Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனைவிக்குச் சன்மானம் வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! நினைவுதினப் பகிர்வு!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கிட்டத்தட்ட அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். விழா ஒன்றில்... அந்தப் பத்திரிகை ஆசிரியரைச் சந்தித்த ஒரு கவிஞர், ‘‘(கண்ணதாசனைக் குறிப்பிட்டு) கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக் கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’என்று கோபத்துடன் கேட்டாராம். கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல... ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் பாராட்டப்பெற்ற நம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் அந்தக் கவிஞர். அவருடைய நினைவு தினம் இன்று. 

‘நண்டு செய்த தொண்டு!'

கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார், கவிஞர். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்கு இப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்க வயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்குப் பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில்தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலை எழுந்ததும், வயலுக்குச் சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாகத் தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார். இதைத்தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்ற தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை, ‘ஜனசக்தி’ இதழில் வெளியானது.

17 வகையான தொழில்கள்!

''என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட கல்யாணசுந்தரம், இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். 

கல்யாணசுந்தரம்

‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’

- என்று தன்னுடைய 15-வது வயதிலேயே வாழ்க்கையின் தத்துவத்தைத் தன் அனுபவ நிகழ்வின் மூலம் கவிதையாக எழுதியவர் கல்யாணசுந்தரம். அவர், பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்து பழகியவர் அவர். அதனால்தான், ''அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது'' என்று புகழ்ந்தவர்கள் பலர். அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர், ''கல்யாணசுந்தரம் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.

நிருபரிடம் சொன்ன வாழ்க்கை வரலாறு!

‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூடப் பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

பட அதிபருக்கு எழுதிய கவிதை!

கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார். ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

‘தாயால் வளர்ந்தேன்...
தமிழால் அறிவு பெற்றேன்...
நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...
நீ யார் என்னை நில் என்று சொல்ல?’ 

- என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்த நிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினாராம்.

கல்யாணசுந்தரம்

மனைவிக்குச் சன்மானம்!

அதேநேரத்தில், மற்றவர் மூலம் தனக்குக் கிடைத்த சன்மானத்தை அவருக்கே திருப்பிக்கொடுத்து அழகு பார்த்தவர் கல்யாணசுந்தரம். ஒருநாள் அவருடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு. அன்று... அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப் போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது, நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவியிடம் கொடுத்தாராம். 

‘தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் - மேலே
போனா எவனும் வரமாட்டான் - இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’

 - என்று கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு, பாடல் ஒன்றை எழுதியிருந்தார். ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான் என்று எழுதியதால்தான் என்னவோ தெரியவில்லை. அவரை இளம்வயதிலேயே அழைத்துக்கொண்ட காலனும் பூமிக்குத் திருப்பியனுப்பவில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement