வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (05/10/2017)

கடைசி தொடர்பு:20:19 (05/10/2017)

செர்னோபிலின் இன்றைய குழந்தைகள்தான் அணு உலைக்கெதிரான அடையாளங்கள்..! #Chernobyl

இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைத்து நிகழ்காலத்தில் தினம் தினம் அழுகிற சம்பவங்கள் உலகத்தில் எப்போதாவதுதான் நடக்கும். இயற்கை பேரிடர்களை எல்லாம் தாண்டிய ஒரு பேரிடரின்  பெயர் செர்னோபில். சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைனின் பிரிப்யாட் (pripyat) நகருக்கு அருகில் உள்ள செர்னோபில் நகரத்தில் அணு மின்உலை அமைந்திருந்தது. இதில் 4 யூனிட்கள் செயல்பட்டன. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் பெற்றவை. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் பெரும் சத்தத்தோடு உலை வெடிக்கிறது. கடுமையான வெப்பம். உலை பற்றி எரியத் தொடங்குகிறது. தொடர்ந்து 9 நாட்களுக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் கலந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைத்து, மரணத்தை அளித்து, பல லட்சம் பேரை நடை பிணங்களாக்கியது.

விபத்திற்கான காரணத்தை கண்டறிய முயன்ற வலேரி லெகசோவ்  மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.  நான்காவது அணு உலைக்கு பல மில்லியன் செலவில் கான்க்ரீட் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தூங்கும் துயரமாக இப்போதும் பதுங்கி  இருக்கிறது செர்னோபில். பேரழிவின் இழப்புகளை எல்லாம் கடந்து எல்லாத் தவறுகளையும் சரி செய்து மீண்டு வருவதற்குள் காலம் அடுத்தத் தலைமுறையை அம்மக்களின் கையில் கொடுத்துவிட்டது.

செர்னோபில்

செர்னோபில் விபத்து பற்றிய எந்தக் குறிப்பையும் அறியாத அடுத்தத் தலைமுறை குழந்தைகள்தான் இப்போது செர்னோபில்லின் குறியீடுகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாமல் பேரிடரின் அடையாளங்களைச் சுமந்து கொண்டிருக்கிற குழந்தைகள்தான் அணுவுலைக்கு எதிரான அடையாளங்கள். உடலில் கட்டிகளோடு இருக்கிற குழந்தைகள், ஒரு கால் வளர்ந்து ஒரு கால் இழந்த குழந்தைகள், குறுகிய கைகளும் கால்களும் இருக்கிற  குழந்தைகள், மனநலன்  பாதித்த குழந்தைகள், புற்றுநோய் பாதித்த குழந்தைகள் என செர்னோபில் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வளவு எளிதில் கடந்து விட முடிவதில்லை. கண்ணீரைத் தவிர வேறு எதையும் காணிக்கையாக்கி விட முடியாத படங்கள் அவை. 

பெலாரசின்  தலைநகரான மின்ஸ்க்கில் இருக்கிறது நோவின்கி மனநல மருத்துவமனை. உடலியல், நரம்பியல், உளவியல் என முற்றிலும் சிதைந்து போன ஓர் உலகம் இயங்குகிற இடம். ஒரு பேரழிவு அதன் நினைவாக விட்டுச் சென்றதில் மிக முக்கியமானவர்கள்  இருக்கிற இடமாக இருக்கிறது. 200க்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிற அந்தக் காப்பகத்தில் இருந்து வருகிற சாதாரண ஒலி ஓர்  குழந்தையின் அசாதாரண வலி. கதிரியக்கப் பாதிப்புகளால் பிறந்த குழந்தைகளில் பலர் பெற்றோருக்கு வெளிப்படையாகத் தொந்தரவு தருகிறார்கள். அவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டு நோவின்க்கு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அப்படியான குழந்தைகள் உயிரை மட்டுமே தக்க வைத்திருக்கிறார்கள். பராமரிக்க முடியாத குழந்தைகளை மீட்டெடுத்துப் பராமரிக்கிறது இந்த மருத்துவமனை. வருடங்கள் கடந்தாலும் அணு உலையின் தழும்புகளைச் சுமந்தே  இப்போதும் பல குழந்தைகள் பிறக்கின்றன.

அணுவுலை

விபத்து நடந்து பதினாறு வருடங்கள் கழித்து, தொண்டு நிறுவனம் ஒன்று பெலாரஸ் குழந்தைகள் பற்றிய புகைப்படங்களை எடுத்திருக்கிறது. புகைப்படத்தில் இருக்கிற குழந்தைகள்  எல்லாம் ஒன்றிலிருந்து நான்கு வயதை உடையக் குழந்தைகள். கதிரியக்கத்தின் தாக்கம் எப்படியான விளைவுகளை வெளிப்படுத்தும் என்பதற்கு அப்புகைப்படங்களே சாட்சி. பெலாரசின் மின்ஸ்க்  நகரில் இருக்கும் நம்பர் ஒன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு உடல் சார்ந்த தீவிர நோய் தாக்குதலில் இருக்கிறார்கள். மண்டை ஓட்டுக்குள் இருக்க வேண்டிய குழந்தையின்  மூளை  தலைக்கு வெளியே இருக்கிற பெரிய கட்டிக்குள் இருக்கிறது. உடலுக்குள் இருக்க வேண்டிய சிறுநீரகம் உடலுக்குள் இருக்கிற பெரிய கட்டுக்குள் இருக்கிறது. நீர் சூழ்ந்து பெரிய தலையுடன் சில குழந்தைகள்  உடல் வளர்ச்சியில் மாறுபட்ட உருவத்தை பெற்றிருக்கிறார்கள். 1980களில் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைகளின் சதவிகிதம் 80. 1986 அணு உலை விபத்திற்கு பிறகு அது 20 சதவீதமாக  குறைந்திருக்கிறது. வருடத்திற்கு 7000 குழந்தைகள் என்கிற விகிதத்தில் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள். 

விபத்து

செர்னோபில் சில்ட்ரன்ஸ் இன்டர்நேஷனல் என்கிற அமைப்பு பெலாரஷ்ஷின் பல பகுதிகளிலும் மையங்களை ஏற்படுத்திக் கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து வருகிறது. “சில நேரங்களில் இருகரங்கள் கூடக் குழந்தைகளை வலியிலிருந்தும் பயத்திலிருந்தும் வெளிக் கொண்டுவரும்” என்கிற வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த அமைப்பு. அதன் நிறுவனர் அடி ரோச். உலக நாடுகளில் தன்னார்வலர்களை ஒன்றிணைத்துச் சிறந்த மருத்துவ வசதியை இந்தக் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது இந்த அமைப்பு. இவ்வமைப்பு மீட்டெடுத்த குழந்தைகள் எல்லோரும் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள். வருடத்திற்கு 300 குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் என்கிறார் அடி ரோச்.

அணு உலை தொடர்பான விபத்து நடக்கவே நடக்காது எனச் சொல்லிய இடங்களில்தான் எல்லாமே சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது. மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் வயது வந்தோரைப் பற்றி ஏற்கனவே மறந்துவிடத் தொடங்கிய உலகம் அதன் கொடூர விளைவுகளுடன் வாழ்கிற குழந்தைகளை பார்த்த பின்பும் அணுஉலைகளை  நடத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலைகள் வேண்டும் என்பதைச் சொல்ல எத்தனைக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வேண்டாம் என்பதைச் சொல்ல இப்போதைக்கு  இந்தக் குழந்தைகள் காரணமாய் இருக்கிறார்கள். அணு உலை விபத்தின் தாக்கத்தில் முடங்கிப் போய்  கிடப்பது செர்னோபில்  சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்ல அந்தக் குழந்தைகளின் நாளை பற்றிய நம்பிக்கைகளும்தான்.


டிரெண்டிங் @ விகடன்