Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச்சந்தை முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விதிகள்!

பங்குச்சந்தை வர்த்தகம் என்றாலே, பலருக்கும் பயம்தான். ஆனால், சந்தையின் போக்கை மிகச்சரியாகக் கணித்து, சரியான நேரத்தில், சரியான முடிவுகள் எடுத்தால் சாமானிய முதலீட்டாளரும் பங்குச்சந்தையில் பணத்தைப் பார்க்க முடியும். அப்படியான பங்குச்சந்தை முதலீட்டுக்கு முக்கியமான சில விஷயங்களைப் பார்ப்போம். 

பங்குச் சந்தை


1. பங்குச்சந்தை முதலீட்டில் அவசர அவசரமாக முதலீட்டு முடிவைத் தீர்மானிப்பது ஒருசில நேரங்களில் மட்டும் சரியாக அமையலாம். ஆனால், அது பெரும்பாலான நேரங்களில் தோல்வியில் முடிய வாய்ப்பிருக்கிறது. பங்குச்சந்தையில் பொறுமை முக்கியம். பங்குகளை ஏனோதானோ என வாங்குவதும், அவற்றை விற்பதும் கூடாது.

2. சந்தையில் நீங்கள் வாங்க நினைக்கும் பங்கு ஒன்றின் விலை அல்லது பொதுவாக ஒரு பங்கின் விலை மலிவாக இல்லையென்றால், அந்தப் பங்கை வாங்காமல் இருப்பதே நல்லது. அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு, `விலை ஏறவில்லை!' எனப் புலம்புவதற்கு, வாங்காமலே இருக்கலாம். 

3. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கி, அந்தப் பங்கை நீண்டகால நோக்கில் வைத்திருந்தால் பயனடையலாம் என்பது எல்லா நேரமும் சரியாக இருக்காது. சந்தை நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் வாங்கிய பங்கு சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே வருமானத்தை ஈட்ட முடியும்.  ஆகையால், ஆறு மாதம் அல்லது வருடத்துக்கு ஒருமுறையாவது பங்கின் செயல்பாட்டை ஆராய்ந்து, அதன்பிறகு அதில் முதலீட்டைத் தொடர்வது நல்லது. 

4. பங்குச்சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் என எதுவாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. சில சமயங்களில் நஷ்டமும் ஏற்படலாம். அப்படி நஷ்டம் ஏற்படும் சமயங்களில் மீண்டும் அதிக பணத்தை முதலீட்டை மேற்கொள்ளாதீர்கள். இங்கு, உணர்ச்சிவசத்தால் மீண்டும் தவறு ஏற்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது. பொறுமை முக்கியம். 

5. உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் பத்து பங்குகளில் ஏழு பங்குள் மட்டுமே நல்ல வருமானத்தை வழங்குகின்றன. மூன்று பங்குகள் தொடர்ந்து நஷ்டத்தையே தருகின்றன எனில், மூன்று பங்குகளையும் விற்றுவிட்டு, நல்ல லாபம் தரும் பங்குகளை மட்டும் வைத்திருப்பதே நல்லது. ஏனெனில், நஷ்டத்தைத் தரும் பங்குகளால் உங்களுடைய ஒட்டுமொத்த முதலீடும் லாபத்தை ஈட்டாமல் நஷ்டத்தையே சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. 

6. சந்தையின் டிரெண்டிங்கைப் பொறுத்து வர்த்தகம் மேற்கொள்வது எப்போதும் நல்லது. ஒருவேளை டிரெண்டிங் எதிராக வர்த்தகம் மேற்கொண்டால், அதிக நஷ்டத்தைக்கூட சந்திக்க நேரிடலாம். குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டிவிகிதம் குறித்த சமயங்களில் சந்தை ஏற்ற, இறக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதுபோன்ற சமயங்களில் வர்த்தகம் மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது. 

7. மிகவும் குறைந்த விலையில் இருக்கும் பங்குகளை வாங்கி, அந்தப் பங்குகள் 50 பைசா, ஒரு ரூபாய் அதிகரிக்கும்போது விற்பனை செய்யலாம், எளிதாக லாபம் ஈட்டலாம் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால், இது மிகவும் தவறான முடிவு. ஒற்றை இலக்கத்தில் இருக்கும் பங்குகளின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. எந்த நேரத்திலும் பூஜ்ஜியம்கூட ஆகலாம். ஆகையால், இதுபோன்ற மிகவும் குறைந்த விலையுடைய நிறுவனத்தின் பங்குகளை வாங்காமல், நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கி முதலீட்டை மேற்கொள்வது நல்லது.

8. எப்போதுமே எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகள் மீதும் காதல்கொள்ளாதீர்கள். அந்த நிறுவனத்தின் பங்குகளை தொடர்ந்து வைத்திருக்க நினைக்காதீர்கள். லாபமோ, நஷ்டமோ எந்த ஒரு நிறுவனத்தின் பங்காக இருந்தாலும், எல்லாம் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே. அதன் பிறகு அந்தப் பங்கை விற்பனை செய்து, வேறு ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீட்டை மேற்கொள்வதே நல்ல முடிவு. 

9. பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பதே ரிஸ்கான விஷயம். அதேசமயம் எந்த ஒரு பங்கிலும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ரிஸ்க் எடுங்கள். அதற்கு மேல் ரிஸ்க் எடுக்கிறேன் என்ற பெயரில் முழுப் பணத்தையும் இழக்காதீர்கள். 

10. பங்குச்சந்தையில் 30 சதவிகிதம், 40 சதவிகிதம் என நஷ்டம் வந்தால்கூட கண்டுகொள்ளாமல், கவலையடையாமல் பலர் இருக்கின்றனர். அதே நேரத்தில் 10 சதவிகிதம் வருமானம் வந்தால்கூட அவசர அவசரமாக லாபத்தைப் பதிவுசெய்பவர்களும் இருக்கிறார்கள். சந்தையில் நன்றாகச் செயல்படும் நிறுவனத்தின் பங்குகளின் மூலம் ஒரேடியாக லாபத்தைப் பதிவுசெய்ய அவசரப்படாதீர்கள். 10 சதவிகிதம் மட்டுமல்ல, 100 சதவிகிதத்துக்கு மேலும் வருமானத்தை வழங்கக்கூடியது பங்குச்சந்தை மட்டுமே. ஆகையால், அவசரப்பட்டு லாபத்தை இழக்காதீர்கள். 

பங்குச்சந்தையில் 60 சதவிகிதம் பேர் வருமானவரியைச் சேமிப்பதற்காகவும், 35 சதவிகிதம் பேர் பணத்தைப் பெருக்கவும் முதலீடு செய்வதாகச் சொல்லப்படுகிறது. இதில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே சந்தையின் போக்கைச் சரியாகக் கணித்து, சரியான நேரத்தில், சரியான முடிவுகளுடன் இலக்கு நோக்கி முதலீடு செய்கின்றனர்; வெற்றியும் பெறுகின்றனர். ஆகையால், நீங்களும் பங்குச்சந்தை குறித்து ஓரளவு கற்றறிந்து, நல்ல நிறுவனத்தின் பங்கில் நீண்டகாலம் முதலீடு செய்து லாபம் ஈட்டலாமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement