ஓநாய்களுடன் உறங்கினான்... சாப்பிட்டான்... வாழ்ந்தான் இந்த ஓநாய் மனிதன்! | This wolfman lives, eats and sleeps with wolf

வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (13/10/2017)

கடைசி தொடர்பு:20:44 (13/10/2017)

ஓநாய்களுடன் உறங்கினான்... சாப்பிட்டான்... வாழ்ந்தான் இந்த ஓநாய் மனிதன்!

“எதை நினைக்கிறாயோ கடைசியில்  அதுவாகவே ஆகிறாய்”  என்கிறார் விவேகானந்தர். "எதை நீ தேடுகிறாயோ அது உன்னையும் தேடிக்கொண்டிருக்கிறது” என்கிறது ரூமியின் வரிகள். தேர்ந்தெடுத்த துறையில் அர்ப்பணிப்பு என்கிற விஷயம் ஒரு மனிதனின் வாழ்வை  எந்த அளவுக்கு மாற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாக  உலகில் அநேக சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் சில சம்பவங்கள்தான்  வரலாறாக மாறி விடுகின்றன. அப்படி ஒரு வரலாறு  ஓநாய் மனிதன் பற்றியது....

wolf

இங்கிலாந்தில் இருக்கிற சிறிய கிராமம் கிரேட் மாசிங்கம். இந்தக் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஷான் எல்லிஸ். சிறு வயதில் விலங்குகள் குறித்த விஷயங்களை உள்வாங்க ஆரம்பிக்கிறார். மேலோட்டமாக விலங்குகளைப் பார்ப்பது மட்டும் அல்லாது விலங்குகளின் வாசனை, ஒலி , அதன் அறிவுத் திறன் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பிக்கிறார். எல்லா விலங்குகள் பற்றியும் ஷான் உள்வாங்க ஆரம்பித்தாலும்  ஓநாய் மட்டும் ஷான் மனதில் ஆழமாய்ப் பதிய ஆரம்பிக்கிறது. விலங்குகள் பராமரிக்கும் நிறுவனத்தில் முதலில் பணிக்குச் சேர்கிறார். பணியில் நரிகளுக்கு உணவளிக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. நரிகளின் உணவை ஓநாய்களுக்குக் கொடுக்கிறார் என்கிற புகார்கள் வர ஆரம்பிக்கிறது. அந்த நிறுவனத்தில் இருந்து விலகுகிறார். 

பிறகு லெவி ஹோல்ட் என்கிற அமெரிக்க உயிரியலாளரிடம் இணைகிறார். பல மாதங்கள் அவரோடு இருந்து ஓநாய்கள் பற்றிய ஆய்வில் ஈடுபடுகிறார். ராயல் காடுகளில் முதன் முதலில் ஒரு ஓநாயைப் பார்க்கிற ஷான் அவற்றைப் பற்றிய விஷயங்களைக் கவனிக்கிறார். தனக்கான ஓநாய் குழு ஒன்றாய் காடுகளில் கண்டறிகிறார். ஓநாய்கள் ஸானை ஏற்றுக்கொள்கின்றன. அவற்றோடு இருந்து சில நாள்களில் ஓநாய்களின் மொழி, அறிவு சார்ந்த விஷயங்கள், அதன் வாசனை அறியும் தன்மை, அதன் ஒலி (ஊளையிடுவது) அனைத்தையும்  உள்வாங்குகிறார். அவற்றோடு இருக்கிற நேரங்களில் ஓநாய்களின் ஊளையிடும் சத்தத்தைப் பதிவுசெய்து கொள்கிறார். ஊளையிடுவது என்பது ஓநாய்களின் கூட்டத்தில் தொடர்புகளுக்கான மொழி.10 கிலோ மீட்டர்கள் வரை அவை அவற்றின் மொழியைக் கொண்டு மற்ற ஓநாய்களோடு தொடர்பில் இருக்கும். ஊளையிடும் சத்தங்களைக் கொண்டே அவற்றின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். ஓநாய்களின் மொழி என்பது அவற்றுக்கான ஒரு மிக முக்கியமான அடையாளம் என்பதை  உணர்கிறார்.

