Published:Updated:

'உயிரைப் பறிக்கும் விபரீத ஆசை'- மிரளும் மாமல்லபுரம்

'உயிரைப் பறிக்கும் விபரீத ஆசை'- மிரளும் மாமல்லபுரம்
'உயிரைப் பறிக்கும் விபரீத ஆசை'- மிரளும் மாமல்லபுரம்

ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் மாமல்லபுரத்திற்கு வரும் இளைஞர்கள், கடல் அலையில் சிக்கி இறப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், மாமல்லபுரம் ரிசார்ட்டிற்கு வருபவர்களை அனுமதி இல்லாமல் படகுகளில் கடலுக்குள் ஏற்றிச் செல்வது சர்ச்சையாகிவருகிறது.

விடுமுறை தினங்களில் மாமல்லபுரம் வரும் இளைஞர்கள், மது அருந்திவிட்டு கடலுக்குள் குளிக்கச்செல்கிறார்கள். கடலுக்குள் சுழல் இருக்கும் பகுதிகளில் குளிக்கச் செல்லும் இளைஞர்கள், அதில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் 10 பேருக்கு மேல் கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் மாணவர்களும் இளைஞர்களும்தான் உயிரிழக்கிறார்கள்.

காவல்துறையினர் எச்சரிக்கைப் பலகை வைப்பது கிடையாது. காவல்துறையினர் எச்சரித்தாலும் அவர்கள் அங்கிருந்து வேறுபக்கம் சென்றதும் மீண்டும் கடலில் குளிக்கத் தொடங்கிவிடுவதால், உயிரிழப்புகள் தொடர்கின்றன. இந்த நிலையில், நேற்று மாமல்லபுரத்திற்கு வந்த சாஃப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் சிலர், படகில் கடலுக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது, படகிலிருந்து ஒரு பெண் தவறி கடலுக்குள் விழுந்தார். படகில் சென்றவர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், “மாமல்லபுரத்தில் கடலுக்குள் செல்ல இரண்டு படகுகளுக்கு மட்டுமே ஒரு ரிசார்ட்டில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த அனுமதியை வைத்துக்கொண்டு நிறைய ரிசார்ட்டில் அனுமதியில்லாத படகில் கடலுக்குள் செல்கிறார்கள். படகு வைத்திருப்பவர்கள் கொடுக்கும் கமிஷனுக்காக, ரிசார்ட்டில் தங்க வருபவர்களிடம் “கடலுக்குள் சென்று சாப்பிடலாம்… சரக்கு அடிக்கலாம்…”  என ஆசை வார்த்தை காட்டி, ரிசார்ட்டில் வேலைசெய்யும் ஊழியர்கள் அழைத்து சொல்கிறார்கள். காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்காததால், படகில் கடலுக்குள் செல்பவர்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன” என்கிறார்.