வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (16/10/2017)

கடைசி தொடர்பு:12:12 (16/10/2017)

போர், வெடிகுண்டு, பசி, தாகம், பயம்... எல்லாம் கடந்து உயிர் பிழைத்த 13 மிருகங்கள்!

அந்தப் பெண் பதற்றத்தோடு ஓடி வருகிறாள். கொஞ்சம் அழவும் செய்கிறாள். அழுகைக்கு நடுவே,

“டாக்டர்... சுல்தானுக்கு மூச்சு நின்றுவிட்டது. என்ன ஆனதுன்னு தெரில... கொஞ்சம் சீக்கிரம் வாங்க"

டாக்டர் குழு வேகமாக அந்தக் கூண்டை நோக்கி ஓடுகிறது. கூண்டுக்குள் அசைவும் மூச்சும் இல்லாமல் கிடக்கிறான் சுல்தான். கூண்டைச் சுற்றி பலரும் பதற்றத்தோடு நின்றுகொண்டிருக்க, டாக்டர் கூண்டுக்குள் நுழைகிறார்.

சில நொடிகள்... தன் முழு பலத்தையும் கொண்டு முதலுதவிகளைச் செய்கிறார். ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்து அமைதியாக கவனிக்கிறார். அந்தப் புலியின் ஒட்டிய வயிறு மெதுவாக மேல் எழுந்து, கீழ் இறங்குகிறது. டாக்டர் மெல்லிய சிரிப்போடு திரும்பிப் பார்க்கிறார். கூண்டைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் மொத்தக் கூட்டமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மகிழ்ச்சியில் கைதட்டுகிறது. 

இது முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்து அங்கிருக்கும் சிங்கம் சோர்வடைந்து மயங்கிவிட்டதாகச் செய்தி வருகிறது. அதைத் தூக்கிக் கொண்டு மருத்துவ அறைக்கு ஓடுகிறார்கள். பல பரிசோதனைகள் முடிந்தது. அல்ட்ரா சோனிக் பரிசோதனையின்போது, அந்த சிங்கம் கர்ப்பமாக இருப்பதும், மேலும், எந்த நேரமும் பிரசவ வலி அதற்கு ஏற்படலாம் என்று சொல்கிறார் டாக்டர்.

போரில் தப்பிய 13 மிருகங்கள்

மயக்க நிலையில் சுல்தான்...

“ஆனால் டாக்டர்... நமக்கு இங்கு மூன்று வாரம்தான் தங்க அனுமதி. நாம் நாளையே கிளம்ப வேண்டும். இந்த சிங்கத்தை நம்மால் அழைத்துச் செல்ல முடியுமா?”

டாக்டர் மெளனமாக இருக்கிறார். பதில் சொல்லவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப்போகிறார். எந்த நேரமும் பிரசவம் நடக்கலாம். அந்த சிங்கம் என்ன ஆனது? அதன் குட்டி பிறந்ததா? பிறந்த குட்டி பிழைத்ததா?

இந்தக் கேள்விகளுக்கான விடை காணும் முன் இது என்ன கதை, எங்கு நடந்த கதை என்ற கதைகளின் கதைகளைத் தெரிந்துகொள்ளலாம். 

சிரியாவில் 2011-ல் பெரும் உள்நாட்டுப் போர் வெடித்தது. 50 லட்சம் பேர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர். தோராயமாக ஒரு கோடி பேர் உள்நாட்டிலேயே, தாங்கள் இதுவரை வாழ்ந்துவந்த மொத்த வாழ்வையும் இழந்து ஏதுமற்ற வாழ்வுக்கு எறியப்பட்டனர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் மிக முக்கியமான பங்கு வகித்தது "அலெப்போ" எனும் நகரம். ஆயுதமேந்திய போராட்டக் குழுவும், அரசின் ராணுவமும் மாறி, மாறி இந்த நகரைக் கைப்பற்றுவதும், விடுவதுமாக இருந்தன. இதன் அர்த்தம், இடைவிடாமல் தொடர்ந்து தாக்குதல்களிலேயே இந்த நகரம் இருந்தது என்பது.

