வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/10/2017)

கடைசி தொடர்பு:18:40 (10/10/2017)

மாருதி சுஸுகி நடத்தும் 19-வது புதிய போட்டியில் என்ன ஸ்பெஷல்?

''இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம்'' என்ற பெயர்பெற்ற மாருதி சுஸுகி நடத்தக்கூடிய ''Raid DeHimalaya'' ஆஃப் ரோடு போட்டியின் 19 வது எடிஷன், அக்டோபர் 7, 2017 அன்று மணலியில் துவங்கி, அக்டோபர் 14, 2017 அன்று Leh-வில் நிறைவுபெறுகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளின் ''மெக்கா'' என வர்ணிக்கப்படும் இந்தப் போட்டியில், 110 அணிகளில் இருந்து சுமார் 170 பேர் கலந்துகொள்கின்றனர். ''Raid DeHimalaya'' நடைபெறும் 7 நாள்களில், சரியாக 1,850 கி.மீ தூரம் (மணலி - காசா - சர்சூ -லே - கார்கில் - பென்சி லா) பயணிக்க வேண்டும்.

மாருதி சுஸூகி

அழகும், ஆபத்தும் ஒருசேர சூழ்ந்திருக்கும் இடங்களில் ஒன்றான ஹிமாலய மலைப் பிரதேசத்தில்தான், பெரும்பாலான நேரம் பயணிக்க நேரிடும் (-15 டிகிரி குளிர், 17,500 அடி உயரம்) என்பது, கேட்பதற்கே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. எனவே, மனிதன் மற்றும் காரின் உச்சகட்டத் திறனைப் பரிசோதிக்கும் களமாக இருக்கும் ''Raid DeHimalaya''-வில், இந்த இருவரும் கூட்டணி அமைத்துச் செயல்படுவது அவசியம்.

ஆஃப் ரோடு ராலி

மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அசத்தக்கூடிய சுரேஷ் ராணா, சந்தீப் சர்மா, சாம்ரட் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய மாருதி சுஸூகியின் மோட்டார் ஸ்போர்ட் அணி, X-treme Cars, X-treme Bikes, Adventure எனும் 3 பிரிவுகளை உள்ளடக்கிய இந்த ஆஃப் ரோடு ராலிப் போட்டியில் களமிறங்க உள்ளது. இதுவரை 18 ''Raid DeHimalaya'' ஆஃப் ரோடு ராலிப் போட்டி நடைபெற்றுள்ள நிலையில், அதில் 10 முறை வெற்றிக் கோப்பையை முத்தமிட்ட சுரேஷ் ராணா, மணலியைச் சேர்ந்தவர்.

maruti suzuki

ஜிப்ஸி, விட்டாரா பிரெஸ்ஸா, S-க்ராஸ், இக்னீஸ், கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களில், ''Raid DeHimalaya''-வில் மாருதி சுஸூகியின் மோட்டார் ஸ்போர்ட் அணி கலந்துகொள்கிறது. சாலைப் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள், FIA, FMSCI, NCR ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டிருப்பதால், கரடுமுரடான சாலைகளிலும் - கடினமான தட்பவெப்ப நிலையிலும் எந்தப் பிரச்னையின்றி இயங்கும் என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. 

raid dehimalaya

''Raid DeHimalaya'' ஆஃப் ரோடு போட்டியின் 19-வது எடிஷனில், 6 மகளிர் அணிகளும் - 8 ராணுவ அணிகளும் கலந்துகொள்கின்றன. இதில் பங்குபெறும் மாருதி சுஸூகியின் மோட்டார் ஸ்போர்ட் அணி விபரங்கள் பின்வருமாறு,

சுரேஷ் ராணா - பி.வி.எஸ். மூர்த்தி: கிராண்ட் விட்டாரா
சந்தீப் சர்மா - கரண் ஆர்யா: S-க்ராஸ்
ஹரி கிருஷ்ணன் - தினேஷ் தாங்கர்: இக்னிஸ்
த்ராம் பால் ஜாங்ரா - தின்லெஸ் நம்கெயில்: விட்டாரா பிரெஸ்ஸா
சாம்ரத் யாதவ் - எஸ்.என். நிஸாமி - ஜிப்ஸி

நீங்க எப்படி பீல் பண்றீங்க