ஓநாய் மனிதன்


2005-ம் ஆண்டு காட்டுக்குள் தாயால் கைவிடப்பட்ட மூன்று ஓநாய்க் குட்டிகளை மீட்டு கோம்பே மார்ட்டின் விலங்குகள் பூங்காவுக்குக் கொண்டு வருகிறார். ஓநாய் குட்டிகளுக்கு முறையே யனா, மஷ்கா, மஸ்தி எனப் பெயரிடுகிறார். அவற்றோடு இருந்து ஓநாய்களை ஷான் வளர்க்க ஆரம்பிக்கிறார். அவற்றோடு விளையாடுவது, உணவு உண்பது உறங்குவது என பெரும்பாலான நேரங்களை அவற்றுடன் கழிக்கிறார். உணவு உண்ணும்போது உணவாகக் கிடைக்கிற விலங்கின் லிவர், இதயம் போன்ற முக்கியப் பகுதிகளைத் தலைவர் என்கிற முறையில் ஷான் எடுத்துக்கொள்கிறார். மற்ற பகுதிகளை ஓநாய் குட்டிகள் உண்கின்றன. மூன்று குட்டிகள் அடங்கிய குழுவுக்கு ஷான் தலைவராக இருக்கிறார். ஆரம்பத்தில் அவற்றுக்கு ஓநாய்களின் மொழியைப் பயிற்றுவிக்கிறார். மொழிதான் ஓநாய்களின் எல்லைகளையும் அதன் நண்பர்களையும் உருவாக்குவதில் முக்கிய பங்காக இருக்கிறது. ஷான் தான் கற்றுக்கொண்ட ஓநாய் மொழியைக் குட்டிகளுக்கு பயிற்றுவிக்கிறார். மனிதன் பயிற்றுவித்து விலங்கு ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது இயற்கைக்கு முரணான விஷயமாக இருந்தாலும் அதுதான் அங்கே  நடந்தது. 

காடுகளில் வாழ ஓநாய்களுக்கு அதன் மொழி இன்றியமையாத ஒன்று. தான் கற்றுக் கொடுத்த மொழியைக் குட்டிகள் சரியாக உள்வாங்கி இருக்கிறதா என்பதை அறிய ஏற்கெனவே பதிவுசெய்து வைத்திருந்த ஓநாய்களின் ஒலியை டேப்ரெக்கார்டர் உதவியுடன் ஒலிக்க விடுகிறார். குட்டிகள் அந்தச் சத்தத்தைக் கேட்டு எதிர் சத்தம் போட ஆரம்பிக்கின்றன. மொழி பயனளிக்கிறது என்பதை உறுதிசெய்கிற ஷான் அடுத்ததாக அந்தக் குட்டிகளுக்கு வேட்டையாடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கிறார். அடுத்த சில தினங்களில் ஷான் படித்த யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஒரு தகவல் கிடைக்கிறது. “காட்டு ஓநாய்கள் வருடத்துக்கு 200க்கும் மேலான கால்நடைகளை கொன்று விடுகின்றன, அதனால் கோபமடைகிற  விவசாயிகள் ஓநாய்களை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள்” என்ற தகவல் கிடைக்கிறது. மேலும், அதனோடு ஒரு வீடியோ சீடியும் இருக்கிறது. வீடியோவில் ஒரு கன்றுக்குட்டியைக் காட்டு ஓநாய்கள் வேட்டையாடிக் கொன்றது பதிவாகி இருக்கிறது. 

இங்கிலாந்தில் இருந்து பிரிகிற ஷான் அமெரிக்காவில் இருக்கிற யெல்லோஸ்டோன்  தேசிய பூங்காவுக்கு வருகிறார். அங்கு ட்ரக் ஸ்மித் என்கிற உயிரியல் ஆய்வாளரைச் சந்திக்கிறார். ”யெல்லோஸ்டோன் சுற்றியப் பகுதிகளில் காட்டு ஓநாய்கள் மக்களுக்கு அதிக தொல்லை தருகின்றன. அதன் காரணமாக மக்கள்  ஓநாய்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் கொன்று விடுகிறார்கள். ஓநாய்களின் அழிவு கவலை அளிக்கிறது” என ட்ரக் ஸ்மித் சொல்கிறார். 

