டெல்லி... தீபாவளி... பட்டாசு... சூழ்நிலையை விளக்கும் சுனிதா நரேன்! #VikatanExclusive | Sunita narain explains the air pollution problem that most of the Indian cities facing

வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (12/10/2017)

கடைசி தொடர்பு:09:09 (12/10/2017)

டெல்லி... தீபாவளி... பட்டாசு... சூழ்நிலையை விளக்கும் சுனிதா நரேன்! #VikatanExclusive

‘டைம்' பத்திரிகை வெளியிட்ட, 2016-ம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் சுனிதா நரேன். இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகத்தின் தற்போதைய இயக்குநர். சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகத் தொடர்ந்து இயங்கிவரும் இவரிடம், டெல்லியின் காற்று மாசுபாடு, தீபாவளியால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை குறித்துப் பேசினோம்.

சுனிதா நரைன் சுனிதா நரேன்

“உலகிலேயே அதிகம் காற்று மாசடைந்த நகரங்களில் ஒன்றாக டெல்லி இடம் பெற்றுவிட்டது. நமது நாட்டின் தலைநகரம் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது?”

டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு நீண்ட வரலாறு உண்டு. 90-களிலிருந்தே டெல்லி நகரின் காற்று மாசடையத் தொடங்கிவிட்டது. மோசமான எரிபொருள்கள் அடங்கிய வாகனங்கள் டெல்லியில் அதிகரித்ததால், காற்றில் வாகனப் புகை, கரித்துகள்கள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு அதிகரித்தது. பின்னர் இதற்கான நடவடிக்கையாக முதல்முறையாக உச்ச நீதிமன்றம் 1998-ல் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. டெல்லியின் எல்லாப் பொதுப் போக்குவரத்தும் சி.என்.ஜி முறைக்கு மாற வேண்டும் என்பதுதான் அது. இது 2000-ம் ஆண்டில், காற்று மாசுபாட்டை வெகுவாகக் குறைத்தது. காற்றின் தரத்தை உயர்த்தியது. ஆட்டோரிக்ஷா, பஸ் என வாகனங்கள் அனைத்துமே, டீசலிலிருந்து சி.என்.ஜி முறைக்கு மாறியதால், நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அதே சமயம் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்தது. இதனால் மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் பெங்களூரைவிடவும், டெல்லியில் வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனால் அப்போது எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே நீர்த்துப்போய்விட்டது. 2010 முதல் காற்று மாசுபாட்டின் அளவு அதிகமானது. தற்போது டெல்லி, உலகின் அதிகம் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நிர்ணயித்த அளவை விட டெல்லியின் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கிறது.

டெல்லி காற்று மாசுபாட்டின் அளவு

படம்: டெல்லியின் 2011 - 15 ஆண்டுகளுக்கான காற்று மாசுபாட்டின் அளவு

"நம்மைப்போலவே சீனாவும், காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை அங்கு தலைநகர் பீஜிங்கில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அதேநிலை, நம் நாட்டிலும் வர வாய்ப்புள்ளதா?"

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 2014-ம் ஆண்டு முதன்முதலில் காற்று மாசை அளவிடும் தேசிய ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் முறையைக் கொண்டுவந்தது. இதன்மூலம் சாமானிய மனிதர்கள்கூட, காற்று மாசுபாட்டின் அளவை வகைப்படுத்தி அறிய முடியும். இந்த ஏர்குவாலிட்டி இன்டெக்ஸ் முறையில் மொத்தம் 6 பிரிவுகள் இருக்கின்றன. நல்ல நிலைமை, ஆபத்தான நிலைமை, மோசமான நிலைமை என அவை பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு நகரத்தில் மோசமான நிலைமை இருப்பது தெரிய வந்தால், உடனே அதற்குத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து, அதற்கு முந்தைய நிலைக்குக் காற்றின் தரத்தைக் கொண்டுசெல்ல வேண்டும். 

இந்த தேசிய ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அளவின்படி, 2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பல நாள்கள் டெல்லி ஆபத்தான நிலையில் இருந்தது. குறைந்த நாள்கள் மட்டுமே, பாதுகாப்பான நிலையில் இருந்தது. அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின், 73% நாள்கள் ஆபத்தான நிலையில் இருந்தது. டிசம்பர் மாதம் ஒரு நாள்கூட, பாதுகாப்பான நிலையில் டெல்லி இல்லை. இதிலிருந்தே டெல்லியின் நிலையை நாம் புரிந்துகொள்ளலாம். எனவே நமது நகரத்தின் காற்றின் அளவு தரம் குறையும்போது, உடனடி நடவடிக்கைகள் எடுத்து, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் நிலைமை இன்னும் மோசமாகாமல் தடுக்க முடியும்.

ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அட்டவணை 

Air Quality Index


"இந்தியாவில் எந்தெந்த நகரங்கள் இதேபோல மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன?"

உலகச் சுகாதார நிறுவனம் 2015-ம் ஆண்டு, மே மாதம் வெளியிட்ட தகவல்களின்படி, 4 இந்திய நகரங்கள் காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்களில் டாப் 10 பட்டியலில் இருக்கின்றன. பாட்னா, குவாலியர், அலகாபாத் மற்றும் ராய்ப்பூர் ஆகிய நகரங்கள்தாம் அவை. மேலும் டெல்லி, லூதியானா, கான்பூர், கன்னா, பிரோஸாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் டாப் 20 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. 