போரில் தப்பிய 13 மிருகங்கள் - சிரியா

அலெப்போ நகரைத் தாண்டிய சில கி.மீ தொலைவில் இருக்கிறது "மேஜிக் வேர்ல்டு மிருகக்காட்சி சாலை” (Magic World Zoo). போர் தொடங்கிய அந்த ஒரு நொடிக்கு முன்னர் வரை, முதல் குண்டுச்சத்தம் கேட்ட அந்த ஒரு நொடிக்கு முன்னர் வரை அங்கு 300க்கும் அதிகமான மிருகங்கள் இருந்தன. தொடர்ந்த யுத்தத்தில் பல ஷெல் குண்டுகள் வானிலிருந்து வீசப்பட்டன. மிருகக்காட்சியின் உரிமையாளர் உட்பட அந்த நகரமே பெரும் பங்கு காலியானது. சிலர் உயிரோடு வெளியேறினார்கள். சிலர் குண்டுகளுக்கு இரையாகி இறந்துப் போயினர். போரின் கதைகள் மனிதர்களையும் தாண்டியது.

கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த மிருகங்களின் மனநிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்... முதல் குண்டின் சத்தம் கேட்டதும் அந்த சிங்கம் எத்தனை மிரட்சியோடு பார்த்திருக்கும். இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து உயர பறந்து போகும் பறவைகளும், கிளைத் தாவி தப்பியோடும் குரங்குகளும் அந்தச் சத்தத்தைக் கேட்டு எப்படி பயந்து நடுங்கியிருக்கும்? கண்ணாடிப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருக்கும் அந்தப் பாம்புகள், சிறு குளத்தின் ஓரம் படுத்துக் கொண்டிருக்கும் முதலைகள், தன் குழந்தைகளோடு இருக்கும் புலிகள், பழங்களைக் கொறித்துக் கொண்டிருக்கும் கரடிகள், தண்ணீரை தங்கள் மீது வாரியிறைத்துக் கொண்டிருந்த யானைகள்? எல்லாம்.. எல்லாம்...என்னவாகியிருக்கும்.

போரில் தப்பிய 13 மிருகங்கள்

PC: ROGER ALLEN

பெரும்பாலான அந்த மிருகங்கள் ஷெல்லடிகளுக்குப் பலியாகின. திடீரென பெரும் சத்தத்தோடு விழுந்த குண்டு அந்த மிருகத்தை பல நூறு துண்டுகளாகப் பிய்த்து எறிந்திருக்கும். அந்தத் துண்டுகளில் சில அந்த கூண்டின் கம்பிகளில் சிக்கிக் கொண்டிருக்கும். இந்தக் குண்டுகளிலிருந்து தப்பிப் பிழைத்த மிருகங்கள், ஆழமான மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கும். நாள்கணக்கில் உணவும், தண்ணீரும் இல்லாமல் அவை என்ன செய்ய முடியும்? காடாக இருந்தால் இரை தேடிப் போயிருக்கும். அந்த இரும்புக் கூண்டுகளை உடைக்கும் திராணி அந்த மிருகங்களுக்கு கிடையாதே? பசியிலும், பட்டினியிலும், தாகத்திலும் பல மிருகங்கள் செத்து மடிந்தன. 

300க்கும் அதிகமான மிருகங்கள் இருந்த அந்த மிருகக்காட்சி சாலையில் இந்த 6 ஆண்டுகளாகத் தாக்குப் பிடித்து நின்றவை மொத்தம் 13 விலங்குகள். அதுவும், அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் அந்த மிருகங்கள் மீது பேரன்பு கொண்டவர். தான் தேடி சேகரித்த உணவை அவைகளுக்கும் பகிர்ந்தளித்தார். அவரைப் போல இன்னும் சிலரும், தங்கள் உணவைப் பகிர்ந்தளித்தார்கள். இப்படியாக, கிடைத்த உணவைக் கொண்டு உயிர் பிழைத்து நின்றன அந்த 13 மிருகங்கள். 5 சிங்கங்கள், 2 புலிகள், 2 ஹைனாக்கள், 2 கரடிகள், 2 ஹஸ்கி வகை நாய்கள். 