ஓநாய் மனிதன்

அங்கிருக்கிற மக்களைச் சந்திக்கிற ஷான் அந்தப் பகுதிகளில் இருக்கிற ஓநாய்கள் குறித்த தகவல்களைப் பெறுகிறார். பிறகு அவை நடமாடும் பகுதிகளைக் குறிப்பெடுக்கிறார். ஒவ்வொரு ஓநாயும் ஒரு குழுவை சார்ந்தே இயங்கும். அவற்றுக்கென தனி எல்லைகள் இருக்கிறது என்பதை அவ்வூர் மக்களிடம் எடுத்துரைக்கிறார். பிறகு தான் பதிவுசெய்து வைத்திருக்கும் ஓநாய்களின் ஒலியைப் பயன்படுத்தி காட்டு ஓநாய்களை விரட்டுவது என முடிவு செய்கிறார். தன்னுடைய திட்டத்தை ஸ்மித்திடம் சொல்லி அனுமதி பெறுகிறார். தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த நேரம் பார்த்து காத்திருக்கிறார். காட்டு ஓநாய்கள் விடியற்காலை நான்கு மணி விவசாயப் பகுதிக்கு வருகிற நேரம். ஓநாய்களின் ஒலியை  ஒலிக்க விடுகிறார். ஒலியைக் கேட்கிற ஓநாய்கள் வேறொரு ஓநாய் கும்பலின் எல்லைக்குள் வந்து விட்டதாய் நினைத்துத் திரும்பிச் செல்கின்றன. இந்தத் திட்டம் ஸ்மித்தின் முயற்சியால் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது. பிறகு அங்கிருந்து இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்.

இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய ஓநாய் கூட்டத்துக்குள் செல்கிறார். அங்கிருக்கிற ஓநாய்கள் ஷான் வருவதைப் பார்த்து துள்ளிக் குதிக்கின்றன. ஓநாய் குட்டிகளுக்குள் ஒரு மாற்றம் இருப்பதை ஷான் உணர்கிறார். தான் இல்லாத நேரத்தில் யனா  தலைமை பொறுப்பை எடுத்திருப்பதை உணர்கிறார். அதனால் யனாவுக்கும்  மஸ்திக்கும் கருத்துவேறுபாடு இருப்பதை உணர்கிறார். அவ்விரண்டு ஓநாய்குட்டிகளுக்கும் இடையில் சமாதானம் செய்கிறவராக ஷான் இருக்கிறார். இரண்டு வார இடைவெளியில் திரும்பியதால் இப்போது ஓநாய்க் குட்டிகள் கூட்டத்தில் தன்னை எப்படிப் பார்க்கின்றன என்பதை நினைத்துக் குழம்புகிறார். அப்போது கிடைக்கிற உணவின் முக்கிய பகுதிகளான லிவர், இதயம் போன்ற பகுதிகளை யனா எடுத்துக்கொள்வதை பார்க்கிறார். அப்போது அமெரிக்கா மற்றும் போலந்து போன்ற இடங்களில் ஷான் அறிமுகப்படுத்திய ஓநாய்களின் ரெக்கார்ட் சத்தம் 90 சதவிகிதம் பயனளிப்பதாகத் தகவல் கிடைக்கிறது. 

மூன்று வளர்ந்த ஓநாய்களுடன் இருக்கிற ஷான், ஓநாய் குடும்பத்தை நேசிப்பதாகவும் அவை அவர் மேல் அன்போடு இருக்கின்றன என்றும் சொல்கிறார். ”ஓநாய்கள் கொடூரமான கொலையாளிகள். அவை எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தாக்கிக் கொல்லும்”   என நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும்  ஓநாய்களோடு வாழ்ந்து வருகிறார்.

”வட்டியும் முதலும்” என்கிற புத்தகத்தில் இப்படி ஒரு வரி வரும். “நண்பன் ஒருவனைப் பார்க்க அவன் வேலை செய்த தோல் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். ஒரு நிமிடம் கூட அங்கே  நிற்க முடியவில்லை. “எப்பிடிடா இங்க வேலை பார்க்கிற” என்றேன். “மச்சான் பழகிட்டா பூ மார்க்கெட்ல வேல பார்க்கிற மாதிரி ஆகிரும்டா” என்றான். எவ்வளவு பெரிய உண்மை.


டிரெண்டிங் @ விகடன்