நாடற்ற இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே தந்திருக்கிறது ஃபேஸ்புக்..! | A Stateless Woman from Syria Praises Facebook for her Asylum

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (07/10/2017)

கடைசி தொடர்பு:15:00 (07/10/2017)

நாடற்ற இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே தந்திருக்கிறது ஃபேஸ்புக்..!

எதுவுமில்லை என்ற நிலை அது. எதுவுமில்லை என்றால் எதுவுமே இல்லை என்ற நிலை. ஒரு நாட்டின் பிரஜை என்பதற்கான எந்த அத்தாட்சிகளும் கிடையாது. அதாவது இந்த உலக மனிதர்களின் பட்டியலில் இவர் பெயரே கிடையாது என்கிற நிலை. ஒருவேளை அகதியா? அகதி என்ற அடையாளமும் இவருக்கு இல்லை. இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண்கள், இரண்டு காதுகள் கொண்ட மனிதர் என்பதைத் தவிர இவருக்கு எந்த அடையாளமும் இல்லை. அடையாளங்களைத் தொலைத்து வாழும் வாழ்க்கை ஓர் அற்புத நிலை தான். ஆனால், அடையாளங்களைத் துறந்து வாழும் நிலை வேறு, பிறப்பிலிருந்தே எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பது என்பது வேறு. மஹா மாமோ (Maha Mamo) இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். பிறந்ததிலிருந்து எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தவர். அவரின் கதையை அவரின் அனுமதியோடு கொஞ்சம் படிக்கலாம்...

பேஸ்புக் புது வாழ்க்கை காண்பித்தது - மஹா மாமோ

மஹா மாமோவின் முன்வரிசைப் பற்கள் சிரிக்கும்போது அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், அவர் பள்ளிக்காலங்களில் சிரிப்பதே அபூர்வம்தான். மிகச் சிறந்த கூடைப்பந்து வீராங்கனை. தேசிய அணியில் இடம்பெறும் முழுத் தகுதி வாய்ந்தவர். ஆனால், தேசமே மறுக்கப்பட்டவருக்கு தேசிய அணியில் எப்படி இடம் கிடைக்கும்? மருத்துவமனைக்குச் செல்ல, அலுவலகம் செல்ல, பைக் ஓட்ட, பைக் வாங்க, வீடு வாடகைக்கு எடுக்க, ஹோட்டலில் ரூம் எடுக்க, தனக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க இப்படி எதற்கும் அவருக்கு அனுமதி கிடையாது. காரணம் அவர் இந்த உலகில் இருப்பதற்கான அத்தாட்சி அவரிடம் இல்லை.

மஹா லெபனானில் பிறந்தார். அம்மா முஸ்லிம்.  அப்பா கிறிஸ்துவர். இருவரும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். சிரியாவில் மதம் மாறி செய்யும் திருமணங்களைப் பதிவு செய்ய முடியாது. திருமணம் பதிவு செய்யாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சிரியா குடியுரிமை வழங்காது. அவர் பெற்றோர் லெபனானுக்குச் சென்றார்கள். மஹா லெபனானில் பிறந்தார். லெபனானில் பிறந்தாலும், அவரின் அப்பா, அம்மா சிரிய குடிமக்கள் என்பதால் மஹாவுக்கு லெபனானிலும் குடியுரிமை கிடையாது. நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றாலும், அதற்கு பாஸ்போர்ட் வேண்டும். தேசமே இல்லாதவர்க்கு எந்த தேசத்தின் பாஸ்போர்ட் கிடைக்கும்?

பேஸ்புக் புது வாழ்க்கை காண்பித்தது - மஹா மாமோ

கல்லூரி வரை இந்த வலிகளோடு ஓரளவு பிழைத்து வாழ்ந்து வந்துவிட்டார் மஹா. ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வலியிலிருந்து வெளிபட அவர் விரும்பினார். தனக்கான ஒரு தேசம் வேண்டுமென்று அவர் விரும்பினார். தன்னுடைய 20-வது வயதில் அனைத்து உலக தூதரங்களிலும் தன் நிலையை விளக்கி, தனக்கான குடியுரிமையைக் கோரினார். குறைந்தபட்சம் அகதி அடையாளம். எங்கும், எதுவும் கிடைக்கவில்லை அவருக்கு.

