வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (06/10/2017)

கடைசி தொடர்பு:16:49 (06/10/2017)

சயோலா... மலயான் புலி... சாலமண்டர்... உயிரைக் கையில் பிடித்திருக்கும் விலங்குகள்! #EndangeredSpecies

இந்த பூமி, மனிதன் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்க ஆரம்பித்ததன் விளைவுகள் பல. அதில் முக்கியமானது அழிந்து வரும் விலங்குகள். இந்த அழிவின் பயணத்தில் ஒருநாள் மனிதர்களும் சேர்ந்தே ஆக வேண்டும் என்பதை நாம் உணர்வதே இல்லை. 

அழிந்துவரும் சில விலங்குகளைப் பற்றிய தொகுப்பு இது.

வக்யூட்டா 

விலங்கு

வக்யூட்டா என்னும் இந்த விலங்கு கலிஃபோர்னிய வளைகுடாவில் வாழும் ஒரு வகை கடற்பன்றி. கடலில் வாழும் பாலூட்டிகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினம் இதுதான். முதன்முதலில் 1950 ல்தான் இவை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1997ல் 600 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 2014ல் 100 ஆக குறைந்தது. இது மேலும் குறைந்து 2016ல் வெறும் 30 ஆனது. தக்கநடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் விரைவில் இந்த இனமே மறைந்துவிடக்கூடும். இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது இப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்படும் செவுள்வலை மீன்பிடிப்புதான். இந்த வலைகளில் அடிபடும் இவை பெரும்பாலும் உயிர்வாழ்வதில்லை. இதைத் தடுக்க இந்த ஜூன் மாதம் மெக்ஸிக்கோ ஜனாதிபதி இந்த மீன்பிடிப்புக்கு நிரந்தரத்தடை விதித்துள்ளார். மேலும், மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார். இவற்றைக் காப்பாற்ற இவற்றுள் சிலவற்றைப் பிடித்து உரியமுறைகளில் இனப்பெருக்கத்தைக் கூட்ட முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், சிறைபிடிக்கப்பட்டநிலையில் இவை தாக்குபிடிப்பது கடினம்தான்.

ஆமூர் சிறுத்தை 

விலங்கு

இந்தச் சிறுத்தைகள் ரஷ்யா மற்றும் சீனாவின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60 மட்டுமே எஞ்சியுள்ளன. ரஷ்யா, சீனா இடையே ஓடும் ஆமூர் நதி அருகே வாழ்வதாலேயே இவற்றுக்கு இப்பெயர். சாதாரண சிறுத்தைகளைவிட அளவில் சிறிதான இவை அடர்ந்த பனியிலும் வாழப்பழகியவை. புதிய சாலைகள், கட்டடங்கள் என அழிக்கப்பட்டுவரும் இவற்றின் வாழ்விடமும் இதற்கு முக்கியக் காரணம். மேலும், வேட்டையாடுதலால் இவற்றின் இரைகளும் குறைந்துவருவதாகத் தெரிகிறது. வருடத்துக்கு வருடம் நீண்டுக்கொண்டே போகும் குளிர்காலத்தில் சாதாரணமாகவே உணவிருக்காது என்பதால் இதன் நிலை மோசமாகி வருகிறது. இது தொடர்ந்தால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் உயிரியல் பூங்காக்களில் மட்டும்தான் இவற்றைக் காணமுடியும்.

ஜாவன் காண்டாமிருகம்

ஜாவா சுமத்ரா தீவுகளில் வாழும் இவை அதிகபட்சமாகப் பார்த்தால் கூட 100க்கு மேல் கூட இன்று இருக்காது. அழிந்துவரும் ஐந்து வகை காண்டாமிருகங்களுள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதுதான். இவற்றுள் பல வியட்நாமில் இருந்துள்ளன. ஆனால், அவை அழிந்துவிட்டதாக 2011ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழ்விடத்தை அழித்த வியட்நாம் போர்தான். இப்போது இவை இந்தோனேசியாவின் உஜுங் குலோன் தேசியப் பூங்காவில் மட்டும்தாம் உள்ளன. மருத்துவகுணமுடைய கொம்புகளுக்காக அதிக அளவில் வேட்டையாடப்பட்டு கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன இந்தக் காண்டாமிருகங்கள். ஏறத்தாழ இதன் நெருங்கிய உறவினமான இந்திய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகமும் இதே நிலையில்தான் இருக்கிறது .

