கரு கலைந்தபோதும் எதைக் காப்பற்றத் துடிக்கிறார் இவர்? - சீனாவின் பாலைவன தேவதை

சுடு மணல் அது. சில நிமிடங்கள் கால்கள் வைத்தாலே கொப்பளம் போட்டுவிடும் அளவிற்குச் சூடு. கைகளில் சில மரக்கன்றுகளை அந்தப் பாலைவன மணலில் நட்டுக் கொண்டிருந்தார் அந்தப் பெண். அவரின் வயிறு வீங்கியிருந்தது. அவர் கர்ப்பமாக இருக்கிறார். தோராயமாக 50 மரக்கன்றுகளை நட்டு முடித்திருப்பார். திடீரென பெரும் அலறலோடு தன் வயிற்றைப் பிடித்தபடி அப்படியே கீழே உட்கார்ந்தார். அவரின் தொடைகளின் வழி பயணித்து, பாதங்களை நனைத்தது ரத்தம். சில நிமிடங்களில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. கரு கலைந்துவிட்டது. பெரும் வலி. கூப்பிடு தூரத்தில் யாருமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமில்லை. ரத்தம் நனைத்த அந்தச் சுடு மணலில் தவழ்ந்தபடியே நகர்கிறார் அந்தப் பெண். எங்கு செல்கிறார்?. ஒருவேளை எங்காவது நிழலில் ஒதுங்க முயற்சி செய்கிறாரோ? ஆனால், எங்கும் மரமே இல்லையே! இல்லை அவர் வேறு எதையோ செய்கிறார்.

ஒழுகும் ரத்தத்தோடு தவழ்ந்து வந்து அந்த மரக்கன்றுகளில் ஒன்றை எடுக்கிறார். கொஞ்சம் தள்ளி வெட்டப்பட்டிருந்த குழியில் கொண்டு போய் அதை நடுகிறார். இருக்கும் தண்ணீரை அதற்கு ஊற்றுகிறார். அவ்வளவுதான். அவரின் கண்கள் இருள ஆரம்பிக்கின்றன. சலனமற்று தரையில் அப்படியே படுத்துக் கிடக்கிறார். ரத்தம் இன்னும் நிற்கவில்லை.

சீனாவின் பாலைவன தேவதை

அவர் கண் திறந்த போது அந்த அனலை அவர் உணரவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அருகே அவரின் கணவரும், பெற்றோரும், சில சொந்தங்களும், ஊர்க்காரர்களும் இருந்தனர். எல்லோரும் அவர்மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அவர் மீதான அக்கறை மற்றும் அன்பின் காரணமாக வெளிப்பட்ட கோபம் அது. 

"நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால், என்னமோ எப்படியாவது சாவதற்குள் கூடுதலாக ஒரு மரத்தை நட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன்."

"நீ சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறாய்." - கணவர் பய் வன்சியங் (Bai WanXiang).

யின் யுசென் (Yin Yuzhen) கரு கலைந்துவிட்டது. அது பெரிய இழப்புதான். ஆழமான வலிதான். இருந்தும் சில நாள்களிலேயே அதிலிருந்து விடுபட்டு மீண்டும் மரங்களை நட ஆரம்பித்துவிட்டார்.

யின் யுசெனின் போராட்ட வாழ்வின் ஒரு சிறு எடுத்துக்காட்டு மேற்கூறிய சம்பவம். அவரின் முழுக் கதையை அறிய வடக்கு சீனாவின் பகுதியில் மங்கோலிய எல்லையில் இருக்கும் மவ்வுசு (MaoWusu) பாலைவனப் பகுதிக்குப் பயணிக்க வேண்டும். இந்தக் கதையின் தொடக்கம் ஜனவரி மாதம் 1985.