ஆனால், இதிலிருக்கும் சோகமான விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் நம்மூருக்கு அப்படியே பொருந்தாது. இந்த அளவு முறைகள் நம்மூருக்கு நெருக்கமான ஒன்று கிடையாது. ஒரு மாநிலத்தின் தலைநகரம், மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நகரத்தைவிட்டு தள்ளியிருக்கும் பகுதிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. ஆனால், அங்கு இதைவிட அதிகமான மாசுபாடுகள் இருக்கின்றன. உதாரணமாகச் சென்னையை எடுத்துக்கொண்டால், 10 இடங்களில், காற்றின் தரத்தை அளக்கும் மையங்கள் இருக்கின்றன. ஆனால், பட்டாசு உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் சிவகாசியில் ஒரு மையம்கூட இல்லை. இனி இப்படிக் காற்று மாசுபாடுகள் குறித்து சிந்திப்பதில், கிராமங்களை ஒதுக்கிவிட்டு, நகரங்களை மட்டும் கவனத்தில் கொண்டு, ஒருதலைப்பட்சமாகச் செயல்படக் கூடாது. இதனால் சிறிய நகரங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. காற்றில் PM 2.5 துகள்களின் அளவு, 2014-ம் ஆண்டிலிருந்து இந்த நகரங்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அலகாபாத்தில் 92%, லூதியானா 34%, கன்னா 30%, கான்பூர் 24%, ஆக்ரா 20%, லக்னோ 18%, அமிர்தசரஸ் 17% என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், காற்று மாசுபாடு என்பது நம்முடைய தேசியப் பிரச்னை. Global Burden of Disease-ன்படி, இந்தியாவில் மக்களைக் கொல்லும் விஷயத்தில் இந்தக் காற்று மாசுபாடு என்பது 5-வது இடத்தில் இருக்கிறது. அதேபோல வீட்டில் திட எரிபொருள்களை எரிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

"காற்று மாசுபாடு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல்களை வைத்திருக்கும் சமயத்தில் நம் அரசு என்ன செய்ய வேண்டும்?"

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக டெல்லி மாநில அரசு, சமீபத்தில் குறிப்பிடத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் டெல்லியில் காற்று மாசுபாடு குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ராஜ்காட்டில் ஓர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. படர்பூரில் இருக்கும் மற்றொரு அனல்மின் நிலையம், அதன் கொள்ளளவில் 30% அளவுக்கு இயங்கிவருகிறது. அனல்மின் நிலையங்களை இப்படிக் குறைப்பதும்கூட காற்று மாசுபடும் அளவை மேலும் சிக்கலாக்காமல் தடுக்கும். ஆனால், இவையனைத்தும் நிரந்தரத் தீர்வாகி விடாது. நாட்டில் இருக்கும் அனைத்து, மாநில அரசுகளும் தங்கள் பகுதிகளிலிருந்து அதிகமாகக் காற்றை மாசுபடுத்தும் விஷயங்களைக் கண்டறிந்து அதைக் குறைக்க வேண்டும். காற்று மாசுபாட்டை உருவாக்கும் மூலங்களைக் கண்டறிந்து, அறிவியல் பூர்வமாகக் குறைந்தகால மற்றும் நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

காற்று மாசுபாடு

"தீபாவளி சமயங்களில் நாம் வெடிக்கும் பட்டாசுகளால், ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன?"

"இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதுமே பண்டிகைக் காலங்களில் பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் காற்றின் தரம் பாதிக்கப்படுவதோடு, தேவையற்ற இரைச்சல்களும் உண்டாகின்றன. பட்டாசுகளில் பல்வேறு வகையான வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பட்டாசு வெடித்ததும் விரைவில் அழிந்து போவது கிடையாது. உணவுச் சங்கிலி மூலமாக பாதிப்பை உண்டாக்குகின்றன. நிலத்தடி நீரில்கூட இவை கலக்கின்றன. தாவரங்களும் விலங்கினங்களும் இந்த வேதிப் பொருள்களால் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. பட்டாசுகள் என்பவை பொதுவாக ஒரு திட எரிபொருளை எரித்து, அதன் மூலம் சத்தமோ, ஒளியோ உண்டாக்குவது போல தயாரிக்கப்படுபவை. எந்தவொரு பட்டாசிலும் எரிபொருள், பைண்டர் என்னும் காகிதங்கள் மற்றும் பசை, ஆக்சிஜனேற்றி ஊக்கி, அதைக் குறைக்கும் வேதிப் பொருள், கட்டுப்படுத்தும் மற்றும் வண்ணம் தருவதற்கான பொருள்கள் எனக்  குறைந்தது 5 வேதிப் பொருள்கள் இருக்கும். எந்தெந்தப் பொருள்கள், எதற்குப் பயன்படுகின்றன மற்றும் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டாசுகளில் அடங்கியிருக்கும் வேதிப்பொருள்களும் அதன் பாதிப்புகளும்

கடந்த சில வருடங்களில் பல வகையான பட்டாசுகள் புதிதாக வந்துள்ளன. அவை அனைத்துமே, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருள்கள், உலோகங்கள் மூலமாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டும் வருகிறது. பண்டிகைக்கால கொண்டாட்டங்களில், மகிழ்ச்சிக்காகவே இவை பயன்படுத்தப்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக நாம் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்