Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதல் வாகனம்... நகரும் சொர்க்கம்... போலாம் ரைட்.... இது சிட்டி பஸ் கலாட்டா!

Chennai: 

மக்களின் தினசரி வாழ்வில் ஓர் அங்கமாகவே பேருந்துப் பயணம் உள்ளது. வேலைக்குச் செல்ல, பள்ளிக்குச் செல்ல என தினமும் ஏதாவது ஒரு வகையில் பேருந்துகள் நம்மை பத்து ஸ்டாப்கள் சுமந்து செல்கின்றன. மாநகரங்களில் லோக்கல் டிரெய்ன்களிலும் `நெக்ஸ்ட் ஸ்டாப் ஹே அகலா ஸ்டேஷன்' என்ற கம்ப்யூட்டர் வாய்ஸ் ஓவர் கேட்க, பர்ஃபி விற்பவர், விளையாட்டு பொம்மை விற்பவர், பாட்டு பாடும் நல்லிசைக் கலைஞர்கள், சமோசா விற்கும் பாட்டிகள் எனப் பயணிப்பது `தென்றல் வந்து தீண்டும்' பாடலுக்கு நிகரான அனுபவமென்றால்... மாநகரப் பேருந்தின் கூட்டத்தில் சட்டை கசங்க, ``செவன் ருபீஸ் ஒண்ணு பாஸ் பண்ணிவிடுங்க" என்ற யுவதிகளின் குரல்களுக்குச் செவிசாய்த்து, பாட்டிகளுக்கு சீட்டை வழங்கி, இட்லி சைஸில் புண்ணியம் தேடியவாறே, ஃபுட்போர்டு அடிப்பவர்களைக் கண்டு மிரண்டு, சீட்டில் அமர்ந்துகொண்டே பூ கட்டுபவர்களை ரசித்துக்கொண்டு, கல்லூரி கானாவோடு பயணிப்பது `பேட்டா ராப்' அனுபவம். இதையெல்லாம் சைடு வாங்கி அப்படியே வண்டியைச் சிறுநகரச் சாலைகளுக்குள் விட்டால், அது பல ஹார்டின்களை, பல கடைக்கண் பார்வைகளை, பல கவிதைகளை  ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு பவனி வரும். டிக்கெட் எடுத்துப் பயணித்தால்...

பேருந்து

காதல் வாகனம்:   

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என நம் ப்ரியங்களைக் கொண்டாட இன்று பற்பல ஸ்மைலிகளும் எமோஜிக்களும் வந்தாலும், நம் மனதுக்கு நெருக்கமான பல உறவுகளைப் பேருந்துப் பயணங்கள்தான் கொடுத்திருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு நீங்கள் பேருந்துப் பயணம் மூலம்  சென்றிருந்தால், அவை உங்களது டைரியின் பக்கங்களில் பத்திரப்படுத்துவதற்கான பொன்வண்டுக்காலங்கள். பேருந்தில் சக வயதுடைய பெண் பிள்ளைகளுடன் பயணிக்கும்போதுதான் நீங்கள் அரை டவுசர் போட்டதற்காகக் கூச்சப்பட்டிருப்பீர்கள்.

`ஓர் எழுத்தில் கவிதை என்றால் நீ; ஈரெழுத்தில் கவிதையென்றால் நாம்' எனக் கவிதை எழுதிய கடிதத்தை கையில் கறுப்புக்கயிறு கட்டிய அண்ணன் கொடுக்க, அதை வெள்ளை ரிப்பனில் சடை பின்னியிருந்த அக்காவிடம் கொடுத்திருப்பீர்கள். அதே பேருந்தின் கடைசி சீட்டில் பின்பொரு நாள் அந்தக் கறுப்பும் வெள்ளையும் செஸ் போர்டின் கட்டம்போல அருகருகே அமர்ந்திருப்பதையும், பின்பு நீங்கள் பேன்ட்டுக்கு மாறியிருந்த காலத்தில் கறுப்பும் வெள்ளையும் எங்கேயோ சென்றிருக்க, அதே கடைசி இருக்கையில் காம்பஸில் வரையப்பட்ட ஹார்ட்டினையும் அதில் எழுதப்பட்டிருந்த இரு பெயர்களையும் பெயர்களின் நடுவே விடப்பட்டிருந்த அம்பையும் கடிதம் கொடுத்த கைகளாலேயே வருடிப் பார்த்திருப்பீர்கள்.