சீனாவின் பாலைவன தேவதை

புதிதாகக் கல்யாணமாகி தன் கணவனின் விட்டுக்குக் கழுதை வண்டியில் புறப்பட்டார் யின். அப்பாவின் செல்லமாக வளர்ந்தவருக்கு, அவரை விட்டுப் பிரிந்து போவது கொஞ்சம் கடினமாகத் தானிருந்தது. இருந்தும், புது இடம், புது வாழ்க்கை குறித்த கனவோடு பயணிக்கத் தொடங்கினார். கரடுமுரடான பாதையைக் கடந்து அந்தக் கழுதை வண்டி போய்க்கொண்டிருந்தது. இரவு நெருங்கிய வேளையில் அந்தச் சிறு வீட்டை அடைந்தனர். அவர் கணவரை கல்யாணத்திற்கு முந்தைய நாள் வரை யின் பார்த்ததில்லை. அந்த வீடு கடுமையான புழுக்கத்தைக் கொடுத்தது. ஏனோ, அந்த இடம் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருட்டைக் கடந்து காலையில் பார்த்தால் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் அன்றைய இரவைக் கழித்தார். 

"Psammophil Willows" எனும் வகையிலான Shrubயைத் தான் மரக்கன்றுகளைச் சுற்றி பாதுகாப்பாக அரணாக அமைத்தார் யின்.

சரியான தூக்கம் இல்லாததால், சூரியன் வெளிவரும் முன்னரே வீட்டிற்கு வெளியே வந்து விட்டார் யின். வீட்டிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மணல் மேடுகளாக மட்டுமே தெரிந்தன. அக்கம், பக்கத்தில் வீடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த வெப்பம் அவரின் உயிரை உருக்கியது. கதறி, கதறி அழுதார். உண்ண உணவில்லை. குடிக்கத் தண்ணீரில்லை. உயிர் வாழ்வதற்கான எந்தச் சூழலும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. 

சீனாவின் பாலைவன தேவதை

உடனடியாக விவாகரத்து செய்துவிடலாம் என்று முதலில் நினைத்தார். பின்னர், யாருக்கும் சொல்லாமல்,கொள்ளாமல் எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத்தார். வேண்டாம்... அதெல்லாம் செய்தால் அப்பாவுக்குப் பெரும் தலைகுனிவாகிவிடும். சரி...தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கும் கூட மரமில்லையே?!

10 நாள்கள் கழிந்திருக்கும். தன் பெற்றோரைப் பார்க்க அந்த மணலில் அவர் 10கிமீ தூரம் நடந்துப் போக வேண்டும். இடையே காலில் கொப்புளங்கள் ஏற்பட்டு, நடக்க முடியாமல் கீழே விழுந்தார். அழ வேண்டும் போலிருந்தாலும், அவருக்கு அழுகை வரவில்லை. அந்தப் பாலைவனத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பல மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பின்னர், ஓர் உறுதியான முடிவிற்கு வந்தவராக எழுந்து நடக்கத் தொடங்கினார். தன் பெற்றோரைப் பார்த்துவிட்டு திரும்பும்போது 10 மரக்கன்றுகளை எடுத்து வந்தார். தன் வீட்டிற்குக் கொண்டு வந்து அதை நட்டார். அதில் சில உயிர் பிழைத்தன. மீண்டும் ஊருக்குச் சென்று 100 மரக்கன்றுகளை எடுத்து வந்து நட்டார். அதில் பெரும்பாலானவை செத்துவிட்டன. 20 கன்றுகள் மட்டுமே பிழைத்தன. 

அடுத்து அவரும், அவர் கணவரும் சேர்ந்து பல கடுமையான வேலைகளைச் செய்தனர். யாரிடமும் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை அவர்கள். மாறாக மரக்கன்றுகளைக் கேட்டு வாங்கினர். இப்படியாக 10 நாள்களில் 2 ஆயிரம் மரக் கன்றுகளைச் சேர்த்தனர். ஆனால், அதை வீட்டிற்கு எடுத்து வர வண்டியில்லை. காலை முதல் மாலை வரை பல ஈடுகளாக நடந்து சென்று தங்கள் முதுகில் அவற்றைச் சுமந்து வந்தனர். 

சீனாவின் பாலைவன தேவதை

சில நாள்களில் எர்லின்ச்சுவன் (Erlinchuan) எனும் அந்தக் கிராமத்திற்கு அரசாங்கம் சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதை வாங்கி, நட்டு, வளர்க்க கிராம மக்கள் யாரும் தயாராக இல்லை. கிராமத் தலைவரிடம் பேசி மொத்த மரக்கன்றுகளையும் யின் வாங்கினார். தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, நடந்து சென்று தன் முதுகில் வைத்து அந்த மரக்கன்றுகளைச் சுமந்து வருவார். 20 நாள்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளையும் கொண்டு வந்து சேர்த்தார். 