இத்தனை ஆண்டுகளாக இந்த மிருகங்களுக்கு உணவளித்த அந்த மனிதர் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. 

6 ஆண்டுகளைக் கடந்து உயிர் பிழைத்துக் கிடந்த அந்த மிருகங்களை "ஃபோர் பாவ்ஸ்" (Four Paws) எனும் மிருகங்களுக்கான தன்னார்வ அமைப்பு மீட்க முடிவு செய்தது. கடந்த ஜூலையில் அதற்கான முயற்சிகளில் இறங்கின. அலெப்போவிலிருந்து காப்பாற்றி துருக்கி வந்து, அங்கிருந்து ஜோர்டானில் இருக்கும் எல் மவா (El Ma'Wa) எனும் மிருகக்காட்சிப் பூங்காவுக்குக் கொண்டு வருவதாகத் திட்டம்.

போரில் தப்பிய 13 மிருகங்கள்

வழியில் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. இரண்டு லாரிகளில் கூண்டுகளில் அடைக்கப்பட்ட மிருகங்களோடு, இரண்டு நாள்கள் பயணித்து துருக்கி எல்லைக்குள் நுழைந்தனர் அந்த அமைப்பின் தன்னார்வலர்கள். இடையில் மிருகங்கள் எங்காவது சத்தம் போட்டிருந்தால் கூட மொத்தமாக மாட்டியிருப்பார்கள். ஆனால், ஒரு வழியாக தப்பி துருக்கிக்கு வந்தார்கள். அங்கு அவர்கள் மூன்று வாரங்கள் தங்கியிருக்க துருக்கி அரசாங்கம் அனுமதியளித்தது. அங்கு தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த சம்பவங்கள் நடந்தது. இனி அங்கிருந்தே தொடங்கலாம்...

போரில் தப்பிய 13 மிருகங்கள்

சிரிய எல்லையைக் கடக்கும் வாகனம்

"டாக்டர்... துருக்கி அரசாங்கம் நமக்குக் கொடுத்த 3 வாரகாலம் முடிந்துவிட்டது. இப்ப என்ன செய்வது?"

"இனிமேல் இங்கிருப்பதில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். சிங்கத்துக்கு சில ஊசிகளைப் போட்டு, மருந்துகளைக் கொடுக்கிறேன். நாம் கிளம்பலாம். வழியிலேயே அதுக்கு, வலி எடுத்தால் நிறுத்தி பிரசவம் பார்த்துவிடலாம். அதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்."

13 மிருகங்களையும் ஒரே சமயத்தில் காப்பாற்றிக் கொண்டு வர முடியவில்லை. முதலில் 9, பின் அடுத்த வாரம் 4 என இரண்டாகப் பிரித்து அவைகளைக் காப்பாற்றிக் கொண்டுவந்தனர். 

அந்தக் குழு அடுத்தப் பயணத்துக்குத் தயாரானது. ஜோர்டான் எல்லையில் நுழையும்போது அவர்களை, ஜோர்டானின் இளவரசி அலியா வரவேற்றார். மிருகங்கள் அனைத்தும் அந்த மிருகக்காட்சி பூங்காவில் விடப்பட்டன. சரியாக அங்கு அடைந்த ஒரு நாளில் சிங்கத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 

போரில் தப்பிய 13 மிருகங்கள்

பிறந்து ஒரு மாதத்தில் இறந்த சிங்கக்குட்டி PC: ROGER ALLEN

ஓர் அழகான பெண் குட்டியை ஈன்றது. நல்ல உணவும், மருத்துவம், தண்ணீர் அமைதியான சூழல் என அந்த 13+1 மிருகங்களும் மீண்டும் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளன. 

மனிதர்களின் அரசியல் புரியா அந்த மிருகங்கள், உடலளவில் ஓரளவுக்கு தேறிவந்தாலும் கூட, மன அழுத்தத்திலிருந்து விடுபட இன்னும் பல காலங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன அந்த 12 மிருகங்களும்...

அந்த ஒரேயொரு சிங்கம் மட்டும் இன்னும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அது ஈன்றெடுத்த அந்தக் குட்டி எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாக ஒரே மாதத்தில் இறந்து விட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்