Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இதயத்தில் போராட்ட குணம் விதைக்கப்படும்!' - 'சே' நினைவு தின சிறப்புப் பகிர்வு

உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்குபடுத்தாத தாடி, கடுமையாகத் தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சட்டை, பூட்ஸ்களும், கறுப்புத் தொப்பியும் அதில் சிவப்பு நட்சத்திரமும் என தனக்கென தனி அடையாளங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்தான் சேகுவேரா. அவருடைய ஏதோவொன்று, மனிதர்களின் இதயத்துக்குள்ளும் மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது. 

'சேகுவேரா' என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவேரா 1928 ஜூன் 14-ம் நாள், அர்ஜென்டினா ரோசாரியோவில் பிறந்தவர். சேகுவேரா, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

1952-ல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவர். பிற்காலத்தில், 'லட்சிய வீரர்' என்று உலகளவில் பெயரெடுத்தார். மாணவப் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

சேகுவேராவின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் (Karl Heinrich Marx), போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது. ஜவஹர்லால் நேரு, லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். சில காலத்துக்குப் பிறகு, சேகுவேரா தன்னை ஃபிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அந்த இயக்கம், 1959 ல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பின்னர், கியூபாவின் மத்திய வங்கித் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.

அந்தக் காலகட்டத்தில், கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும் புத்தங்களையும் எழுதினார். 1964 டிசம்பர் 11-ம் தேதி, கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19-வது பொது அமர்வில் உரையாற்றினார். விடுதலையின் குரலாகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் செயல்பட்டுவந்தார் சேகுவேரா.

1967 அக்டோபர் 8ல், தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சேகுவேரா கடந்து சென்றபோது, வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் ஒரு பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு, 50 பெஸோக்களைப் பரிசாகத் தந்தார்.  அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு சேகுவேராவின் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டார். அலறிப் புடைத்துப் பறந்துவந்த பொலிவிய ராணுவம், சுற்றி வளைத்துச் சரமாரியாக சுடத் தொடங்கியது. பதிலுக்கு கொரில்லாக்களும் துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டடிபட்ட  நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் சேகுவேரா. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.      

அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் சேகுவேராவை அழைத்துச் சென்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சேகுவேரா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்பட்டார். சேகுவேரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ-வுக்குத் தகவல் போனது. அதே சமயம், சேகுவேரா உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது. தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று சேகுவேரா கேட்க, ''பள்ளிக்கூடம்'' என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்பட்டார். சாவின் விளிம்பிலும் சேகுவேராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்தார்.      

லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன்  ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்கினார். பிடிபட்டிருப்பது சேகுவேராதான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறந்தது. சேகுவேராவின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்பட்டன. தான் கொண்டுவந்த கேமராவில், சேகுவேராவை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுத்தார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட யேசு கிறிஸ்துவைப்போல காட்சிதரும் சேகுவேராவின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.    

சேகுரோவை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும் நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டுவதுதான் சரி என சி.ஐ.ஏ-விடம் இருந்து தகவல் வந்தது. வாலேகிராண்டாவிலிருந்து வந்த அந்தத் தகவல் 500, 600 எனக் குறிச்சொற்களைத் தாங்கி வந்தது. 500 என்றால் சேகுவேரா, 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள். சேகுவேராவைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்பட்டபோது, யார் அதைச் செய்வது எனக் கேள்விவந்தது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன், அந்தக் காரியத்துக்காகப் பணியமர்த்தப்பட்டார்.   

மரியோ, அவரை ஒரு கோழையைப்போல கொல்லத் தயாரானார். தன்னை நிற்கவைத்துச் சுடுமாறு சேகுவேரா கேட்க, அதை அலட்சியப்படுத்துனார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது சேகுவேராவை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ அவரது கடைசி வாசகம் இதுதான். சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக்கொன்றது, அமெரிக்கா தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும் அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துகொண்டே இருக்கிறார். அதற்கு சாட்சியாக, இன்றைய இளைஞர்களின் அணிகலன்களில் அவரது புகைப்படம். சேகுவேரா புரியாதவருக்குப் புதிர். இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் சேகுவேராவின் வாழ்க்கையைப் படித்தால், படிப்போர் இதயத்தில் போராட்ட குணம் விதைக்கப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement