வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (05/10/2017)

கடைசி தொடர்பு:19:13 (05/10/2017)

ஹெலன் கெல்லர், அப்துல் கலாம், சச்சின்...­ சாதனையாளர்களின் வாழ்வை மாற்றிய ஆசிரியர்கள் இவர்கள்தாம்! #WorldTeachersDay

ஆசிரியர்

இன்று உலக ஆசிரியர்கள் தினம். உலகின் அறிவுபூர்வமான வளர்ச்சிக்கு ஆரம்ப வித்திடும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில், யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு முதல் இந்த தினத்தைக் கொண்டாடிவருகிறது. சாதனையாளர்களில் பலர், தங்களின் வெற்றிக்குப் பின்னாலிருப்பது தங்களின் ஆசிரியர்கள்தாம் என்று நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்... 

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லருக்குக் கற்பித்த ஆனி சலிவன்!

காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற சிறுமியாக இருந்த ஹெலன் கெல்லர் தன் ஏழாவது வயதில் தன்னுடைய ஆசிரியரைச் சந்தித்தபோது, அவர் தனது 21வது வயதில் இருந்தார். அந்த நொடியிலிருந்து, ஹெலன் கெல்லரின் ஆசிரியராக மட்டுமல்ல, உற்ற தோழியாக தனது இறுதிக்காலம்வரை இருந்தார் ஆனி. 'வாட்டர்' என்ற ஒரு சொல்லை ஹெலனுக்குப் புரியவைக்க, ஹெலனின் ஒரு கையில் தண்ணீரை ஊற்றி, மற்றொரு கையில் ‘வாட்டர்’ என்று எழுதிப் புரியவைத்தார். இப்படி ஒவ்வொரு பொருளின் பெயரையும் கற்றுக்கொடுக்க, ஹெலனின் ஒரு கையில் அந்தப் பொருளையும் மற்றொரு கையில் அதன் பெயரையும் எழுதிக்காட்டிக் கற்பித்தார் ஆனி. அவரின் முயற்சியால், ஆறே மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், பிரைய்லி முறையையும் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். அவருக்கு மற்றவர்களைப்போல் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதை  அறிந்துகொண்டு, அதற்குப் பிரத்யேகப் பயிற்சியளித்தார் ஆனி. பின்னாள்களில் ஹெலன் ஒரு சாதனையாளராக உருவானதற்கு, ஆனி தன் 50 வருடகால வாழ்க்கையைத் தன் மாணவிக்காக அர்ப்பணித்ததுதான் முக்கியக் காரணம்!

அப்துல் கலாம்

அப்துல் கலாமை செதுக்கிய ஆசிரியர்கள்!

நம் அனைவருக்கும் அப்துல் கலாம், ஒரு சிறந்த ஆசிரியர் என்பது தெரியும். ஆனால் அவருக்கு, தான் அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற கனவு ஏற்படுவதற்கும், அந்தக் கனவை நனவாக்குவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களும்... அவரின் ஆசிரியர்களே! அப்துல் கலாமிற்கு ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, அவரின் கையெழுத்து அவ்வளவு நன்றாக இருக்காது. அதற்குத் தனிப்பயிற்சியளித்தவர் அவருடைய ஆசிரியர் முத்து ஐயர். ஒரு பறவை எப்படிப் பறக்கிறது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச்சென்று கற்பித்த ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஐயர்தான், அப்துல் கலாமின் அறிவியல் கனவுக்கு வித்திட்டவர். கணிதத்தின் ஆழத்தை கற்பித்த பேராசிரியர் தோத்தரி ஐயங்கார், கடினமான ஒரு செயல்திட்டத்தை மூன்றே நாள்களில் முடித்துத்தரும்படி கலாமைக் கேட்ட பேராசிரியர் சீனிவாசன் என அப்துல்கலாம் வாழ்க்கை நல் ஆசிரியர்களால் செதுக்கப்பட்டது!

சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் அற்புதப் பயிற்சியாளர்!

நல்ல ஆசிரியர்கள் படிப்புக்கு மட்டுமல்ல, வாழ்வின் எல்லா திசைகளுக்கும் தேவை. விளையாட்டுக்கும். இந்தியக் கிரிக்கெட்டின் தெய்வமாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் வெற்றிக்கு முதல் அடிக்கல் நாட்டியது அவரின் முதல் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகர்(Ramakant Achrekar). சச்சின் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், ஜூனியர் டீமில் விளையாடிக்கொண்டிருந்தார். அவருக்கு ராமகாந்த் பயிற்சி ஆட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சச்சின் அதற்குச் செல்லாமல், சீனியர் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளைக் கைதட்டி கண்டுகழித்தார். ராம்காந்த் சச்சினிடம், 'பயிற்சி ஆட்டத்துக்குச் சென்றாயா?' எனக் கேட்க, 'இல்லை, நம் சீனியர் அணிகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்' என்றார் சச்சின். ராம்காந்த் மிகவும் கோபமாக, 'மற்றவர்களின் ஆட்டத்துக்குக் கைத்தட்டுவதை நிறுத்திவிட்டு, நீ கைத்தட்டல் வாங்கும்படி ஏதாவது செய்' என்றார். இன்றும் சச்சினுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும் கைதட்டல்களுக்கு எல்லாம் முதல் விதை, ராம்காந்த் போட்டதுதான்! 

சாதனையாளர்கள் மட்டுமல்ல, சாமான்யர்களும் தங்கள் வாழ்வின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிக்கு உரியவர்களே! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்