படியில் தொங்குவது போன்ற போர்முனை சாகசங்களைத் தீவிரமாகக் கற்றுத் தேர்ந்திருப்பீர்கள். (படியில் தொங்குவது, உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும்; உயிரைக் கொல்லும்). கண்டக்டர்களிடமே காசு வாங்கி டீ குடிப்பது, டிரைவரிடம் சைட் அடிக்கும் பெண்ணுக்குப் பிடித்த பாட்டு போடச் சொல்லி கேசட் கொடுப்பது, குறிப்பிட்ட ஒருவரிடம் மட்டுமே நோட்டுகளை, பைகளைக் கொடுப்பது, எதிர் கேங் ஆள்களுடன் மல்லுக்கு நிற்பதுமாக பேருந்தும் பேருந்து சார்ந்த இடத்திலும் உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை பார்க் செய்திருப்பீர்கள்.

பேருந்து

நகரும் சொர்க்கம்: 

கிராமத்துப் பேருந்துகளில் பயணம் செய்வது தலைவாழை இலையில் சுடுசோறு சாப்பிடுவதுபோல அலாதியான அனுபவம். வயக்காடு, பொட்டல் காடுகளினூடே அமைக்கபட்ட சாலைகளில் செல்லும் பேருந்துகளில் `தாயும் பிள்ளையுமாக' வெள்ளைச்சாமியும் வெள்ளாடும் `பக்கத்து சீட்டில் பாட்டி உட்காந்தாலும் டேக் இட் ஈஸி'யாகப் பயணம் போவார்கள். வெளியூர் சந்தைகளுக்குப் போகும்போதே ரிட்டன் வருவதற்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்து, டவுன் பஸ்ஸிலேயே டிக்கெட் புக்கிங் செய்து அசத்துவார்கள். திருவிழா நேரங்களில் டிரைவருக்கும் கண்டக்டருக்கும் விருந்து வைத்து மிரட்டுவார்கள். பஸ்பாஸ்களுடன் பயணிக்கும் வாண்டுகள், சப்போட்டா  மூட்டையுடன் ஏறி, உடன் பயணிக்கும் அத்தனை பேருக்கும் `சப்போட்டா பழ' ட்ரீட் கொடுக்கும் பெருசுகள் என ரகளையாக `அஞ்சாம் நம்பர்' ரூட்டில் அந்த சொர்க்கம் பொண்டு, பொடுசுகளுடன் நகர்ந்துகொண்டிருக்கும். 

இன்று இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்டதாகச் சொல்லப்படும் இந்தக் காலகட்டத்திலும் ஷேர் ஆட்டோக்கள் பந்தயத்துக்குள் நுழைந்துவிட்டபோதும் பச்சையப்பன்கள் இன்னும் கானா பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்; பொன்னம்மாக்கா இன்னும் பூ கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். கையில் கறுப்புக்கயிறு கட்டிய அண்ணன்கள், வெள்ளை ரிப்பன் அண்ணிகளுக்கு அரை டவுசர்கள் மூலம் போன் நம்பர் கேட்டு தூது அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். `பஸ் பாஸ்' சிறுவன் காத்துக்கொண்டுதான் இருக்கிறான். டிரைவர் சீட்டில் அமர, கண்டக்டர் `போலாம் ரை... ரைட்...' என விசிலடிக்க பேருந்து இவர்களையெல்லாம் ஏற்றிச்செல்ல வந்துகொண்டேதான் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement