Published:Updated:

லாரி உரிமையாளரைக் கொலைசெய்த ஓட்டுநர்... ஜெயங்கொண்டத்தில் விபரீதம்!

லாரி உரிமையாளரைக் கொலைசெய்த ஓட்டுநர்... ஜெயங்கொண்டத்தில் விபரீதம்!
லாரி உரிமையாளரைக் கொலைசெய்த ஓட்டுநர்... ஜெயங்கொண்டத்தில் விபரீதம்!

லாரி மற்றும் பணத்துக்காக லாரி உரிமையாளரை, டிரைவர் கொலை செய்த சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் காடுவெட்டி மெயின்ரோட்டில் நேற்று காலையிலிருந்து நீண்டநேரமாக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. நீண்டநேரமாகியும் லாரி அங்கிருந்து எடுக்காததால், பொதுமக்கள் லாரியில் ஏறிப் பார்த்தனர். லாரியின் பின்புறம் ஏறி பார்த்தபோது லாரியில் தார்பாயால் மூடிய நிலையில் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி, இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினரிடம் பேசினோம். "இந்த லாரியின் உரிமையாளர் கன்னியாகுமரி மாவட்டம் விளாத்திவிளை கிராமத்தைச் சேர்ந்த கிளாட்வின். இவரின் பெயரில்தான் இந்த லாரியும் இருந்துள்ளது. கிளாட்வின் எந்தெந்த ஊர்களில் மணல் குவாரி செயல்படுகிறதோ அந்தந்த ஊர்களில் தங்கியிருந்து மணல்களை ஏற்றி விற்கும் தொழில் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கியிருந்த கிளாட்வின், டி.பழூர் பகுதிகளில் அதிகாரிகளின் தயவில் திருட்டு மணலை எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். ஒருநாளைக்கு ஒரு நபருக்குதான் மணல் ஏற்றமுடியும் என்பதால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை டிரைவராகச் சேர்த்துள்ளார்.

சிவக்குமாருக்கு கிளினராக அவரின் உறவினர்களைச் சேர்த்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் கிளாட்வினுக்கு அதிக வருமானம் வருவதைக் கண்ட சிவக்குமார் பலமுறை கிளாட்வின்னிடம் சம்பளம் உயர்த்திக் கேட்டிருக்கிறார். அதற்கு கிளாட்வின் சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்தக் கடுப்பில் மீன்சுருட்டி செல்லும் சாலையில் அவரை அடித்துக் கொன்றுவிட்டு அவரின் உடலை முந்திரிக் காட்டில் புதைத்துவிட்டு லாரியையும் பணத்தையும் அபகரிப்பதற்காகச் செய்திருக்கிறார்கள். கிளாட்வின் பிரேதத்தைப் புதைப்பதற்காக காடுவெட்டி பகுதியில் லாரியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது லாரி நின்றுள்ளது. எவ்வளவு முயற்சி செய்தும் லாரியை எடுக்கமுடியவில்லை. பொழுது விடிந்ததும் (அதிகாலை) உடலை என்ன செய்வது என்று தெரியாமல் லாரிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். நாங்கள் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம். அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரண்டர் செய்ய உள்ளோம்" என்றார்.