தொடர்ந்து 7 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு ஒரு தேசம், ஒரேயொரு தேசம் அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்தது. அது பிரேசில். பிரேசில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்ற சொன்னவுடன் லெபனான் அரசு மஹா அடுத்த 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. மஹாவும், அவரது தம்பி எட்டியும் (Eddie) பிரேசிலுக்கு கிளம்ப முடிவு செய்தார்கள். பயண ஏற்பாடுகளை கவனிக்கலானார்கள். ஆனால், அங்கு எங்கு போவது, என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

பேஸ்புக் புது வாழ்க்கை காண்பித்தது - மஹா மாமோ

மஹா தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். தன் நிலையை விளக்கி, தனக்கான உதவி வேண்டும் என்ற நோக்கில் அந்தப் பதிவிட்டார். லெபனானிலிருந்து கிளம்பும் வரை அவருக்கு எந்தப் பதிலும் வரவில்லை. லெபனானிலும் அவரால் நீடித்திருக்க முடியாது. மனிதத்தின் மீதும், மனிதர்கள் மீதுமான நம்பிக்கையில் விமானம் ஏறினார். பிரேசில் விமான நிலையத்தில் இறங்கி தன் பாஸ்போர்ட்டை அதிகாரிகளுக்கு காண்பித்தார். அகதிதான். ஆனாலும், அந்த அடையாளமாவது தனக்குக் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். அடுத்து என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் விமான நிலையத்துக்கு வெளியே வந்து பார்த்தார்.
அவரின் பேஸ்புக் பதிவுக்கு எமிலின் பதில் அளித்திருந்தார். எமிலின் விமானநிலையத்தில் மஹாவுக்காக காத்திருந்தார். தன்னோடு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டிலேயே தங்க இடமளித்தார். அவருக்கு ஒரு தோட்டத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். தன் தம்பியோடு பிரேசிலில் அகதி என்ற அடையாளத்தை பெருமையாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை.

பேஸ்புக் புது வாழ்க்கை காண்பித்தது - மஹா மாமோ

மஹாவின் தம்பி எட்டி ஒரு வாட்ச்சிற்காகவும், சில நூறு ரூபாய்களுக்காகவும் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். அகதி வாழ்க்கை அவருக்கு ஆதரவற்ற வாழ்க்கையாகவும் மாறிப் போனது. லெபனானில் இருந்த அவருடைய அம்மாவுக்கும் பிரேசில் வர விசா கிடைக்காமல் தன்னந்தனியாகவே அங்கு இருந்து வந்தார் மஹா. தோட்ட வேலைகளைப் பார்த்தவாறே கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங் குறித்தும் படிக்கத் தொடங்கினார். 

மிக விரைவிலேயே அதில் தேர்ந்தவராகி தானே ஒரு புது "ஆப்"யை (APP) உருவாக்கினார். அது அகதிகளுக்கு ஆதரவு அளிக்க விரும்பும் நபர்களை, அகதிகளோடு இணைக்கும் ஒரு பாலம். மஹா உருவாக்கிய அந்த செயலி கூகுள் நிறுவனம் நடத்திய ஒரு போட்டியில் விருது வென்றது. "ஹோம் ஃபார் ஹோப்" (Home For Hope) என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தச் செயலியை இன்னும் மேம்படுத்தி விரைவிலேயே வெளியிடுவதாக சொல்லியிருக்கிறது கூகுள். தன் வாழ்க்கைக்கான பெரும் வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் தான் அமைத்துக் கொடுத்தன என்று சொல்கிறார் மஹா. 

மூன்று வருடங்கள் கழித்து இப்போது தன் அம்மாவோடு சேர்ந்திருக்கிறார் மஹா. 

பேஸ்புக் புது வாழ்க்கை காண்பித்தது - மஹா மாமோ

"எதுவும் இல்லாமல் இருந்த எனக்கு அகதி என்ற அடையாளம் கிடைத்துள்ளது. இன்னும் சில வருடங்களில் பிரேசில் நாட்டு குடியுரிமை எனக்குக் கிடைக்கும். அப்போது இந்த உலகத்துக்கு உரக்க கத்திச் சொல்லுவேன்...'நானும் இந்த உலகில்தான் இருக்கேன்... நான் பிரேசில் நாட்டின் குடிமகள்' என்று " என்று முகம் நிறைந்த மகிழ்ச்சியோடு சொல்கிறார் மஹா மாமோ.

இப்போது அவர் அதிகம் சிரிக்கிறார். இன்றும் அவரின் முன்வரிசைப் பற்கள் அத்தனை அழகாய் இருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்