தி நார்த்தேன் ஸ்போர்ட்டிவ் லெமூர்

லெமூர்

மடகாஸ்கர் தீவில் மட்டும் வாழும் இவை மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட விலங்குகளுள் ஒன்று. இதுதான் நமது பிரைமேட் இனத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் உயிரினம். மரக்கரிக்காக இவை வாழும் மரங்கள் வெட்டப்படுவதால் இவற்றின் வாழ்விடங்கள் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. மேலும், சுருங்கிவரும் இந்தக் காடுகளில் வாழும் மற்ற மாமிச உண்ணிகளான பாம்புகளுக்கும், பறவைகளுக்கும் எளிய இறையாகின்றன இந்தச் சின்ன லெமூர்கள். இவை எடையில் அதிகபட்சம் 1 கிலோவுக்கு மேல் இருக்காது. இன்று இவற்றின் எண்ணிக்கை 20க்கும் கீழே குறைந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

சீனாவின் பெரிய சாலமண்டர்

சாலமண்டர்

சீனா எங்கும் பரவியிருந்த இந்த சாலமண்டர்தான் உலகிலேயே பெரிய நீர்நில விலங்காகும். 6 அடி நீளம் வரை வளரும் இவை பலவருடங்களாக மேல்தட்டு சீன மக்களின் உணவாக இருந்துவருகிறது. பல மருத்துவக்குணங்கள் இவற்றுக்கு உண்டு எனவும் நம்பப்படுகிறது. இதனால் அதிக அளவில் வேட்டையாடப்படும் இவை 1950ல் இருந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இன்று குறைந்துள்ளது. சீன அரசின் ‘மிகவும் ஆபத்தான நிலையில் பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகள்’ பட்டியலில் இவை சேர்க்கப்பட்டாலும் இன்றும் வருடத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சாலமண்டர்கள் வேட்டையாடப்பட்டுவருகின்றன. இவற்றின் விலைமதிப்பு அப்படி. இந்த சாலமண்டர்கள் வாழும் படிமங்களாக (living fossils) கருதப்படுகின்றன. அதாவது பல கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த இவற்றின் படிமங்கள் கிடைக்கபெற்றுள்ளநிலையில் இன்றும் இவை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பலநூறு கோடி வருடங்கள் வாழ்ந்த இவற்றுக்கே இந்த நிலை.

மலாயன் புலி 

மலயான்

இந்த லிஸ்டில் இருக்கும் மற்ற விலங்குகளைப் போல் புலிகளில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாப் புலிகளுமே மோசமான நிலையில்தாம் உள்ளன. ஏற்கெனவே பாலி, காஸ்பியன், ஜாவன் இனப்புலிகள் அழிந்தேவிட்டநிலையில் இன்று மிஞ்சியிருக்கும் புலி இனங்களும் அழிவை நோக்கியே பயணித்து வருகின்றன. அதில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது மலேசிய தீபகற்பத்தில் வாழும் இந்த மலாயன் புலிகள்தாம் . 2013ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 340க்குள்தான் இவற்றின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்தது. இன்று அதுவும் குறைந்திருக்கும் என்று அஞ்சப்படுகிறது. நகரமாக்குதலுக்கு அழிக்கப்பட்ட இவற்றின் வாழ்விடங்கள், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையாடுதல் என இந்தப் புலிகள் அழிந்துவருவதற்கான காரணங்களாக மனிதச்செயல்களையே இங்கும் பட்டியலிடலாம். புலிக்கறி மற்றும் புலி எலும்பு மருந்துகளுக்கென மலேசியாவில் தனி நிழலுலக மார்க்கெட் ஒன்று இயங்கிவருகிறது. இது தொடர்ந்தால் மேலே குறிப்பிட்ட அழிந்த புலி இனங்களுடன் இவையும் விரைவில் சேரும். ஏற்கெனவே இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் இவை அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சயோலா 

