சாப்பிட்டு பழகிய நம்மால் இனி காலம் முழுக்க ஒரே உணவு வகையை சாப்பிட்டு காலம் தள்ள முடியாது.

ஆனால், "ஒரே உணவை வாழ்நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்னவாகும்... அது சாத்தியமா?" என்ற கேள்வியுடன் வெளிநாடுகளில் ஓர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது உருளைக்கிழங்கைதான்.

2016 ம் ஆண்டு முழுக்க ஆண்ட்ரூ டெய்லர் என்ற வெளிநாட்டவர் உருளைக்கிழங்கை மட்டுமே தன் பிரதான உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சில மூலிகைகள், உப்பு, தக்காளி சாஸ், கூடவே வைட்டமின் B12 என்று சிலவற்றை தன் உணவில் சேர்த்துக் கொண்டாலும், காலை மாலை இரவு என்ற மூன்று வேளைக்கும் உருளைக்கிழங்கை மட்டும் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார். அந்த ஆண்டில் செய்யப்பட்ட 4 பரிசோதனைகளில் அவர் உடல்நிலை சமநிலையில் இருப்பதாக முடிவு வந்தது. அதுமட்டுமல்லாமல் கணிசமான அளவு எடையை குறைத்ததோடு ஆண்டுமுழுக்க புத்துணர்ச்சியோடும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தமாதிரி ஒரே வகையான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது அவ்வளவு சரியானாதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ 20 அமினோ அமிலங்கள் தேவை. அதில் ஒன்பது அமினோ அமிலங்கள் அத்தியாவசியமானவை. இந்த அமினோ அமிலங்களை நம் உடலே தன்னிச்சையாக உற்பத்தி செய்துகொள்ள முடியாது. எனவே நாம் இவற்றைப் பெற உணவுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இதர சில கனிமங்களும் தாதுக்களும் உணவிலிருந்து மட்டுமே கிடைக்கின்றன. இவற்றோடு சேர்த்து உட்கொள்ளப்படும் நீர் நம் செல்லின் இயல்பான இயக்கங்களுக்கு உதவுகிறது. எனவே ஒற்றை உணவுமுறை என்பது கொஞ்சம் சாத்தியப்படாத ஒன்றுதான்.

வரலாறு முழுக்க நாம் கலவை உணவுமுறையை மட்டும்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் அரிசி, தயிர், காய்கறிகள், நெய், நட்ஸ் என்று இவை எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறோம். இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெரும்பாலும் சமன்செய்துவிடும். ஆனால், ஒற்றை உணவு முறையில் உடலுக்குத் தேவையான இவை எல்லாமும் நிச்சயமாக நமக்கு கிடைக்கவே கிடைக்காது. பஞ்சம், விரதம் போன்ற காலங்களில் கூட குறைந்தபட்சம்  இரண்டு விதமான உணவுகளையாவது உட்கொண்டால் தான் மனிதன் ஆரோக்கியமாகவே வாழ முடியும்.

ஆண்ட்ரூ டெய்லரை போலவே இந்த ஒற்றை உணவுப் பழக்கத்தை வரலாற்றில் நிறையபேர் பின்பற்றி இருக்கிறார்கள். 1800 களின் தொடக்கத்தில் ஐரிஷ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களுக்கான கலோரிகளை முழுக்க முழுக்க உருளைக்கிழங்குகளில் இருந்துதான் பெற்றார்கள். 2015-ம் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கனும் 115 பவுன்ட் உருளைக்கிழங்கை உண்டிருந்தார்கள்.

சொல்லப்போனால் உருளைக்கிழங்கு ஒரு சரியான தேர்வுதான். இதில் நம் உடலுக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்கிற அத்தனை அமினோ அமிலங்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்திருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கில் மட்டுமே தங்கிவிட்டால் நிச்சயமாக வைட்டமின் மற்றும் கனிமக் குறைபாடுகள் கட்டாயமாக ஏற்படும்.

உருளைக்கிழங்கு

தோராயமாக உடலுக்குத் தேவையானவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த உருளைக்கிழங்குகள் தந்தாலும் அது போதுமானதாக இருக்காது. கால்சியம் சத்து சரியான அளவுக்கு கிடைக்க வேண்டுமென்றால் ஒருநாளைக்கு 84 உருளைக்கிழங்குகளை சாப்பிட வேண்டிவரும்.

ஒற்றை உணவுமுறையில் உருளைக் கிழங்கை மட்டும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளும்போது அது தேவையற்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதிகப்படியான ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடல் பருமனும் கூட அதிகரிக்கும்.

ஆண்ட்ரூ டெய்லர் எடை குறைந்திருக்கிறார், ஆனால் இதுவொரு சோதனை மட்டுமே. வாழ்வில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து பார்க்க விரும்பி அவர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முடித்தும் விட்டார். அவ்வளவே. அதற்காக இது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப்படும் என்று அர்த்தமல்ல.

ஊட்டச்சத்து நிபுணர்கள் பெரும்பாலும் உருளைக்கிழங்கை உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள். தவிர காய்கறிகள், பழங்கள், தானியங்கள், எண்ணெய், புரதங்கள் போன்றவை கலந்தக் கலவை உணவையே பரிந்துரை செய்கிறார்கள். உண்மையில் அதுதான் ஆரோக்கியமும்கூட. எனவே, உருளைக்கிழங்கை மட்டும் தனியாக உண்ண வேண்டாம். ஆரோக்கியமான உணவுப்பொருள்களோடு உருளைக்கிழங்கையும் சேர்த்தே பயன்படுத்துங்கள்.


டிரெண்டிங் @ விகடன்