பாரதியாரின் பெண் சிந்தனையில் மாற்றம் விதைத்த சகோதரி நிவேதிதா! | Sister Nivedita Memorial Day Special article

வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (13/10/2017)

கடைசி தொடர்பு:09:22 (13/10/2017)

பாரதியாரின் பெண் சிந்தனையில் மாற்றம் விதைத்த சகோதரி நிவேதிதா!

நிவேதிதா

“பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் 
பேதமை யற்றிடும் காணீர்!” 

பெண்களின் அறிவே இந்த உலகின் பேதமையை அற்றுப்போகச் செய்யும் என்று எழுதியவர் பாரதியார். அவரின் பெண் விடுதலை சிந்தனைக்கான புதிய போக்கைக் காட்டியவர்தான் சகோதரி நிவேதிதா. புகழ்பெற்ற அந்தச் சம்பவத்துக்கு முன் நிவேதிதா பற்றிய சில விஷயங்களைப் பார்ப்போம். 

இந்திய மக்களால் சகோதரி நிவேதிதா என நினைவுக்கூறப்படும் இவர் 1867 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் உள்ள டங்கானன் நகரில் பிறந்தவர். இயற்பெயர் மார்க்கரெட் எலிசபெத் நோபில். கிறிஸ்துவக் குடும்பத்தில் மதப்போதகருக்கு மகளாகப் பிறந்த இவருக்கு இயல்பிலேயே ஆன்மிகம் தொடர்பான தேடல் இருந்தது. 

படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பாடங்களைப் போதிப்பது மட்டுமே தன் பணி என்று இவர் ஒதுங்கிகொள்ளாமல், கல்வி குறித்த விரிவான தேடலை மேற்கொண்டார்.  தனியே ஒரு பள்ளியைத் தொடங்கி, நடத்தியவர். பத்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தலை சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார். 

நிவேதிதா

தனது ஆன்மிக ஈடுபாட்டை ஒரு மதம் என்பதாகக் கருதாமல், உண்மையை நோக்கிய பயணமாக மாற்றிக்கொண்டார். புத்த மதம் தொடர்பாகவும் படித்தார். அந்தச் சூழலில்தான் தன் தோழியின் மூலம் விவேகானந்தர் உரையைக் கேட்டார்.  அந்த உரை முதலில் பெரிய அளவில் அவருக்கு ஈர்ப்பை அளிக்காவிட்டாலும் நிறையக் கேள்விகளை உருவாக்கியது. அதன் பதில்களைத் தேடிக் கண்டடைந்தார். தெளிவடைந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரே தம் குரு என உணர்ந்தார். அவரின் வழிகாட்டலில் இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். நிவேதிதா எனும் பெயரைச் சூட்டுகிறார் விவேகானந்தர். (நிவேதிதா என்றால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள் என்பது அர்த்தம்)

கொல்கத்தாவில் 1898 ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். ஏனெனில் பெண்களுக்குக் கல்வி சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அன்னை சாரதா தேவிதான் அந்தப் பள்ளியைத் தொடங்கி வைத்தார். கல்வி மட்டுமல்லாமல், தொழில்கல்வியும் நுண்கலைகளையும் பயிற்றுவித்தார் நிவேதிதா. பள்ளியின் செலவுகளைப் பூர்த்திச் செய்ய, தம் நூல்களுக்கு வரும் பணம் முழுவதையும் பயன்படுத்தினார். இங்கிலாந்து நாட்டு நண்பர்கள் சிலரும்  அவருக்கு உதவினர்.

நிவேதிதா

கல்விப் பயணத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திவந்த நிவேதிதாவுக்கு விவேகானந்தர் மிகப் பெரிய பொறுப்பை அளித்தார். அந்த நேரத்தில் கொல்கத்தாவில் பிளேக் நோய் தீவிரமாகப் பரவி, மக்கள் தாங்க முடியாத இன்னலுக்கு உள்ளாயிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவேதிதா தலைமையில் நிவாரணக் குழு ஒன்றை அமைக்கிறார் விவேகானந்தர். அந்தப் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய களத்தில் இறங்குகிறார். நகரின் குடிசைப் பகுதிகளில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து, தன் சேவையைச் செய்கிறார். 

தான் நடத்தி வந்த பள்ளி நிதி நெருக்கடியைச் சந்திக்க, நிதி திரட்ட இங்கிலாந்து செல்கிறார். அப்போது நியூயார்க் செல்லும்போது ‘ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்' எனும் இளைஞர்களான அமைப்பை நிறுவுகிறார். தம் ஆன்மிகக் குரு விவேகானந்தர் மறைவுக்குப் பிறகு, சோர்ந்துவிடாமல், அவரின் கருத்துகளைப் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டார்.

பாரதியார்ஒருமுறை காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியார் கொல்கத்தாவில் தங்குகிறார். அங்குச் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உரையாடுகிறார். அப்போது நிவேதிதா, “ஏன் உங்கள் மனைவியை அழைத்து வர வில்லை?" எனப் பாரதியைப் பார்த்து கேட்கிறார். "எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. அதுமட்டுமல்லாமல் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது" என்கிறார். அதற்கு நிவேதிதா, “உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?" எனும் தொனியில் கேள்வி கேட்கிறார். அது பாரதியாரை உலுக்கியது, அதுவரை அவர் கொண்டிருந்த  பெண்கள் விடுதலை குறித்த சிந்தனையை முழுதாக மாற்றி அமைத்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக்கொண்டார் பாரதியார். அவருக்கு குரு ஸ்தோத்திரமும் இயற்றினார். 

நிவேதிதா இந்தியப் பெண் உரிமைக்களுக்கான பணிகளில் தம்மை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்டார்.  அறிவியலாளர் ஜெகதிஷ் சந்திரபோஸ் நூல் வெளிவர பெரிதும் உதவியாக இருந்தவர்.

தனது 44 வது வயதில் 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று மறைந்தார். ஆனாலும் அவர் ஆற்றிய சேவைகள் வழியே இன்றும் உயிர்ப்போடு உலவிகொண்டுதான் இருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்