வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (08/10/2017)

கடைசி தொடர்பு:10:24 (08/10/2017)

இந்தக் கணிதத்தைப் புரிந்துகொண்டால் கொஞ்சம் சீக்கிரமாக டீ தயார் செய்யலாம்..! #Parabola

கணிதம்


இந்த உலகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஏதாவது அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த ஒன்று இருக்கும். அறிவியல் என்பது கணிதத்தைச் சார்ந்து இருக்கும். ஆனால் கணிதம், அறிவியலைச் சார்ந்தது அல்ல. ஆக, வேகமாக டீ போட வேண்டுமானால் அதற்குள்ளும் ஒரு கணிதம் இருக்குமல்லவா? வாருங்கள் பார்ப்போம்.

இப்போது உங்கள் வீட்டில் கேஸ், மின்சாரம், எதுவும் இல்லை. ஒரு பாத்திரத்தை சுட வைக்க இப்போது இருப்பது சூரிய ஒளி மட்டுமே. 
”அட... போங்கப்பா. நம்மூர் வெளியிலுக்கு வெளியில் வைத்தாலே போதும்” என்று நினைக்காமல், இந்த வழியில் செய்தால் வேகமாக டீ தயார் ஆகும். இதற்கு நாம் 8ம் வகுப்பில் படித்த, எளிமையான பரவளையம் (Parabola) மட்டும் போதுமானது. 

பரவளையம் (parabola). இது U வடிவில் இருக்கும்.ஒரு கிரிக்கெட் பந்தை தூக்கி மேலே நோக்கி எறிந்து கீழே வரும் அந்தப் பந்தின் பாதையை நோக்கினால் அது பரவளையத்தை உருவாக்கும். இப்போது இதைப் பயன்படுத்தி Solar heater ஒன்று தயாரித்தால் போதும். இதற்கு ஒரு கண்ணாடி, மற்றும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க (Reflector) கூடிய பொருள் ஆகியவை போதுமானது.

பரவளையத்தை நாம் ஏன் எடுத்தோம் என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.

1. U வடிவம் கொண்ட பரவளையத்தின் மேல் எந்த ஒரு ஒளி பட்டாலும் எல்லாவற்றையும் பிரதிபலித்து ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு எல்லா ஒளியையும் கொண்டு போய் சேர்க்கும். இதை நாம் Focus point என்கிறோம்.

2.இந்தப் புள்ளியில் எல்லா ஒளியும் சேர்வதால் ஒரு வெப்ப ஆற்றலை உருவாக்கும். அந்த இடத்தில்தான் நீங்கள் டீ போடவேண்டிய பாத்திரத்தை வைத்தால் போகும் ரொம்ப சீக்கிரமாக டீ குடித்து விடலாம்.

ஓகே. எப்படி அந்த Focus point ஐ கண்டுபிடிப்பது? இதை எளிமையான சூத்திரத்தைக் கொண்டு விளக்கலாம்.
பரவளையத்தின் சமன்பாடு;

1.y = ax^2.....

Y என்பது பரவளையத்தின் நடுப்புள்ளியிலிருந்து கடைசிப்புள்ளி வரை உள்ள தொலைவு.
நாம் உதாரணமாக, x= 1 மீட்டர் என எடுத்துக் கொள்வோம்.

a என்பது பரவளையத்தின் உயரம். இது 4 மீ ஆக இருக்கும். ஆக , பரவளையத்தை உருவாக்கி விட்டோம்.
2. எல்லா ஒளியும் வந்து சேரும் இடத்தை (Focus point ) கண்டுபிடிக்க
f= 1/4a 
a என்பது தெரியும் 4 மீட்டர். 
f= 1 /4 x 4 = 1 /16 = 6.25 செ.மீ வரும்.

ஆக நாம் டீ போட வேண்டிய பாத்திரத்தை 6.25 செ.மீ இடத்தில் வைத்தால் சீக்கிரமாக டீ தயார் ஆகிவிடும்.

டிஷ்:
நாம் டிவி பார்க்க உதவும் Dish-tv வடிவம் கூட பரவளையம் (parabola) தான். அதை உற்றுப்பார்த்தால் ஒரு கம்பி குறிப்பிட்ட உயரத்துக்கு இணைத்து இருப்பார்கள். அதுதான் எல்லாப் புள்ளியும் வந்து சேரும் focus point.

டிஷ்

செயற்கைக்கோள்கள் அனுப்பி வைக்கும் சிக்னல்கள் எல்லாம் அலைகளாக வரும். இந்த அலைகள் டிஷ் ஆண்டனாவில் எந்த இடத்தில் பட்டாலும் எல்லா சிக்னல்களும் ஃபோகஸ் பாயின்ட்க்குப் போய் சேரும். இந்த இடத்தில் Receiver வைத்து நாம் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. இதேபோல் கார், பைக்களின் முகப்பு விளக்கு, ஏவுகணை பறக்கும் வடிவம் போன்றவையும் பரவளையம்தான்.

ஆக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பலவற்றில் இருப்பது கணிதமும் அறிவியலும் மட்டுமே. நாம் எல்லோரும் பூமியில் இருக்கிறோம். ஆனால், பூமியே கணித சூத்திரங்களால்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

நாம் பார்ப்பதை, படிப்பதை அன்றாட வாழ்வில் ஒப்பிட்டுப் பார்த்தால் இதை விட பயன்பாடுகள், உதாரணங்கள் உங்கள் கண்ணுக்கு நிறைய தெரியும். 


டிரெண்டிங் @ விகடன்