அதை நட்ட போது, அதிலும் பெரும்பாலானவை உயிர்பிழைக்கவில்லை. அது பாலைவன மணல் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அவ்வப்போது அடிக்கும் மணற் புயலைத் தாங்காமல் செடிகள் வேரோடு பிடுங்கிவிடுகின்றன. தன் ரத்தம் சிந்திய உழைப்பிலிருந்து ஒரு மாற்று வழியைக் கண்டறிந்தார். மரக்கன்றுகளை நடும்போது அதற்கு பக்கமே SHRUBSஸ் எனப்படும் புதர் வகைச் செடிகளையும் நட ஆரம்பித்தார். அந்தச் செடிகள் மரக் கன்றுகளுக்குப் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தன. மணற் புயலிலிருந்து கன்றுகளை அவை காப்பாற்றின. மேலும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி தக்கவைத்துக் கொண்டன.

யின்னை சந்தித்த ஒரு ஜெர்மானியர் யின்னின் வாழ்வை வியந்து  இப்படியாகச் சொல்கிறார்,

"மொழி புரியாததால் என்னால் அவரோடு முழுமையாகப் பேச முடியவில்லை. ஆனால், இந்த இயற்கை குறித்த புரிதலும், சாத்தியமான தற்சார்பு வாழ்விற்கான ஒரு வழிமுறையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் முகம் கழுவும் தண்ணீர், அப்படியே ஒரு பாத்திரத்தில் சேர்க்கப்படுகிறது. அந்தத் தண்ணீரைக் கொண்டு தன் கால்களைக் கழுவிக் கொள்கிறார். கால் கழுவும் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் சேர்கிறது. அதைச் செடிகளுக்குப் பாய்ச்சுகிறார். ஒரு குடம் தண்ணீரையே மூன்று குடங்களாகப் பிரித்து உபயோகப்படுத்துகிறார்." 

இதன் மூலம் நிறைய கன்றுகளைப் பிழைக்க வைக்க முடிந்தது. இப்படியாகத் தொடர்ந்து கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டதன் விளைவாக அந்தப் பகுதியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் யின். கிராமத்தைச் சூறையாடும் மணல் புயல் மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வறண்டு கிடக்கும் பாலைவனத்தில் ஒரு பெரும் பச்சை சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார். உணவுப் பிரச்னையையும், குடிநீர் பிரச்னையையும் தீர்த்துள்ளார். தான் மட்டுமல்லாது, அந்தக் கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உதவி செய்திருக்கிறார். 

உலகம் முழுக்கவிருந்து "Green Kingdom" எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்த வனத்தைப் பார்க்க பலரும் வருகிறார்கள். இதை இன்னும் மேம்படுத்தி, ஓர் இயற்கைப் பூங்காவாக மாற்றுவதுதான் தன் அடுத்த திட்டம் என்கிறார் யின். 

இன்று உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது அவர் பணி. பல உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இது எதையும் தனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ளாத யின்,

சீனாவின் பாலைவன தேவதை

"எனக்கு நான் இருந்த சூழல் பிடிக்கவில்லை. அதிலிருந்து தப்பவும் எனக்கு வாய்பில்லாமல் போனது. அதனால் அதை எனக்குப் பிடித்தவாறு மாற்ற வேண்டுமென்று நினைத்தேன். அதை உறுதியாகச் செய்தேன் அவ்வளவுதான். நான் போராளியோ, புரட்சியாளரோ இல்லை. அன்று மூன்று நாள்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே என்னால் சாப்பிடமுடிந்தது. இன்றும் என் பிள்ளைகளும், என் கிராமமும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை எடுத்துக் கொள்கிறோம். இதற்காகத்தான் பாடுபட்டேன். " என்று மிக எளிமையாக சொல்லி நகர்கிறார்  யின். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!