உலகின் விலையுயர்ந்த காபி புனுகுப் பூனையின் கழிவா? #CivetCat | Secret Behind the World’s Most Expensive Coffee

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (06/10/2017)

கடைசி தொடர்பு:19:59 (06/10/2017)

உலகின் விலையுயர்ந்த காபி புனுகுப் பூனையின் கழிவா? #CivetCat

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும், புகையிலை பொருள்களுக்கு வாசனை கூட்டவும், மருந்துக்காகவும் வேட்டையாடப்பட்ட உயிரினங்களில் முக்கியமானது புனுகுப் பூனை. அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலிலிருந்து, அரிய வகை உயிரினங்களின் பட்டியலுக்கு வந்திருக்கிறது புனுகுப் பூனை.

புனுகு பூனையின்

புனுகுப் பூனைகளில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக விலங்கியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதில் ஆப்பிரிக்க புனுகுப் பூனைகள்தான் பிரபலமானவை. இந்தியாவிலும் பல வகையான புனுகுப் பூனைகள் உண்டு. மலபாரைத் தவிர்த்த மற்ற பிரதேசங்களில் சிறிய வகையான புனுகுப் பூனைகள் இருந்தன. மலபார் வகை புனுகுப் பூனை, ஆப்பிரிக்கா வகையைப் போல பெரியது. வாலைத் தவிர்த்து உடல் மட்டுமே சுமார் நான்கு அடி வரை இருக்கும். நான்கரை கிலோ வரை இதன் எடை இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்தான் இவற்றின் வாழ்விடம். தமிழகத்தில் மரநாய் என்கிற பெயரும் புனுகுப்  பூனைக்கு உண்டு. பலரும் நினைப்பதைப் போல் புனுகு என்பது அந்தப் பூனையின் கழிவு அல்ல. வால் பகுதியில் இருக்கும் இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒரு வகை வாசனைக் கலந்த திரவமே புனுகு.  இந்தப் பிசின் போன்ற திரவம்தான் இவற்றின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது.  

civet சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கெளரவ வனஉயிர் காப்பாளர் திரு.சரவணன் அவர்களிடம் பேசியதில்  ”புனுகுப் பூனைகள் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படுகிற ஓர் உயிரினம். இருக்கிற பூனை வகைகளில் மலபார் பூனை வகைகள்தாம் அழிந்து வரும் உயிரினங்களின் முதல்  பட்டியலில் இருக்கிறது. புனுகுப் பூனைகள் இரவில் இரைதேடும். மேற்குத் தொடர்ச்சி மலையின் எல்லா இடங்களிலும் காணப்படும் இப்பூனைகள் காடுகளின் விதை பரவலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. வாசனைத் திரவியத்திற்காகக் காடுகளில் இவை வேட்டையாடப்படுவது அதிகரித்திருக்கிறது. புனுகுப் பூனைகளை உணவிற்காகவும் ஒரு சிலர் வேட்டையாடுவதும் இதன் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாய் இருக்கிறது. காடுகள் அழிக்கப்படும்  பொழுது சாலைகளுக்கு வருகிற இவ்வகை பூனைகள் வாகனங்களில் அடிப்பட்டு இறந்து போவதும் தொடர்ந்து நடைபெறுவது வேதனையாக இருக்கிறது” என்கிறார். 

திருப்பதி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்குக் கிழமையிலும் வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய புனுகுப் பூனைகளில் இருந்து பெறப்படுகின்ற புனுகு வாசனைத் திரவியம் தேவைப்படுகிறது. இத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த அபிஷேகத்தைச் செய்கிறார்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகம் புனுகுத் தேவைக்காகப் புனுகுப் பூனைகளை வளர்த்து வந்தது. 1972 வன விலங்குகள் சட்டம் அனைத்துப் பிரிவுகளிலும் விலங்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்திருந்தது. ஆந்திர வனத்துறை கோயில் நிர்வாகத்திடமிருந்த புனுகுப் பூனைகளைக் கைப்பற்றி ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் சேர்த்தது. பூங்காவில் இருந்துதான் தேவையான புனுகுத் திரவியத்தைக் கோயில் நிர்வாகம் பெற்றுக்கொள்கிறது.  

புனுகு புனுகு


உலகின் விலை உயர்ந்த காபியான லூவா (Luwak) காபி புனுகுப் பூனைகளின் கழிவுகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. காபி பழங்களை உண்ணும் இந்தப் பூனைகள், கொட்டைகளை விழுங்கி விடுகின்றன. செரிமானத்துக்குப் பின்னர் இவை கழிவுகளில் வெளியேறும். கழிவுகளிலிருந்து வெளியேறும் கொட்டைகள்  சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட கொட்டைகளைப் பதப்படுத்தி காபித் தூளாக பயன்படுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இவ்வகை காபித் தூளின் ஒரு கிலோ விலை 20000 இருந்து 25000 ரூபாய். 

நம் வாழ்வியலோடு கலந்திருக்கிற விலங்குகள் பலவும் இன்று அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில்தான் இருக்கிறது. தேவாங்கு, நரி, புனுகுப் பூனை என ஒவ்வோர் உயிரினமாக நினைவுபடுத்துவது அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்காக மட்டுமல்ல. பாதுகாக்கவும்தான். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close