Published:Updated:

'பட்டா கொடுங்கள்... இல்லையேல் ரேஷன் கார்டுகளை நாங்கள் கொடுப்போம்' -எச்சரிக்கும் கிராம மக்கள்

'பட்டா கொடுங்கள்... இல்லையேல் ரேஷன் கார்டுகளை நாங்கள் கொடுப்போம்' -எச்சரிக்கும் கிராம மக்கள்
'பட்டா கொடுங்கள்... இல்லையேல் ரேஷன் கார்டுகளை நாங்கள் கொடுப்போம்' -எச்சரிக்கும் கிராம மக்கள்

'வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லையென்றால், கிராம மக்களின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம்' என்று 100 -க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

அரியலூர் மாவட்டம் வாணதிரையன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த, வீட்டுமனை இல்லாத 99 ஆதிதிராவிட மக்களுக்கு, கடந்த 2007 -ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனை வழங்கி, 10 வருடங்களாகியும் இன்னமும் இடத்தை அளந்து பட்டா வழங்கவில்லை. பட்டா இல்லாததால், மின்சார இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பெறமுடியவில்லை என்று பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், இன்று ஆத்திரமடைந்த ஆதிதிராவிட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து, பட்டா வழங்க வேண்டும், இல்லையேல், எங்கள் கிராம மக்கள் அனைவரும் அவர்களுடைய ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம். அதற்கும் மசியவில்லையென்றால், ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் எச்சரித்தனர். பிறகு, பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் லெட்சுமி பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.