சயோலா

வியட்நாம் பகுதிகளில் மட்டும் காணப்படும் இவற்றுக்கு இன்னொரு பெயரும் உண்டு "ஏசியன் யுனிகார்ன்”. மாடு, ஆடு, மான் போன்றவற்றின் உறவினமான இந்த சயோலாக்கள் 1999ல்தான் முதல்முதலாக கேமராக்களில் பிடிபட்டது. பாதுகாப்பு அமைப்புகளால் பலமுறை சிறைபிடிக்கப்பட்டு வளர்க்க முயற்சித்தபோதும் இவை எதுவும் நீண்டநாள்கள் தாக்குபிடிக்கவில்லை. ஏற்கெனவே குறைந்தளவில் காணப்படும் இவற்றைப் பிடிப்பவர்களுக்கு உள்ளூரில் தனிமரியாதை வேறு உண்டு. அதுமட்டுமல்லாமல் மற்ற விலங்குகளுக்கு வைக்கப்படும் பொறிகளில் பலநேரங்களில் இவை சிக்கி உயிரிழக்கின்றன. அதனால் இதுவரை கிட்டத்தட்ட 26,000 பொறிகளை அப்பகுதிகளிலிருந்து அகற்றியுள்ளனர் அந்நாட்டின் விலங்கியல் பாதுகாப்பு இயக்கங்கள். 

ஹாக்ஸ்பில் கடல் ஆமை 

ஹாக்ஸ்பில்

அட்லாண்டிக் மற்றும் இண்டோ-பசிபிக் கடலில் வாழும் இவை அலங்கார ஓடுகளுக்காக வேட்டையாடப்பட்டு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அழிந்துவிட்டன .எகிப்து, சீனா நாடுகளில் இருந்த பல நாகரிகங்கள் இவற்றின் ஓடுகளை அலங்காரத்துக்குப் பயன்படுத்தியுள்ளன. இதுதான் "டார்ட்டாய்ஸ் ஷெல்"எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இன்றும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறுகின்றன. இவற்றின் விற்பனை. இதேபோன்று மிகப்பெரிய ஆமையான லெதர்பாக் கடல் ஆமைகளும் 80 சதவிகிதம் குறைந்துள்ளன.

மேற்கு தாழ்நில கொரில்லா

கொரில்லா

கடைசியாக இந்த லிஸ்டில் இருப்பது நமக்கு மிகவும் நெருங்கிய கொரில்லாக்கள்தாம். காடுகள் அழிக்கப்படுவது, வேட்டையாடப்படுவதைப் போன்ற வழக்கமான காரணங்கள் தாண்டி இவற்றின் அழிவுக்கு இன்னொரு காரணம்"எபோலா". ஆம் எபோலா பாதிப்பால் 400 எண்ணிக்கை கொண்ட குழுக்களில் இன்று 40 தான் மிஞ்சியுள்ளன. 2003ல் ஆரம்பமான இந்தப் பாதிப்பிலிருந்து இவை இன்னும் மீண்டுகொண்டேதான் இருக்கின்றன. மனிதர்களைப் போன்ற பல குணங்களை உடையே இவை உலகளாவிய உயிரியல் பூங்காக்களில் மட்டும் 500க்கும் மேல் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றுள் சில குட்டிகள் கடத்தப்பட்டு அப்பகுதிகளில் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. 

இது சின்ன லிஸ்ட் தான். IUCN என அழைக்கப்படும் சர்வேதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மேலே குறிப்பிடப்பட்ட விலங்குகள் உட்பட 2464 விலங்கினங்களை critically endangered என்ற மோசமாக அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் சேர்த்துள்ளது. நாளுக்கு நாள் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேதான் வருகிறது. பாண்டா, புலி போன்ற சில மிருகங்களுக்குக் கிடைத்த அக்கறையும், பாதுகாப்பும் இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பாலான மிருகங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது சோகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்