வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (16/10/2017)

கடைசி தொடர்பு:20:17 (16/10/2017)

அழிந்து வரும் பறவை இனத்தைக் காப்பாற்ற காடு, மலைகளைக் கடக்கும் நாய்..!

கடுமையான மலைப்பாதை. கூடவே குளிர். குத்திக் கிழிக்கும் முட்கள். தன்னோடு இழுத்துக் கொண்டு ஓடும் அளவிற்கான வேகத்தில் சலசலத்து ஓடும் ஓடை. அடர்ந்த இருள் சூழ்ந்த குகைகள். இப்படியாகத் தன் எஜமானர் கொர்ரி (Corie) போகும் இடங்களுக்கெல்லாம் சளைக்காமல் போகிறான் அய்ஜக்ஸ் (Ajax). கருப்பு அவன் நிறம். வாய்ப் பகுதியில் மட்டும் கொஞ்சம் வெள்ளை. நான்கு கால்களின் பாதங்களில் கூட மெல்லிய வெண்மைப் படர்ந்திருக்கும். வாலிலும், காதுகளிலும் "புசு புசு" என முடி இருக்கும். உலகின் ஒரு மிக அரிதான பறவை இனத்தைக் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டிருக்கிறான் அய்ஜக்ஸ்.  அழகான, அறிவான நாய். 

பறவையைக் காக்க காடு, மலை ஏறும் நாய் - நியூசிலாந்து

இன்றைக்கு உலகளவில் நியூசிலாந்தின் உயர்ந்த மலைகளில் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு கிளி இனம் "கீ " (Kea). பொதுவாக கிளிகள் சமதளங்களில் தான் வாழும். ஆனால், மிகவும் உயரிய மலைகளில் வாழும் ஒரு கிளியினம் இந்த கீ. இலைகள், பழங்கள், மரத்தின் வேர்கள், பூக்கள், பூச்சிகளோடு சமயங்களில் மாமிசத்தையும் புசிக்கும் ஒரு வித்தியாச கிளி இனம். கீ மிகவும் அறிவுத் திறன் வாய்ந்த பறவையினம். காடுகளில் ஒரு காலத்தில் பரவலாக இருந்த இனம்தான். ஆனால், ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் பட்டிகளில் இருக்கும் ஆடுகளின் முதுகில் வந்து உட்கார்ந்து அதன் தோலைக் கொத்தி, சதையை தின்கிறது என்ற காரணத்தினால் இவைற்றை விஷம் வைத்துக் கொன்றனர். கொஞ்ச காலத்தில் மிகவும் அரிதான பறவையாக இது மாறிவிட்டது. இதைக் காப்பாற்றும் வேலையில் தான் அய்ஜக்ஸும், அவனின் எஜமானர் கொர்ரியும் இறங்கியிருக்கிறார்கள்.

பறவையைக் காக்க காடு, மலை ஏறும் நாய் - நியூசிலாந்து

அந்த அடர்ந்த காட்டிற்குள் போகும் அய்ஜக்ஸ், தன் மோப்ப சக்தியைக் கொண்டு "கீ"க்களின் கூடுகளைத் தேடத் துவங்குகிறான். வழக்கமான கிளிகள் போல் , "கீ"யின் கூடுகள் மரங்களில் இருக்காது. பொந்துகளிலோ, பாறை இடுக்குகளிலோ, குகைகளிலோ தான் கீ தன் கூடுகளை அமைக்கும். அதைத் தேடிப் போகும் அய்ஜக்ஸ் கூட்டைக் கண்டுபிடித்ததும் அதன் அருகே போய் அசையாமல் நிற்கும்; ஒருவிதமான சமிக்ஞையைக் கொர்ரிக்கு அது கொடுக்கும். அதைப் புரிந்துகொண்டு சத்தம் போடாமல், கூட்டை நெருங்குவார் கொர்ரி. கீயைப் பிடித்து அதன் கால்களில் ஒரு பேட்ஜை பொருத்துவார் கொர்ரி. அதனைக் கொண்டு கீக்களின் எண்ணிக்கை, அதன் வாழ்வியல் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறார். அந்த ஆராய்ச்சியைக் கொண்டு, அதன் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளையும் மேற்கொள்கிறார். 

அய்ஜக்ஸ் "பார்டர் கோல்லி" (Border Collie) எனும் வகையைச் சேர்ந்தது. 

எஜமானரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் பிரசித்தி பெற்றது. 

மிகச் சிறந்த காவல் நாய். 

ஸ்காட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டது. 

1800களில் தான் ஸ்காட்லாந்திற்கு இந்த வகை நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 

ஆண் நாய் 14 - 20 கிலோ வரை எடை இருக்கும்.

பெண் நாய் 12-19 கிலோ வரை எடை இருக்கும். 

பறவையைக் காக்க காடு, மலை ஏறும் நாய் - நியூசிலாந்து

உலகிலேயே ஒரு பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக வேலை செய்யும் ஒரே நாய் அய்ஜக்ஸ் தான். இது குறித்த பயிற்சியை அய்ஜக்ஸிற்கு, அதன் சிறு வயதிலிருந்தே அளித்து வருகிறார் கொர்ரி. 

பறவையைக் காக்க காடு, மலை ஏறும் நாய் - நியூசிலாந்து

"எங்களின் ஒவ்வொரு நொடியுமே ஆபத்தானது தான். காடுகளில் எங்கள் உயிரைப் பணையம் வைத்து தான் இந்த வேலையை நாங்கள் செய்து வருகிறோம். என்னைப் பற்றும், அய்ஜக்ஸ் பற்றியும் படிக்கும் ஒவ்வொருவரும் 'கீ'க்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அற்புதமான பறவையினம் காக்க குரல் கொடுக்க வேண்டும். இதை என் குரலாக மட்டுமல்லாமல், அய்ஜக்ஸின் குரலாகவும் சேர்த்து சொல்கிறேன்..." என்று அந்த மலையுச்சியின் குளிரை, எரியும் நெருப்பில் தணித்தபடியே சொல்கிறார் கொர்ரி. அய்ஜக்ஸ் தன் உருளையான கண்களை உருட்டியபடியே, கொர்ரியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க