Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் வீட்டு ஆண் குழந்தையிடம் இந்த 5 விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறீர்களா? #GoodParenting

குழந்தை

குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் மாறி வருகிற ஒன்று. ஏனென்றால் குழந்தைகள் தங்கள் சுற்றியுள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்கள். வீட்டுக்குள், சமூகத்துக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அனைத்துமே அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் சென்று சேர்ந்திருக்கும். குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியின் வருகையால் குழந்தைகள் வளரும் போக்கில் பெரிய மாறுதலைக் காணமுடிந்தது. தற்போது, ஃபேஸ் புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட விஷயங்களின் தாக்கம் குழந்தைகளிடம் பெரிய அளவில் இருக்கின்றன. 

காலமாற்றத்தில் பலவும் மாறினாலும் சில விஷயங்களின் அடிப்படை மட்டும் மாறுவதேயில்லை. அதில் ஒன்று பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலை. ஆணாதிக்க மனநிலை கொண்டு நமது சமூகச் சூழலில் வளரும் ஆண் குழந்தைகளுக்கும் அதே மனநிலைதான் வாய்க்கப்பெறுகிறது. அவர்கள் பெரியவர்களான பிறகு, பெண்கள் மீதான வன்முறை செய்திகளைக் கேள்விப் படும்போது அதிக வருத்தம் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் பலர், தன்னோடு இணைந்து வாழும் மனைவி, தன் மகள், அம்மா, சகோதரி உள்ளிட்ட பெண்களிடம்  தனிக் கவனம் காட்டும் அளவுக்குச் சமூகத்தின் மற்ற பெண்களுக்குக் காட்டுவதில்லை. இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில் நம் வீட்டு ஆண் குழந்தைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக இந்த 5 விஷயங்களை அக்கறையோடு கூறி வளர்க்க வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

குழந்தை

1. வீட்டு வேலை செய்வது இழிவானதல்ல: வீட்டைப் பெருக்குவது, சமைப்பது, பாத்திரங்கள் சுத்தப்படுவது... என வீட்டின் வேலைகளைப் பட்டியலிட்டால் அவற்றில் 90 சதவிகிதம் பெண்கள்தான் பார்க்கின்றனர். இதைப் பார்த்தே வளரும் பெண் குழந்தைகள், தாங்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த வேலைகளை நாம் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைக்க வைக்கப் படுகின்றனர். ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைகள் பெண்களுக்கானது என்கிற எண்ணத்தை மனதில்  பதிய வைத்துக்கொள்கிறார்கள். அந்த எண்ணம் தவறு என்பதையும் நாம் சாப்பிடுகிற உணவைச் சமைக்கவும், அதற்குப் பயன்படுத்திய பாத்திரத்தைச் சுத்தப்படுத்தவும் செய்கிற வேலைகளை ஆண்கள் செய்வது இழிவானது இல்லை என்பதை ஆண் குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் கூறி வளர்க்க வேண்டும். 

2. ஒரு பெண் ஓர் ஆணோடு சகஜமாக உரையாட முடியும்: இதுவும் முக்கியமானதொரு விஷயமே. ஒரு பெண்ணோடு காதல், காமம் இன்றி நட்போடு பேச முடியும் என்பதைப் புரிய வைப்போதோடு, ஒரு பெண் ஓர் ஆணோடு பேசுவதைத் தவறாகப் பார்க்கக்கூடாது என்கிற எண்ணத்தையும் விதைக்க வேண்டும். ஆண், பெண் இருவரிடையே சகஜமான ஓர் உரையாடல் சாத்தியம் என்பதை அவர்கள் விளங்கிகொள்ளச் செய்ய வேண்டும். காலமாற்றத்தில் இது இயல்பாகி விட்டது என்று சொல்பவர்கள் இருந்தாலும் பதின் வயதில் ஏற்படும் மிகச் சிக்கலான ஒன்றாக இதுவே உள்ளது. 

3.  அப்பாவின் பெயர் சொல்லி அம்மா அழைப்பது தவறல்ல: கணவன் - மனைவியிடையே நல்ல புரிதலும் அன்பும் இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் இருக்கக்கூடாது. அன்பின் மிகுதியில் பெயர் சொல்லி அழைக்கக்கூடும். அதைப் பார்த்த பிள்ளைகள் குறிப்பாக ஆண் குழந்தை அதிர்ச்சியாகலாம். ஏனெனில் அவனின் நண்பர்கள் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்திருக்காது. இங்கே சொல்வது பெயர் சொல்லி அழைப்பது என்பது மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் மரியாதை தருவது, உணர்வுகளைப் புரிந்துகொள்வது உட்பட அனைத்தும்தான். இவற்றை ஆண் குழந்தைகள் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளும் போது வீட்டின் ஆண் தன்மை விடுபடக்கூடும். 

குழந்தை

4. நிறத்தில், விளையாட்டில் ஆண், பெண் பேதமில்லை: பண்டிகைகளுக்கு உடை எடுக்க, கடைக்குச் சென்றால் பிங்க் நிறத்தில் ஆண் குழந்தைகளுக்கு உடை தேர்வு செய்தால் வலுகட்டாயமாக அதை மறுக்கின்றனர். ஏனெனில் அது பெண்களின் நிறமாம். இங்குத் தொடங்கி, விளையாட்டில், பயன்படுத்தும் வார்த்தைகளில் ஆண், பெண் என வித்தியாசம் பார்க்கின்றனர். இந்தக் குணத்தையும் மாற்ற வேண்டியது அவசியம். 

5. பாலினப் பாகுபாடு கிண்டலாக வெளிப்படுதல் கூடாது: மிகவும் முக்கியமான விஷயம் இதுதான். பள்ளியிலோ வீட்டிலோ தெருவிலோ தன் சக நண்பனைக் கிண்டல் செய்ய அவனை பெண் என்றோ திருநங்கை என்றோ சொல்லும் பழக்கம் ஆண் குழந்தைகள் பலரிடம் இருக்கிறது. இதுவும் சமூகத்தில் உள்ளவற்றைப் பார்த்து பழகிக்கொண்டதுதான். ஆனால், இது மிகவும் தவறான பழக்கம். எனவே கிண்டல் செய்யும் போது பாலினத்தைக் குறிப்பிடுவது அந்த நண்பனை மட்டும் காயப்படுத்தாது, குறிப்பிடப்படும் பாலினத்தையே காயப்படுத்துவதுபோல. 

குழந்தை வளர்ப்பில், இந்த ஐந்து விஷயங்களைத் தவிர இன்னும் நிறைய உங்களுக்குத் தோன்றலாம். அவற்றை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவது சிரமம் என நீங்கள் கருதக்கூடும். முயன்று பார்த்தால் நிச்சயம் சாத்தியமே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement